கடந்த 2002ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் அழகி. பொங்கலுக்கு ரிலீஸ் ஆன இந்த திரைப்படத்தை உதயகீதா நிறுவனம் தயாரித்து இருந்தது.
அதற்கு முன் பல படங்களில் ஒளி ஓவியர் என்ற அடைமொழியுடன் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் தங்கர் பச்சான் இயக்குனராக அறிமுகமான படம் இது.
புகழ்பெற்ற ஹிந்தி நடிகை நந்திதா தாஸ் இப்படத்தில் நடித்திருந்தார். பார்த்திபன் கதாநாயகனாக நடித்து இருந்தார்.
படக்குழுவினரே எதிர்பார்க்காத வகையில் இப்படம் பிரமாண்ட வெற்றியடைந்தது. பெண்கள், இளைஞர்கள் என அனைவரும் கவரும் வகையில் இப்படம் அமைந்து இருந்தது.
சிறு வயது பள்ளி நினைவுகளை இயல்பாக அழகாக காட்சிப்படுத்திய விதத்தில் அனைவரையும் ஈர்த்தார் தங்கர்பச்சான்.
பள்ளியிலும் கல்லூரியிலும் ஒன்றாக படித்து பாசம் வளர்த்த தோழியின் காதல் கை கூடாமல் வாழ்க்கை எங்கெங்கோ திசைமாறி சென்று காதலி வேறு ஒருவனை மணம் முடித்து வாழ்க்கையில் செட்டில் ஆகி விடுகிறார்.
காதலனும் டாக்டராகி வேறு ஒரு உயர்ந்த வாழ்க்கைக்கு போய் விடுகிறார்.
கால ஓட்டத்தில் தன் காதலி தனலட்சுமியை காதலன் சந்திக்க நேரிடும்போது அவள் கணவனை இழந்து தெருவோரத்தில் படுத்தும் தூங்கும் நிலை அறிந்து வருத்தப்படுகிறான். அவனின் நிலை கண்டு கண்கலங்குகிறான்.
இப்படியாக சோகமான சுமைகளோடு செல்லும் இப்படம். படத்தின் கதை, திரைக்கதையை வலிமையாக அமைத்து இருந்தார் தங்கர்.
பண்ருட்டி, பத்திரக்கோட்டை பகுதிகளில் அந்த ஏரியா பாரம்பரியங்களோடு படமாக்கப்பட்டிருந்த விதத்தில் அனைவரையும் கவர்ந்தது.
முக்கியமாக இப்படத்தின் இசை இப்படத்தின் உயிர்நாதம். இசைஞானி இளையராஜா அதை திறம்பட செய்திருந்தார்.
படமும் இன்றும் மறக்க முடியாத படமாக அனைவர் மனதிலும் அசை போட வைக்கிறது.