ஆரணியில் பிறந்து வளர்ந்தவர் யோகிபாபு. இவரது தந்தை இராணுவத்தில் ஹவில்தாராக பணியாற்றினார். அதனால் சிறுவயதில் இந்தியாவின் பல இடங்களுக்கு பயணம் செய்தார். இதனால் ஜம்மு காஷ்மீரில் தனது பள்ளி படிப்பை தொடர்ந்தார் யோகிபாபு.
யோகிபாபு தமிழ் சினிமாவில் பணியாற்றும் நடிகர், நகைச்சுவை நடிகர் மற்றும் குணச்சித்திர நடிகர் ஆவார். ஆரம்பத்தில் சின்னத்திரை தொலைக்காட்சியில் இருந்து தனது திரையுலக பயணத்தை ஆரம்பித்தார் யோகிபாபு. விஜய் டிவி ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சியில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார்.
2009 ஆம் ஆண்டு இயக்குனர் அமீர் நடித்த ‘யோகி’ சிறிய கதாபாத்திரத்தில் தோன்றினார். தனது முதல் படத்தின் பெயரையே தனது பெயருக்கு முன்னால் வைத்து யோகி பாபு என்று வைத்துக்கொண்டார். பின்னர் விஷாலின் ‘பட்டத்து யானை’ படத்தில் நடித்தார். பின்னர் ஷாருக்கானுடன் இணைந்து ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தில் நடித்ததன் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்தார் யோகிபாபு.
தொடர்ந்து ‘மான் கராத்தே’, ‘காக்கா முட்டை’, ‘கோலமாவு கோகிலா’, ‘தர்மபிரபு’, ‘மண்டேலா’ ‘பரியேறும் பெருமாள்’, ‘கூர்கா’ போன்ற கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் யோகிபாபு.
அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி பிஸியாகி இருக்கும் யோகிபாபு அவ்வப்போது பிரபல கோவில்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டவர். இதைப் பற்றி பத்திரிகையாளர் அவரிடம் கேட்டபோது, கண்ணுக்கு தெரியாத ஜாதியின் பின்னால் செல்வதை விட கண்ணுக்கு தெரியாத சாமிக்கு பின்னால் சென்றால் நல்லது நடக்கும் என்று கூறி அட்வைஸ் செய்துள்ளார் யோகிபாபு.