’குடும்பஸ்தன் முதல் ‘டிராகன்’ வரை.. 2025ல் வெற்றி பெற்ற சின்ன பட்ஜெட் படங்கள்.. சிறிய முதலீடு பெரும் லாபம் என நிரூபித்த 10 திரைப்படங்கள்..!

2025-ஆம் ஆண்டு தமிழ் சினிமாவை பொறுத்தவரை சற்று சவாலான ஆண்டாக இருந்தாலும், சில சின்ன பட்ஜெட் திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்று நம்மை வியக்க வைத்தன. கடந்த ஆண்டின் டாப் 10 சின்ன பட்ஜெட்…

2025 movies

2025-ஆம் ஆண்டு தமிழ் சினிமாவை பொறுத்தவரை சற்று சவாலான ஆண்டாக இருந்தாலும், சில சின்ன பட்ஜெட் திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்று நம்மை வியக்க வைத்தன. கடந்த ஆண்டின் டாப் 10 சின்ன பட்ஜெட் வெற்றி திரைப்படங்கள் எவை என்பதை விரிவாக பார்ப்போம்.

இந்தத் தரவரிசையில் 10-வது இடத்தில் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் உள்ளது. ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தின் போராட்டங்களை வெறும் சோகமாக மட்டுமே சொல்லாமல், நகைச்சுவை உணர்வோடு அணுகியது இப்படத்தின் சிறப்பு. நடிகர் மணிகண்டன் மற்றும் சோமசுந்தரம் ஆகியோரின் நடிப்பு அபாரமாக இருந்தது. குறிப்பாக, காசு இருக்கும்போது ஒரு மனிதனுக்கு கிடைக்கும் மரியாதையும், இல்லாதபோது சொந்த குடும்பமே அவனை மதிக்காமல் போவதையும் எதார்த்தமாகப் பதிவு செய்திருந்தனர்.

9-வது இடத்தில் இருப்பது விஷால் நடித்த ‘மத கஜ ராஜா’. இந்த படம் கடந்த 2012ஆம் ஆண்டு தயாரித்தபோது இதன் பட்ஜெட் வெறும் 15 கோடி ரூபாய் தான். இப்படத்தின் காமெடி காட்சிகள், ரொமான்ஸ் காட்சிகள் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தன. விஷால், வரலட்சுமி, அஞ்சலி ஆகியோர்களின் அபாரமான நடிப்பு திறமைக்கு இப்படம் ஒரு சான்று.

8-வது இடத்தை ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ பிடிக்கிறது. இந்த படத்தில் வரும் அந்த சிறுவனின் நடனம் மற்றும் கேரள பின்னணி காட்சிகள் மனதிற்கு நெருக்கமாக இருந்தன. ‘அயோத்தி’ படத்தில் வருவது போன்ற ஒரு உணர்வுப்பூர்வமான கிளைமாக்ஸ் இப்படத்திலும் அமைந்திருந்தது. குறிப்பாக, இலங்கையிலிருந்து வந்தவர்களுக்காக ஒரு கூட்டமே திரண்டு நிற்கும் அந்த ‘மேஜிக்’ தருணம் கண்கலங்க வைத்தது. எம்.எஸ்.பாஸ்கர் அவர்களின் நடிப்பு இப்படத்திற்குப் பெரும் பலம் சேர்த்தது.

7-வது இடத்தில் ’பெருசு’ திரைப்படம் உள்ளது. கிராமத்தில் மிகுந்த செல்வாக்கும் அந்தஸ்தும் கொண்ட ஒரு பெரியவரின் வாரிசுகள் சுனில் மற்றும் வைபவ். ஒரு வழக்கமான நாளில், ஆற்றில் நீராடிவிட்டு வந்து வீட்டில் தொலைக்காட்சி பார்த்து கொண்டிருந்த அந்த பெரியவர் எதிர்பாராத விதமாக உயிரிழக்கிறார். துரதிர்ஷ்டவசமாக, அவரது உடலை ஊர் மக்களோ அல்லது உறவினர்களோ பார்ப்பதில் ஒரு மிகப்பெரிய சிக்கல் உருவாகிறது. சடலத்தை வெளியே காட்டாமல் மறைக்கவும் முடியாது, அதே சமயம் அதில் உள்ள விசித்திரமான சிக்கலை வெளிப்படையாக சொல்லவும் முடியாமல் அந்த குடும்பமே திணறிபோகிறது. இந்த இக்கட்டான சூழலில் இருந்து தப்பிக்க மகன்களும் குடும்பத்தாரும் செய்யும் வினோதமான முயற்சிகளும், குளறுபடிகளும் நிறைந்த இறுதிச்சடங்கு பயணமே ‘பெருசு’ படத்தின் கதைக்கருவாகும்.

6-வது இடத்தில் ஒரு சிறந்த த்ரில்லர் படமான ‘மார்கன்’ உள்ளது. இப்படத்தின் எடிட்டிங் மற்றும் திரைக்கதை அமைப்பு மிகவும் சிக்கலானது; ஆனால் அதை ரசிகர்களுக்குப் புரியும் வகையில் நேர்த்தியாக கையாண்டிருந்தனர். டெலிபோர்ட்டேஷன் போன்ற அறிவியல் புனைவுகளை மிகச்சிறப்பாக காட்டியிருந்தனர். படத்தில் வரும் அந்தச் சிறுவனின் நடிப்பு மற்றும் கிளைமாக்ஸில் வரும் ட்விஸ்ட் ஆகியவை ‘மார்கன்’ படத்தை ஒரு மஸ்ட்-வாட்ச் மூவியாக மாற்றுகிறது.

