குணா குகையைக் கமல் கண்டுபிடித்தது இப்படித் தான்…! பட்ட பாட்டையே படமா எடுத்துருக்கலாம்..!

By Sankar Velu

Published:

கமல் நடித்த குணா படம் இப்ப ட்ரெண்டாகி வருகிறது. காரணம் மஞ்சுமல் பாய்ஸ். அந்தப் படத்தில் எடுத்த குணா குகையை இவர்களும் தன் கதைக்களத்தில் பயன்படுத்தி இருப்பதால் படம் வசூலை வாரி இறைத்து வருகிறது. இந்தக் குகையைக் கமல்; கண்டு பிடித்தது எப்படின்னு சுவாரசியம் குறையாமல் சொல்கிறார் குணா பட உதவி இயக்குனர் ராசி அழகப்பன். என்ன சொல்கிறார்னு பார்க்கலாமா…

கமல் எப்போதுமே ஒரே டிராக்கில் போக மாட்டார். ஒரு மைக்கேல் மதன காமராஜன்னு காமெடி படம் நடிச்சா அடுத்ததா ஒரு சீரியஸ் படம் நடிப்பாரு. அப்படி வந்தது தான் இந்த குணா படம்.

மனிதர்களின் காதல் உணர்வைக் கொண்டாடும் விதத்தில் எடுக்கப்பட்ட படம். கடவுள் மேல வைக்கிற பாசம் மாதிரி முரட்டுக்காதல் இருக்கணும் என அனந்து சொல்கிறார். படத்திற்கான கதை தயாரானதும் எங்கே எடுக்கலாம்னு படக்குழுவினர் யோசிக்கிறாங்க.

குளிர் பிரதேசம் சரியா வரும். அது கொடைக்கானல்னு முடிவு பண்ணியாச்சு. ஏன்னா சித்த பிரமையில் உள்ளவர்களை குளிர்பிரதேசத்தில் கொண்டு விட்டால் மூளை சூடு இல்லாமல் ஹேப்பியா இருப்பாங்களாம். அதனால குளிர் பிரதேசத்துல எடுப்பதாக முடிவானது. அப்போ ஜீப் டிரைவர் எங்களை லொகேஷனுக்கு அழைத்துச் செல்கிறார்.

ஒவ்வொரு இடத்தையும் பார்வையிடும் இயக்குனர் சந்தானபாரதி அங்க சூட் வச்சிக்கலாம்… இங்க வச்சிக்கலாம்னு சொல்றார். அப்புறம் ஒரு இடத்துக்கிட்ட வந்ததும், ஜீப் டிரைவர், சார் சார்… அங்க போகாதீங்க. தவறி விழுந்தீங்கன்னா ஒரு எலும்பு கூட தேறாதுன்னு சொல்றார். சரி வாங்க சார். வேற இடம் போலாம்னு டைரக்டர் சொல்றாரு. கமல் அப்போ சொல்றார்.

Guna cave
Guna cave

இருப்பா… அவன் தேறாதுன்னு சொல்றான்… நாம அப்படின்னா பார்க்கணுமேன்னு சொல்றார். கமலைப் பொறுத்தவரை, ஒண்ணு முடியாதுன்னு சொன்னா அதை முடிச்சிக் காட்டுவாரு. அது அவரு பிளட்லயே ஊறுனது. எல்லாரும் சார் சார் வேணாம்னு சொல்றாங்க. இருப்பா…ன்னு அங்க இங்க தேடி ஒரு கல்லை எடுக்கறாரு. அதைத் தூக்கி அந்தப் பள்ளத்துல வீசுறாரு. ஒண்ணு, ரெண்டுன்னு எண்ண ஆரம்பிக்கிறாரு.

அந்தக் கல்லு அங்க இங்கன்னு தொட்டு தொட்டு டங்னு தரையில விழறது. அப்போ 25 வரைக்கும் எண்ணி முடிக்கிறாரு. கல் விழுறதுக்கு இவ்வளவு செகண்ட் ஆகியிருக்கு. ஆனா அது தரையைத் தொட்டுடுச்சு. அது தொட்ட இடத்துக்குப் போயி நாம சூட்டிங் எடுக்கலாம்னு சொல்றாரு.

படம் எடுக்கச் சொன்னா இவரு உயிரைப் பணயம் வைக்கச் சொல்றாரேன்னு பயப்படுறாங்க. எல்லோரும் இங்க யாருப்பா போவாங்கறாங்க. நான் போறேன்னு ஒரு குச்சியைக் கையில் எடுத்தபடி அதைத் தட்டி தட்டி செல்கிறார். அப்படிப் போகும் போது கல், பாறைன்னு தாண்டி உள்ளே போனா ஒரே இருட்டு.

இந்த இடத்துல தான் சூட்டிங்னு இடத்தை பிக்ஸ் பண்றாரு கமல். மறுநாள் சூட்டிங்னதும் எல்லாரும் தயாராகி காலையிலே போறாங்க. அங்கே சூரிய வெளிச்சம்படுது. கொஞ்ச தூரம் உள்ளே போனதும் சூரிய வெளிச்சம் மறைஞ்சிடுது. முதல்ல கமல் தான் போனாரு. பின்னாடி ஒவ்வொருத்தரா போனோம். அந்த இடத்துல தான் கண்மணி அன்போட பாட்டு எடுத்தோம்.

Guna cave
Guna cave

படத்துக்காக 40 நாள் அங்கு சூட்டிங் நடந்தது. ஸ்டண்ட் மாஸ்டர் விக்ரம் தர்மா அந்த 40 நாளும் இருக்கணும்னு சொல்லிட்டாரு. படத்துல பெரிய அளவில் பைட்லாம் கிடையாது. ஆனா படம் எடுக்க அவங்க உதவி தேவை. ரெண்டு பாறைக்கு இடையில பிரிட்ஜ் மாதிரி ரெடி பண்ணி அதுல பெரிய தாம்புக்கயிற்றை போட்டு கமல் கீழே இறங்க ஆரம்பிச்சாரு. கீழே போனதும் நான் வந்துட்டேன்.

எல்லாரும் தைரியமா இறங்கி வரலாம்னு சொல்ல, இவன் என்னடா மரணத்தோட சவால் விடுறான்கறாரு டைரக்டரு. நான் கடைசில இறங்குறேன். எல்லாரும் இறங்குங்கன்னு சொல்றாரு. படம் எடுத்ததை விட அதை எடுக்கப்பட்ட பாடை படமா எடுத்துருக்கலாம்.

இன்னும் பிரமாதமா வந்துருக்கும். காலைல 8 மணிக்கு உள்ள இறங்கிட்டா 3 மணிக்குள்ள சூட்டிங் எடுத்தாகணும். அப்புறம் நேச்சர் லைட் இருக்காது. 10, 12 பேரு தான் உள்ளே இறங்கினோம். பாம்பேல இருந்து ஸ்டெடி கேம் கமல் வாங்கி வந்தாரு. வெறும் சிக்கன், பிஸ்கட், தண்ணீர் தான் எங்களுக்கு சாப்பாடு.

எடுத்துப் பல வருஷம் கழிச்சி அந்தக் குகைக்கு குணா குகைன்னு போர்டு போட்டுருக்காங்க. அதே மாதிரி கொச்சின்ல நடந்த உண்மை சம்பவத்தை மஞ்சுமல் பாய்ஸ் படத்துல கிரியேட் பண்ணி பண்ணிருக்காங்க. அது பெரிய விஷயம் தான் என்கிறார் இயக்குனர் ராசி அழகப்பன்.