தன்னுடைய தனிப்பட்ட நடிப்பாலும், குரலாலும், காமெடி, குணச்சித்திரம், ஹியூமர் என ரசிகர்களைக் கவர்ந்தவர் தான் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன். பாரம்பரிய நாடக குடும்பப் பின்னனியைச் சேர்ந்த ஒய்.ஜி.மகேந்திரன் பல நாடக மேடைகளில் இன்றளவும் நடித்து வருபவர். சூப்பர் ஸ்டார் ரஜினியின் சகலையான ஒய்.ஜி.மகேந்திரன் 1970-ல் தமிழில் நவக்கிரகம் என்ற படத்தின் மூலம் சினிமா உலகில் அடியெடுத்து வைத்தார்.
தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிப் படங்கள் மற்றும் டிவி சீரியல்கள் என திரைப்பயணத்தினைத் தொடர்ந்து வரும் ஒய்.ஜி.மகேந்திரன் கடந்த ஆண்டு வெளியான மாநாடு படத்தில் கூட வில்லனாக மிரட்டியிருந்தார். இந்நிலையில் அவர் ஜெயலலிதா பற்றி பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்கில் பரவி வருகிறது. அதில் அவர் “ஜெயலலிதாவும் நானும் நிறையப் படங்களில் நடித்துள்ளோம். அவர் என்னை வாடா, போடா என்று கூப்பிடும் அளவிற்கு உரிமை எடுத்துக் கொள்வார். நானும் அக்கா அக்கா என்று தான் அழைப்பேன்.
படமோ மெகா ஹிட்.. ஆனால் எம்.ஜி.ஆர் சம்பளம் ஒரு ரூபாய்.. எந்த படத்திற்காக தெரியுமா?
என்னுடைய நிச்சயதார்த்த விழாவிற்குக் கூட அவர்தான் முன்னின்று அனைவரையும் வரவேற்றார். அந்த அளவிற்கு எங்கள் குடும்பத்துடன் அவர் நெருக்கமாக இருந்தார். வார விடுமுறை நாட்களில் நாங்கள் அனைவரும் வெளியில் செல்வோம். என்னுடைய அறக்கட்டளையை தொடங்கி வைத்தவரும் அவர்தான். இந்நிலையில் அவர் அரசியலுக்கு வந்த பின் சரியாக சந்திக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போனது. என்னுடைய 50-வது ஆண்டு நாடக பயணத்தில் அப்போது முதல்வராக இருந்த கலைஞரை திரைத்துறையின் சீனியர் என்ற முறையில் அவரை அழைத்தேன்.
அவரும் உடனே ஒப்புக் கொண்டு வந்து சிறப்பித்தார். ஒருவேளை இதுகூட காரணமாக இருக்கலாம். இருந்த போதிலும் எம்.எஸ்.விஸ்வநாதனுக்குப் பாராட்டு விழா நடைபெற்ற போது கீழே இருந்த என்னை அருகில் இருந்தவரிடம் அவன் நல்லா விசிலடிப்பான் எனவே அதை செய்யச் சொல்லுங்கள் என்று கூறியிருக்கிறார். இருந்த போதும் எங்களது உறவானது பிறகு தொடரவில்லை.“ என்று அந்தப் பேட்டியில் ஒய்.ஜி.மகேந்திரன் கூறியுள்ளார்.
தற்போது ஒய்.ஜி.மகேந்திரன் டிடி தமிழில் ஒளிபரப்பாகி வரும் மகாகவி பாரதியார் நெடுந்தொடரில் குவளைக் கண்ணனாக நடித்து வருகிறார்.