‘மக்கள் நாயகன்’ என்று ரசிகர்கள் அனைவரும் செல்லமாக அழைக்கும் நடிகர் ராமராஜன். தமிழ்த்திரை உலகில் தனக்கென தனி ஸ்டைலுடன் நடித்து ரசிகர்களின் அன்பைப் பெற்றவர். இவர் தனது வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத சம்பவங்கள் பற்றி இவ்வாறு சொல்கிறார். வாங்க என்னன்னு பார்ப்போம்.
மெட்ராஸ்சுக்கு வர்ற வழியே எனக்குத் தெரியாது. எங்கே இருக்குன்னே தெரியாது. எல்ஐசி பில்டிங் பார்க்கணும். அப்படி இருந்த நான் ஊருல தலைவரோட (எம்ஜிஆர்) பொதுக்கூட்டம் பார்ப்பேன். சைடுல நிற்பேன். தொட முடியாது. மேடைக்கு ஏறும்போது தொடுவேன். போலீஸ் கையால அடி வாங்கிருக்கேன்.
ஆனா அன்னைக்கு வீட்டுல அவரு கை மேல என் கை இப்படி இருந்துச்சு. அதை விட பெரிய பாக்கியம் வாழ்க்கையில ஒண்ணுமே இல்ல. ஏன்னா ஊருல பார்த்த வியந்த ஆளு. எம்ஜிஆரை எனக்கு ரொம்ப பிடிக்கும். இவரு வந்து என்னோட கல்யாணத்தை நடத்தி வச்சது வாழ்க்கையில மறக்கவே முடியாது.
அதே மாதிரி கிரசன்ட் பார்க்ல ஒரு சந்துக்குள்ள வந்தாங்க அம்மா ஜெயலலிதா. எனக்கு அப்போ ட்வின்ஸ் பிறந்திருந்தது. அங்கே வந்து குழந்தைகளுக்கு செயின் போட்டு வாழ்த்திட்டுப் போனாங்க. அந்த ரெண்டு விஷயத்தையும் என்னால மறக்கவே முடியாது.
எம்ஜிஆர், ஜெயலலிதா, நாகேஷ்னு போட்டாச்சுன்னா படத்தை அப்படிப் பார்ப்பேன். அப்படி இருக்கும் போது இதெல்லாம் நடக்குமான்னு கனவுல கூட நினைக்கல. அந்த வகையில எம்ஜிஆர் என் கல்யாணத்துக்கு வந்ததும், ஜெயலலிதா அம்மா சந்துக்குள்ள வந்து என் குழந்தைகளை வாழ்த்தியது எல்லாம் காட் கிரேஸ் தான்.
எனக்கு படிப்பே வராது. ஆனா பிள்ளைங்க ரெண்டும் நல்லா படிக்கும். படிச்சி டாக்டர், என்ஜினீயரா ஆகணும்டான்னு பிள்ளைங்க கிட்ட சொன்னேன். என்னப்பா எல்லாரும் இந்த ரெண்டையும் தான் படிக்கிறாங்க. நாங்க அப்படி எல்லாம் ஆக முடியாதுன்னு சொல்லிட்டாங்க. என் பையன் சயின்டிஸ்டா ஆகணும்னு சொன்னான். என் பொண்ணு ஐஏஎஸ் ஆகணும்னு சொன்னா. ஆனா வக்கீலுக்குப் படிச்சிட்டா.
என் பையன் சயின்டிஸ்டா ஆகணும்னு சொன்ன உடனே டெல்லிக்கு நான் போயிட்டு வரும் போது டாக்டர் அப்துல் கலாம் ஐயா என் பக்கத்து சீட்ல இருந்தாரு. ஐயா, வணக்கம்யா. நான் ராமராஜன். என் பையன் உங்க ஃபேன்னு சொல்லி அவருக்கிட்ட ஆட்டோகிராப் வாங்கிக் கொடுத்தேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.