தமிழ்த்திரை உலகில் பெரிய பெரிய நடிகர்களுக்கு அதாவது முன்னணி நடிகர்களுக்கு அதிக சம்பளம் கொடுப்பதால் படத்தயாரிப்பாளர்களுக்கான செலவு பட்ஜெட்டையும் தாண்டி சென்று விடுகிறது. அதனால் படம் வெளியாவதிலும் காலதாமதம் ஆகிறது. கஷ்டப்பட்டு எடுத்த படம் ஓடவில்லை என்றால் பெருத்த நஷ்டத்தையும் அடைகின்றனர். இது அந்தக் காலத்தில் எப்படி இருந்தது? இப்போது எப்படி உள்ளது என்று தயாரிப்பு தரப்பிலிருந்து பார்க்கலாம்.
அதிகமான சம்பளம் என்பது கோலிவுட்டில் தயாரிப்பாளர்களிடம் இருந்து பணம் பறிப்பதாக மாறி விட்டது. ரஜினி, விஜய், அஜித் போன்ற சூப்பர் ஸ்டார்களை நடிக்க வைப்பதற்கு அதிக தொகை கொடுக்க வேண்டும். அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆர் ஒரு படத்திற்கு 5 முதல் 8 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வாங்கினார்.
அந்த நேரத்தில் லாபகரமாக கருதப்பட்டாலும், எம்ஜிஆரின் வருமானம் படத்தின் பட்ஜெட்டில் வெறும் 16 முதல் 20 சதவீதம் வரை மட்டுமே இருந்தது. உதாரணமாக, அவரது அன்பே வா (1966) திரைப்படம் 30 லட்சம் பட்ஜெட்டைக் கொண்டிருந்தது.
சிவாஜி புகழின் உச்சத்தில் இருந்தபோது, தமிழ் சினிமாவில் அவருக்கு அடுத்தபடியாக இருந்ததால் எம்.ஜி.ஆருக்கு நிகரான தொகையைப் பெற்றார். தமிழ் சினிமாவின் பொற்காலம் இது. படையப்பா (1999) படத்தில் நடித்ததற்காக சிவாஜிக்கு ரூ.1 கோடி சம்பளம் கொடுத்துள்ளார்கள்.

இதை அறிந்த சிவாஜி வியந்து போனதாக செய்திகள் உள்ளன. அந்தக் காலத்தில் தயாரிப்பாளர்கள் முன்னணி நடிகராக இருந்த எம்ஜிஆருக்கு ரூ.8 லட்சம் வரையும், சிவாஜிக்கு 5 முதல் 6 லட்சம் ரூபாய் வரையும் கொடுத்துள்ளார்கள்.
சூப்பர் ஸ்டாருக்கு 16 முதல் 20 சதவிகிதம் கொடுத்த பிறகு, தயாரிப்பாளர்கள் 17 முதல் 20 சதவிகிதம் வரை லாபம் ஈட்டலாம். இதற்கு உதாரணம் 1958ல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தயாரித்து இயக்கி நடித்த நாடோடி மன்னன்.

இதற்கு நேர்மாறாக, இன்று மிகவும் பிரபல நடிகரான விஜய், பீஸ்ட் (2022) படத்திற்காக ரூ.100 கோடி என்ற அளவில் அதிகமான சம்பளம் பெற்றார். அதே நேரத்தில் படத்தின் மொத்த பட்ஜெட்டே 150 கோடிகள் தான். அதனால், நடைமுறையில் விஜய் சம்பளம் கொடுத்தது போக மீதமுள்ள ரூ.50 கோடியில் படம் எடுக்கப்பட்டது.
ரஜினி, விஜய் சம்பளத்தை உயர்த்தும் போது அஜீத் வலிமை படத்திற்காக சம்பளத்தை உயர்த்த வேண்டாம் என்று ரூ.70 கோடி மட்டுமே வாங்கியதாகவும் தகவல் உண்டு. ஆனால் படத்தின் ஆரம்பத்தில் 55 கோடிகளைப் பேசியுள்ளார் அஜீத். படப்பிடிப்பு முடிய காலதாமதம் ஏற்பட்டதால் 70 கோடி வரை பேசினார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தின் மொத்த பட்ஜெட்டே 150 கோடிகள் தான். படம் எதிர்பார்த்த அளவு வெற்றியைப் பெறவில்லை.

தற்போதைய முன்னணி நடிகர்கள் பட்ஜெட்டில் 66 சதவீதத்தை சம்பளமாக பெற்று விடுகிறார்கள். இதனால் தயாரிப்பாளர்கள் ஆழ்ந்த நிதி ஓட்டையில் உள்ளனர். விஜய் ஒவ்வொரு படத்திற்கும் ரூ.10 கோடி சம்பளத்தை உயர்த்துகிறார். வாரிசுக்கு (2023) அவரது சம்பளம் 110 கோடி, லியோவுக்கு ரூ.120 கோடி வழங்கப்பட்டது.
இந்த நடைமுறை தொழில்துறையில் பல முன்னணி நட்சத்திரங்களிடையே பரவலாக உள்ளது. இது தொடர்ந்தால், நல்ல திரையரங்குகளில் கூட, படம் அதிக நாள்கள் ஓடுவதில் சிரமத்தை சந்திக்கக்கூடும். படத்தின் பட்ஜெட்டை மீட்டெடுக்க முடியாத நிலையும் ஏற்படலாம்.
மற்ற தென்னிந்திய சினிமா இண்டஸ்ட்ரிகளில், அங்குள்ள நட்சத்திரங்கள் நல்ல சம்பளம் வாங்கினாலும், பட்ஜெட் தயாரிப்பாளர்களின் கையைக் கடிப்பதில்லை. கோலிவுட்டில் தற்போதைய நடிகர்கள் பெறும் சம்பளம் தயாரிப்பாளர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இதனால் தான் அவ்வப்போது குறைந்த பட்ஜெட் படங்களை நோக்கி தயாரிப்பாளர்கள் படையெடுக்கின்றனர்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.


