காமெடி நடிகர் சொன்ன வார்த்தை.. வீட்டை விட்டே ஓடி உலகமகா பொய் சொன்ன சிவாஜி கணேசன்..

By Ajith V

Published:

எந்த கதாபாத்திரம் தான் ஏற்று நடித்தாலும் அதில் ஒவ்வொரு வித்தியாசத்தையும், மெனக்கடலையும் அதிகம் காட்டி அப்படியே வாழ்ந்ததுடன் தமிழ் சினிமாவின் ஒரு முக்கிய ஆளுமையாக மாறியிருந்தவர் தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். ஆரம்ப காலகட்டத்தில் நாடகத்தில் நடிக்க தொடங்கி பின்னர் சினிமாவில் பராசக்தி மூலம் அறிமுகமாகி தனது இறப்பு வரையிலும் சினிமாவுக்காக என்னென்ன செய்ய முடியும் என்பது பற்றி தான் யோசித்து காலமானார்.

சினிமாவை மட்டுமே உலகமாய் பார்த்த சிவாஜி கணேசன் மறைந்தாலும் அவரது திரைப்படங்கள் மற்றும் படைப்புகள் என்றென்றைக்கும் நிலைத்து நிற்கக் கூடிய வகையில் அமைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் தன்னுடைய திரை பயணத்தில் சிவாஜி ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை என்று கூட சொல்லலாம். அந்த அளவுக்கு மிச்சம் வைக்காமல் ஏறக்குறைய அனைத்து கதாபாத்திரங்களிலும் நடித்து முடித்து விட்டார்.

இந்த நிலையில் நடிகர் திலகம் என பெயர் எடுத்த சிவாஜி கணேசனுக்கு நடிப்பு ஆர்வத்தை தூண்ட முக்கிய காரணமாக இருந்த நபர் பற்றியும் அதன் பின்னால் இருந்த சம்பவம் ஒன்றை பற்றியும் தான் தற்போது பார்க்கப் போகிறோம். தமிழ் சினிமாவின் காமெடி மற்றும் குணச்சித்திர நடிகராக இருந்தவர் தான் காக்கா ராதாகிருஷ்ணன். திருச்சியில் சிவாஜி இருந்தபோது அவரது பக்கத்து வீட்டில் தான் காக்கா ராதாகிருஷ்ணன் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

காக்கா ராதாகிருஷ்ணனுக்கு நாடகங்கள் நடிக்க ஆர்வம் இருந்த நிலையில் தியாகராஜ பாகவதரை சந்தித்து அதற்கான வாய்ப்பையும் பெற்றிருந்தார். யதார்த்தம் பொன்னுசாமி என்ற நாடக குழுவில் சேர்ந்து நடிக்க தொடங்கிய காக்கா ராதாகிருஷ்ணன், ஊருக்கு வரும்போதெல்லாம் நடிகர் சிவாஜி கணேசனிடம் தனது நடிப்பை பற்றியும் அந்த அனுபவம் பற்றியும் பேசுவாராம்.

அவரது பேச்சைக் கேட்டு சிவாஜிக்கும் நடிகராக வேண்டும் என்ற ஆசையும் உருவாகியுள்ளது. அப்படி ஒரு சூழலில் தான் யாரும் எதிர்பாராத முடிவு ஒன்றையும் சிவாஜி கணேசன் எடுத்துள்ளார். யதார்த்தம் பொன்னுசாமி என்ற நாடக குழு திண்டுக்கல்லில் செயல்பட்டு வந்த நிலையில் தான், அதில் சேர வேண்டும் என முடிவெடுத்த சிவாஜி இரவோடு இரவாக வீட்டை விட்டு ஓடியதுடன் மட்டுமில்லாமல் அந்த குழுவிற்கு சென்று தான் அனாதை என்றும் பொய் சொல்லி நடிக்க வாய்ப்பு பெற்றுள்ளார்.

அப்படி ஒரு ஆர்வத்தின் காரணமாக தான் நாடகங்கள் நடித்து பின்னாளில் பராசக்தி என்ற திரைப்படம் மூலம் நடிகராகவும் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். மேலும் அவர் முன்னணி நடிகராக மாறுவதற்கு முக்கிய காரணமாக இருந்த காக்கா ராதாகிருஷ்ணனும் சிவாஜி கணேசனின் பல திரைப்படங்களில் நல்ல கதாபாத்திரங்கள் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிலும் குறிப்பாக தேவர் மகன் படத்தில் சிவாஜி கணேசனின் அண்ணனாகவும் காக்கா ராதகிருஷ்ணன் மிக வித்தியாசமான ஒரு நடிப்பையும் வெளிப்படுத்தி இருப்பார்.