கேங்கர்ஸ் விமர்சனம்: மீண்டும் வொர்க்கவுட் ஆன சுந்தர் சி – வடிவேலு கூட்டணி!

Gangers Review: நீண்ட இடைவெளிக்குப்பின் சுந்தர் சி, வடிவேலு கூட்டணியில் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் கேங்கர்ஸ். தமிழ் சினிமாவின் தலைவலியாக சில வருடமாக உருவெடுத்து சுற்று சுற்றி வரும் தலைவலியான கேங்ஸ்டர் படங்களுக்கு மத்தியில்…

gangers review

Gangers Review: நீண்ட இடைவெளிக்குப்பின் சுந்தர் சி, வடிவேலு கூட்டணியில் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் கேங்கர்ஸ்.

தமிழ் சினிமாவின் தலைவலியாக சில வருடமாக உருவெடுத்து சுற்று சுற்றி வரும் தலைவலியான கேங்ஸ்டர் படங்களுக்கு மத்தியில் இந்த கேங்கர்ஸ் திரைப்படம் வெளியாகி ஆஹா என சபாஷ் போட வைத்துள்ளது.

வடிவேலு நடித்து சில மாதங்களுக்கு முன் வந்த நாய்கள் ஜாக்கிரதை அவருக்கு ரீ என்ட்ரியாக அமையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அப்படம் தோல்வியடைந்தது. சுந்தர் சியின் கூட்டணியில் உள்ள சுராஜ் இயக்கிய படம் தான் அது இருந்தாலும் அந்த படம் பெரிய வெற்றியை அடையவில்லை.

கேங்கர்ஸ் படத்தில் நீண்ட வருடங்களுக்கு பிறகு சுந்தர் சி இயக்கத்தில் வடிவேலு நடித்திருக்கிறார். இவர்களின் காம்பினேஷன் அள்ளும் என்பதற்கு ஏற்ப நிச்சயமாக எல்லோர் மனதையும் அள்ளுகிறது.

வடிவேலுக்குப் பிறகு சந்தானம், யோகி பாபு, சூரி போன்றவர்களை வைத்து ஒரு சில படங்களில் பணியாற்றினார் சுந்தர் சி. இதில் சந்தானம் மட்டும் ஓரளவு கை கொடுத்தார். மற்ற காமெடியன்கள் வடிவேலு அளவுக்கு கை கொடுக்கவில்லை. இந்த சூழ்நிலையில் நீண்ட வருடங்களுக்கு பிறகு சுந்தர் சி வடிவேல் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

ஒரு பள்ளியில் சுந்தர் சி ஆசிரியராக சேர்வதற்கு வருகிறார். அந்தப் பள்ளியில் ஏற்கனவே உடற்கல்வி ஆசிரியராக வடிவேலு இருக்கிறார். அந்தப் பள்ளியில் ஆசிரியராக கேத்தரின் தெரசா வேலை செய்கிறார். சுந்தர் சி மற்றும் உடற்கல்வி ஆசிரியராக இருக்கும் வடிவேலு காம்போ வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது.

அந்தப் பள்ளியில் வேலை செய்யும் கேத்தரின் தெரசா அந்த பள்ளியில் சட்டத்திற்கு புறம்பாக சில செயல்கள் நடைபெறுவதை எதிர்க்கிறார். ஒரு பள்ளி மாணவி காணாமல் போகிறார். ஒரு மாணவன் மேலிருந்து கீழே விழுகிறான். இதையெல்லாம் செய்வது அந்த ஊரில் சேர்மனாக இருக்கும் அருள்தாஸ் மற்றும் மைம் கோபி என தெரிய வருகிறது. அவர்கள் அந்த ஊரின் சேர்மனாக இருந்து கொண்டு பள்ளியை நிர்வகிக்கிறேன் என்ற பெயரில் தொல்லை செய்கிறார்கள்.

சட்டத்துக்கு புறம்பான செயல்களை பள்ளியில் வைத்து செய்கிறார்கள். அதை எதிர்த்து கேட்பவர்களை ரவுடிகளை வைத்து தாக்குகிறார்கள். இதை எதிர்த்து கேட்கும் கேத்தரின் தெரசா மீதும் அவர்கள் ஒரு கண் வைக்கிறார்கள். கேத்தரின் தெரசாவை மிரட்டுகிறார்கள். பாலியல் ரீதியாக துன்புறுத்துகிறார்கள். இதனால் வெகுண்டு எழும் சுந்தர் சி வில்லன்களை மறைமுகமாக தாக்குகிறார். யார் தாக்கியது என்றே தெரியாத அளவுக்கு அவரின் தாக்குதல் இருக்கிறது.

நடுவில் அவர் யார் என்று தெரிய வருகிறது. கேத்தரின் தெரசா, தான் காவல்துறைக்கு கொடுத்த புகார் மூலம் காவல்துறையால் வாத்தியார் போர்வையில் அனுப்பப்பட்ட காவல்துறை அதிகாரிதான் சுந்தர் சி என முதலில் நினைக்கிறார். ஆனால் அப்படியெல்லாம் இல்லை என தெரிய வருகிறது. அப்படி என்றால் சுந்தர் சி யார்? ஏன் இந்த வில்லன்களை தாக்குகிறார்? என அவருக்கும் வில்லன்களுக்குமான இன்னொரு ஃப்ளாஸ்பேக் சொல்லப்படுகிறது. அந்த ஃப்ளாஷ்பேக்கில் சுந்தர் சி யின் மனைவியாக வாணி போஜன் சில காட்சிகள் நடித்திருக்கிறார். அதோடு அவர் உயிர் விடுகிறார்.

