அது 1989-ம் வருடம். தமிழ் சினிமாவில் இதுவரை அப்படி ஒரு வெற்றியை எந்தப் படமும் பெற்றிருக்காது. அப்போது திரையுலக சூப்பர் ஸ்டார்களாக இருந்த ரஜினி, கமல், மோகன் போன்றோர் வாயடைத்துப் போன காலகட்டம் அது. இது எப்படி சாத்தியம்.. அப்படி ஒன்றும் படத்தில் கதை இல்லையே.. பிரம்மாண்டம் கிடையாது.. அதிக பொருட்செலவும் கிடையாது அப்புறம் எப்படி இது சாத்தியம் என்று சினிமா உலகமே மண்டையைப் பிய்த்துக் கொண்டிருந்தது. இப்படி உச்ச நடிகர்களை புலம்ப வைத்த அந்தப் படம் தான் கரகாட்டக்காரன்.
கங்கை அமரன் இயக்கத்தில், இளையாராஜாவி இசையில் கிராமிய மணம் தவழ்ந்த இந்தப் படம் மதுரையில் ஒரு திரையரங்கில் 425 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. மேலும் பல இடங்கள்ல ஒரு வருடத்திற்கும் மேல் ஓடியது. கனகா நாயகியாக அறிமுகப் படத்திலேயே உச்சத்திற்குச் சென்றார். கவுண்டமணி-செந்திலின் காமெடியை உலகமே ரசித்தது. வாழைப்பழ காமெடி இன்னும் எத்தனை ஆண்டுகள் வந்தாலும் அழியாப் புகழைக் கொண்டு விளங்குகிறது.
சாதாராண கிராமத்துக் கதைதான். பண்ணையார், காதல் கூடவே கரகம் என்னும் தமிழக பாரம்பரிய கலை, அதனுடன் கொஞ்சம் சென்ட்டிமெண்ட், கதையில் கலந்து வரும் காமெடி என கமர்ஷியல் சினிமாவிற்கான அத்தனை அம்சங்களையும் கொண்டு கரகாட்டக்காரான் பெற்ற வெற்றியை இன்னும் எந்தப் படமும் தொடவில்லை என்பதுதான் ஆச்சர்யம்.
15 வயதிலலேயே உலக நாயகனை ஆட வைத்த பிரபு தேவா.. இந்தப் பாடல் தானா அது?
இவ்வாறு பலவகைகளில் ஹிட் அடித்த இந்தப் படத்தின் தூணாக விளங்கியவர் இளையராஜா. அவர் செய்த மேஜிக்கால் பாடல்கள் டேப்ரிக்கார்டர்களை தேய விட்டது. இந்தப் படத்திற்காக ராமராஜன்-கனகாவிற்கு எழுதப்பட்ட பாடல்தான் மாங்குயிலே பூங்குயிலே என்ற ஜோடிப் பாடல். இந்தப் பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்புப் பெற்றது. கிராமிய இசையில் பண்ணைப்புரத்துக்காரர் தான் கற்ற வித்தை அனைத்தையும் இதில் இறக்கி படத்தினை கொண்டாட வைத்தார்.
கதைப்படி காதலன் மாட்டு வண்டியில் ஊரை விட்டுச் செல்லும் போது இயக்குநர் கங்கை அமரன் தனது அண்ணன் இளையராஜாவிடம் இந்த இடத்தில் மாங்குயிலே பாடலை மீண்டும் சோகமாக வைக்கலாம் என்று கூறியிருக்கிறார். பிறகு அந்தக் காட்சியைக் கேட்ட இளையராஜா இந்த இடத்திற்கு எதற்கு மீண்டும் அந்தப் பாடல் தேவையில்லை. அதற்குப் பதிலாக வேறு டியூன் போட்டுத் தருகிறேன் என்று கூறி ஒரு டியூனைக் கொடுக்க உடனே கங்கை அமரன் குடகுமலைக்காற்றில் வரும் பாட்டு கேட்குதா என்று பாடலை இயற்றினார். இந்தப் பாடலும் ஹிட் வரிசையில் இணைந்தது. இப்படி கரகாட்டக்காரன் படத்தில் பல அதிசயங்கள் நிறைந்திருக்கின்றன.