யாருய்யா இந்த சீன் எழுதுனது.. கார்த்திக்கின் செண்டிமெண்ட் காட்சியை பார்த்து டென்சன் ஆன கவுண்டமணி..

By Ajith V

Published:

தமிழ் சினிமாவில் திரையில் மட்டுமில்லாமல் நிஜத்திலும் கூட நிமிடத்திற்கு நிமிடம் கவுண்டர் கொடுத்து கொண்டிருந்தவர் தான் கவுண்டமணி. ஒரு காலத்தில், கவுண்டமணி – செந்தில் காம்போவில் உருவான அனைத்து காமெடிகளுமே மிகப் பெரிய அளவில் ஹிட்டாகி இருந்ததுடன் காலம் கடந்து இப்போதும் நிலைத்து நிற்கும் வகையில் அமைந்துள்ளது.

அந்த சமயத்தில் மக்கள் மத்தியில் பரவலாக இருந்த பல்வேறு விஷயங்களை தனது காமெடிகள் மூலம் அடித்து நொறுக்கி இருந்த கவுண்டமணி, அதற்கு எதிர்மறையான கருத்துக்களை மிக நகைச்சுவையாக மக்களிடம் சேரும் வகையிலும் உருவாக்கி இருந்தார். திரைப்படங்களில் எப்படி அவர் காமெடி காட்சிகளில் வசனம் பேசுவாரோ அதே போல நிஜ வாழ்க்கையிலும் கூட பிரபலங்களோ அல்லது வேறு யாரிடமோ தான் பேசும் போது வார்த்தைக்கு வார்த்தை நகைச்சுவையாக தான் கலாய்த்தபடி பேசிக் கொண்டிருப்பார்.

தற்போது திரைப்படங்கள் நடிப்பதை கவுண்டமணி குறைத்துக் கொண்டாலும் சினிமாவைப் பற்றிய பல மேடைகளில் அவர் பேசியிருந்த விஷயங்கள் என்றுமே ரசிகர்கள் மத்தியில் எவர்க்ரீன் தான். சில ஆண்டுகளுக்கு முன்பாக சினிமா நிகழ்ச்சி மேடையில் பேசியிருந்த கவுண்டமணி, “இன்றெல்லாம் திரைப்படங்கள் பார்க்கும் ஆட்களை விட நடிக்கும் ஆட்கள் அதிகமாக இருக்கிறார்கள்” என போகிற போக்கில் தமிழ் சினிமாவை காமெடியாக விமர்சித்திருப்பார்.

இப்படி கவுண்டமணி வாய் திறந்து என்ன பேசினாலும் அது சிரிப்பலையாக தான் இருக்கும் என்ற நிலையில் தான் கண்ணன் வருவான் என்ற திரைப்படத்தில் இருந்த சென்டிமென்ட் காட்சியை பார்த்துவிட்டு கவுண்டமணி சொன்ன விஷயம் தற்போது அதிக கவனம் பெற்று வருகிறது.

இயக்குனர் சுந்தர் சி யின் அசிஸ்டெண்டாக இருந்து பிரபல இயக்குனராக மாறியவர் தான் சுராஜ். சுந்தர் சி இயக்கத்தில் உருவான ‘கண்ணன் வருவான்’ என்ற படத்தில் கார்த்திக், திவ்யா உன்னி, மனோரமா, கவுண்டமணி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் அசிஸ்டன்ட் இயக்குனராக சுராஜ் பணியாற்றி இருந்தார்.

அப்போது இந்த படத்தில் வரும் ஒரு காட்சியின் படி வெளிநாட்டிலிருந்து நடிகர் கார்த்திக் வரும் சமயத்தில் அவருக்காக சிக்கன், மட்டன் என நான் வெஜ்ஜை விதவிதமாக தயார் செய்து வைத்திருப்பார் கவுண்டமணி. அதேவேளையில் அவரது ஆச்சி மனோரமா பால் சோறு தயார் செய்து வைக்க வெளிநாட்டில் இருந்து வந்து இறங்கும் கார்த்திக், கவுண்டமணியின் உணவுகளை நிராகரித்துவிட்டு மனோரமாவின் பால் சோறை விரும்பி உண்பது போல இந்த காட்சி இடம் பெற்றிருக்கும்.

இதனை சுந்தர் சி படமாக்கிய அதே நாள் இரவில் சுராஜ்ஜை சந்தித்த கவுண்டமணி, “எங்க ஊர்ல நாய்க்கு தான்யா பால் சோறு வைப்பாங்க. என்னய்யா சப்ஜெக்ட் எடுக்குறீங்க. உங்களுக்கு தேவையில்லாத எமோஷன் செண்டிமெண்ட் எல்லாம் எடுத்துட்டு இருக்கீங்க. நான் காமெடி படம்னு உள்ள வந்தா, என்னையா இப்படி பண்ணிட்டு இருக்கீங்க. சென்டிமென்ட் படமா இருக்கும் போலயே. யாரு இந்த படத்துக்கு கதை, வசனம் எழுதினது” என டென்ஷன் கலந்து நகைச்சுவையாக பேசியதாக சுராஜ் ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.