5-வது இடத்தை விஜய் ஆண்டனி நடித்த ‘சக்தி திருமகன்’ பிடித்துள்ளது. ஒரு கார்ப்பரேஷன் புரோக்கர் எப்படி ஒட்டுமொத்த அரசாங்க இயந்திரத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார் என்பதை மிக தீவிரமான திரைக்கதையில் சொல்லியிருந்தனர். அண்டர் கிரவுண்ட் நெட்வொர்க்கை அவர் இயக்கும் விதம் மற்றும் வில்லனின் மிரட்டலான தோற்றம் ஆகியவை படத்தை அடுத்த நிலைக்கு கொண்டு சென்றன. ஒரு சாதாரண மனிதன் இவ்வளவு பெரிய விஷயங்களை செய்ய முடியுமா என்ற கேள்வி எழாதவாறு நம்பகத்தன்மையுடன் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன.

4-வது இடத்தில் ‘மெட்ராஸ் மேட்னி’ திரைப்படம் உள்ளது. மிடில் கிளாஸ் குடும்பத்தின் வலிகளை பாகம் பாகமாக பிரித்து காளி வெங்கட் அபாரமாக நடித்திருந்தார். அப்பா – மகள் உறவு மற்றும் மகன் – அப்பா இடையேயான புரிதலை மிகவும் அழகாக பதிவு செய்திருந்தனர். குறிப்பாக, ஈபி அதிகாரி பையன் மீது கை வைக்கும்போது காளி வெங்கட் கொடுக்கும் அந்த லுக், 2025-ன் சிறந்த சினிமா தருணங்களில் ஒன்று. ஒரு சாதாரண ஆட்டோ ஓட்டுநரின் தியாகம் மற்றும் அவரது குடும்பத்தின் ரியலைசேஷன் நம்மை நெகிழ வைத்தது.

3-வது இடத்தில் பகத் பாசில் மற்றும் வடிவேலு இணைந்த ‘மாரிசன்’ உள்ளது. இரண்டு நடிப்பு அரக்கர்களும் திரையில் போட்டி போட்டு நடித்திருந்தனர். பைக்கில் இருவரும் பேசிக்கொண்டே செல்லும் காட்சிகள், யார் யாரை ஏமாற்றுகிறார்கள் என்ற சஸ்பென்ஸ் எனப் படம் முழுவதும் சுவாரஸ்யமாக இருந்தது. விவேக் பிரசன்னாவின் கதாபாத்திரம் நமக்கு கோபத்தை உண்டாக்கும் அளவிற்கு சிறப்பாக சித்தரிக்கப்பட்டிருந்தது

2-வது இடத்தில் சிபி சத்யராஜ் நடித்த ‘டென் ஹவர்ஸ்’. ஆத்தூரில் இளம்பெண் ஒருத்தி மர்மமான முறையில் மாயமானதை தொடர்ந்து, அந்த வழக்கை விசாரிக்க காவல் ஆய்வாளர் காஸ்ட்ரோ நியமிக்கப்படுகிறார். அதே சமயம், சென்னையிலிருந்து கோவை நோக்கி பயணிக்கும் ஒரு ஆம்னி பேருந்துக்குள் பெண் ஒருவர் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதாகக் காவல்துறைக்கு தகவல் கிடைக்கிறது. அந்த பேருந்தை வழிமறித்து சோதனையிடும்போது, உள்ளே ஒரு பயணி சடலமாக கிடக்கிறார். மாயமான பெண் எங்கே? பேருந்தில் கொல்லப்பட்ட நபர் யார்? அங்கே துன்புறுத்தலுக்குள்ளான அந்த மர்மப் பெண் யார்? என அடுத்தடுத்த கேள்விகள் எழுகின்றன. இந்த மூன்று வெவ்வேறு சம்பவங்களுக்கும் இடையே உள்ள முடிச்சுகளை அவிழ்த்து, அதன் பின்னணியில் உள்ள குற்றவாளியை பத்து மணி நேரத்திற்குள் காஸ்ட்ரோ எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதே விறுவிறுப்பான இத்திரைக்கதை.

முதல் இடத்தை ‘டிராகன்’ திரைப்படம் உள்ளது. ஒரு தவறான வழியில் முன்னேறும் இளைஞன், தனது செயலால் மற்றொருவரின் வாழ்க்கை பாதிக்கப்படுவதை உணர்ந்து பின்வாங்கும் அந்த நேர்மையான முடிவு பலரையும் கவர்ந்தது. மிஷ்கின் மற்றும் அர்ஷத் கான் ஆகியோரின் நடிப்பு இரண்டாம் பாதியில் மிரட்டலாக இருந்தது. ஒரு கமர்ஷியல் படமாக தொடங்கி, ஒரு ஆழமான செய்தியுடன் முடியும் விதத்தில் ‘டிராகன்’ அனைவரையும் கவர்ந்தது.