வில்லன்களான அருள்தாஸ் மற்றும் மைம் கோபி இருவருக்கும் மூத்த அண்ணன் ஒருவர் இருக்கிறார் அவர்தான் ஹரிஷ். அவர் இந்த ஃப்ளாஸ்பேக் காட்சிகளில் வருகிறார். அவர்தான் படத்தின் முக்கிய வில்லன். ஒரு மந்திரியிடம் இருந்து 100 கோடி ரூபாய் கடத்துகிறார். அந்த நிகழ்வின் போது தான் சுந்தர் சி யின் மனைவி கொல்லப்படுகிறார். இதற்காக பழி வாங்குவதற்கு தான் சுந்தர் சி அந்த ஊருக்கு வந்திருக்கிறார்.

இப்படி நடந்த கதை எல்லாம் சுந்தர் சி சொல்லி அந்த 100 கோடியை நாம் அடிக்க வேண்டும் என தந்திரமாக பிளான் செய்கிறார். கடத்தல் படங்களில் வருவது போல சுந்தர் சி, வடிவேல்,கேத்தரின் தெரசா, அந்த பள்ளியில் உண்மையான காவல்துறை அதிகாரியாக மாறுவேடத்தில் வந்திருக்கும் பகவதி பெருமாள், ராம்தாஸ் மற்றும் பலர் சேர்ந்து அந்த 100 கோடியை அடிக்க முயற்சி செய்கின்றனர். அதற்கு பலவித திட்டங்களை தீட்டுகின்றனர். இடைவேளைக்குப் பின்பு வரும் இந்த காட்சிகள் வயிறு குலுங்க சிரிக்க வைக்கின்றன.

இடைவேளை முன்பு வடிவேலு காமெடி ஆங்காங்கே வருகிறது. இடைவேளைக்கு பின்பு பட முழுவதும் ரணகளம் செய்கிறார். கிளைமாக்ஸ் வரை சரியான காமெடி காட்சிகள். வடிவேலை இந்த மாதிரி பார்த்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. கிளைமாக்ஸில் ஒரு தியேட்டரில் சண்டையுடன் கூடிய காமெடி காட்சிகள் வரும். அந்தக் காட்சிகளின் போது விழுந்து விழுந்து மக்கள் எல்லோரும் சிரிக்கிறார்கள். தியேட்டரில் அவ்வளவு கிளாப்ஸ் விழுகிறது வடிவேலுக்கு.

“எனக்கு எண்டுக்கார்டா போடுறீங்க எனக்கு என்டே கிடையாது” என்று சொல்வது போல வடிவேலுக்கு இந்த படம் மிகச் சிறப்பான ரீ என்ட்ரி படமாக அமைந்துள்ளது. கிட்டத்தட்ட 2011க்கு பிறகு இந்த படம் தான் வடிவேலுக்கு சிறந்த படம் என்று சொல்வதற்கு தகும்.

சி சத்யாவின் பின்னணி இசை பரவாயில்லை. படத்தில் நிறைய லாஜிக் மீறிய காட்சிகள் உண்டு. லாஜிக் பார்ப்பதற்கு இது பாரதிராஜா படமோ, பாலு மகேந்திரா படமோ, மகேந்திரன் படமோ கிடையாது. சுந்தர் சி யின் படம்.

அந்த கால எஸ் பி முத்துராமன் படங்கள், நடுவில் வந்த 80ஸ் 90ஸ் படங்கள், அவரின் தற்போதைய பாணி காட்சிகள் இவற்றையெல்லாம் மிக்ஸ் செய்து பெண்கள், குழந்தைகள் அனைவரும் கவரும் வகையில் படம் இயக்கி இருக்கிறார் சுந்தர் சி. உண்மையில் சுந்தர் சியை வைத்து எந்த படம் எடுத்தாலும் அந்த படம் குறைந்தபட்ச லாபம் என்ற நம்பிக்கையை அவர் மீது விதைக்கிறது.

ஒவ்வொருவரின் நாடி பார்த்து மிக அருமையாக நேர்த்தியாக படங்களை இயக்குகிறார். கருத்து சொல்கிறேன், சண்டைக்காட்சிகள் வைக்கிறேன் என ஏனோதானோ என எடுக்காமல் லாஜிக் இல்லாத கதை, சண்டைக் காட்சிகள், அதிகமான காமெடி காட்சிகள், சின்ன சின்ன பாடல்கள், இவற்றையெல்லாம் மிக்ஸ் செய்து எல்லோருக்கும் பிடித்த வகையில் அருமையாக படத்தை இயக்கியிருக்கிறார் சுந்தர் சி.

அடிக்கிற வெயிலுக்கு வீட்டில் கிடந்து தவிக்காமல் நல்ல குளுகுளுனு ஒரு ஏசி தியேட்டராக சென்று நல்ல கலகலன்னு பார்த்து ரசித்து சிரிச்சிட்டு வர வேண்டிய படம் இது.