சென்னையில் பிறந்து வளர்ந்தவர் நடிகர் லிவிங்ஸ்டன். இவரின் இயற்பெயர் பிலிப் லிவிங்ஸ்டன் ஜோன்ஸ் என்பதாகும். இவர் தமிழ் சினிமாவில் பணிபுரியும் நடிகர, நகைச்சுவை, துணை மற்றும் குணச்சித்திர நடிகர் ஆவார். இது மட்டுமல்லாது திரைக்கதை எழுத்தாளராகவும் பணிபுரிந்துள்ளார். சினிமா துறையில் நுழைந்ததும் தனது பெயரை ராஜா என வைத்திருந்த லிவிங்ஸ்டன் சிறிது காலத்திற்குப் பிறகு தனது சொந்த பெயரையே வைத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரம்பத்தில் ஜி. எம். குமார் உடன் இணைந்து 1985 ஆம் ஆண்டு ‘கன்னி ராசி’ மற்றும் ‘காக்கி சட்டை’ ஆகிய பபடங்களுக்கு திரைக்கதை எழுதினார். பின்னர் 1988 ஆம் ஆண்டு ‘பூந்தோட்ட காவல்காரன்’ திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் ‘நியாய தராசு’, ‘பாட்டுக்கு நான் அடிமை’, ‘எதிர்காற்று’, ‘இரும்பு பூக்கள்’ போன்ற சிறிய பட்ஜெட் படங்களில் நடித்து வந்தார் லிவிங்ஸ்டன்.
1990 மற்றும் 2000 களின் முற்பகுதியில் சினிமா துறையில் ஏறு முகத்தை சந்தித்த லிவிங்ஸ்டன் நிறைய பட வாய்ப்புகளை பெற்றார். ‘கேப்டன் பிரபாகரன்’, ‘அமரன்’, ‘பொண்டாட்டியே தெய்வம்’, ‘சுந்தர புருஷன்’, ‘சொல்லாமலே’, ‘பூமகள் ஊர்வலம்’, ‘சுயம்வரம்’, ‘வாலி’, ‘விரலுக்கு ஏத்த வீக்கம்’, ‘என் புருஷன் குழந்தை மாதிரி’ போன்ற வெற்றித் திரைப்படங்களில் நடித்து முன்னணி நாயகனாக வலம் வந்தார் லிவிங்ஸ்டன்.
‘கேப்டன் பிரபாகரன்’, ‘சுந்தர புருஷன்’, ‘சொல்லாமலே’ ஆகிய படங்கள் லிவிங்ஸ்டனின் கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி அவரை பிரபலப்படுத்தியது. 2000 களின் நடுப்பகுதியில் வில்லன் கதாபாத்திரங்கள், கேமியோ மற்றும் சிறப்பு கதாபாத்திரங்களில் நடித்தார். தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் ரசிகர்களை பெற்றவர் லிவிங்ஸ்டன்.
தற்போது ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட லிவிங்ஸ்டன் தனது சினிமா வாழ்க்கையை பற்றி பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியது என்னவென்றால் சிறுவயதில் நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டோம். அதனால் என்னுடைய முதல் படத்தில் நடித்து முடித்த பின்பு வாங்கிய சம்பளத்தை சில்லறை காசுகளாகவும், பத்து ரூபாய் இருபது ரூபாய் நோட்டுகளாகவும் மாற்றிக் கொண்டேன். அதை ஒரு மூட்டையில் எடுத்துக் கொண்டு என் அம்மாவின் மீது அந்த பணத்தை எல்லாம் கொட்டி அவர்களை அழகு பார்த்தேன் என்று பகிர்ந்துள்ளார் லிவிங்ஸ்டன்.