இயக்குநர் வசந்த் எடுத்த துணிச்சல் முடிவால் ஹீரோ ஆன எஸ்.பி.பி.. கேளடி கண்மணி உருவான வரலாறு..

By John A

Published:

90 களின் காலகட்டத்தில் சிவாஜி, ரஜினி, கமல், சிவக்குமார், மோகன், ராமராஜன் என்று முன்னனி ஹீரோக்களின் படங்களின் மட்டுமே திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த காலகட்டங்களில் முதன் முறையாக பாடகர் ஒருவரை ஹீரோவாக்கி அவரது நடிப்பினையும் மக்களை ரசிக்க வைத்து வெற்றிப் படமாகக் கொடுத்தவர்தான் இயக்குநர் வசந்த்.

இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்திரிடம் பல படங்களில் உதவியாளராகப் பணியாற்றி அவரிடம் சினிமாவைக் கற்று பின் 1990-ல் வலுவான கதையம்சத்தினைக் கொண்ட கேளடி கண்மணி படத்தினை இயக்கினார். தன்னிடம் இருக்கும் வலுவான கதைக்கு சற்று நடுத்தர வயதுள்ள ஹீரோதான் தேவை என்பதை மனதில் வைத்து பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தை ஹீரோவாக்கினார்.

என்னதான் எஸ்.பி.பி ஒரு புகழ்பெற்ற பாடகராக இருந்தாலும் அவருக்குள்ளும் ஒரு சிறந்த நடிகனும் இருந்துள்ளார். தான் பாடல் பாடும் போது அந்த பாட்டில் வரும் ஹீரோவையே மனதில் வைத்துத்தான் பாடுவேன் என்று பேட்டி ஒன்றில் எஸ்.பி.பி தெரிவித்திருக்கிறார். கேளடி கண்மணி கதையை இயக்குநர் வஸந்த் எஸ்.பி.பி-யிடம் சொல்லும் போது மக்கள் ஏற்றுக் கொள்வார்களா எனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை. எனக்கு பாட்டுத் தொழில் இருக்கிறது. உங்களுக்கு முதல் படம் உங்கள் வருங்காலம் என்னால் கெட்டு விடக் கூடாது என எஸ்.பி.பி வஸந்திடம் சொல்லியிருக்கிறார்.

சங்கீத மேதை இப்படி இருக்கக் கூடாது.. எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு தகுந்த நேரத்தில் உதவிய எம்.ஜி.ஆர்..

இதையெல்லாம் கேட்டுவிட்டு வஸந்த் இந்தப் படத்தில் உங்களைத் தவிர யாரையும் நடிக்க வைக்கப் போவதில்லை என்று உறுதியாகக் கூற எஸ்.பி.பியும் சம்மதித்து நடித்துள்ளார். அதன் பிறகே கேளடி கண்மணி உருவாகியிருக்கிறது. கேளடி கண்மணி படத்தின் ஒவ்வொரு காட்சியையும் இயக்குநர் செதுக்கியிருப்பார். இளையராஜாவின் இசையால் படம் ஓடியதா இல்லை காட்சிகளுக்காக ஓடியதா, இல்லை எஸ்.பி.பி என்னும் நடிகனுக்காக படம் ஓடியதா என்று குழப்பிக் கொள்ளும் அளவிற்கு மூவருமே தங்கள் பணியை திறம்படச் செய்தனர்.

நீபாதி நான் பாதி கண்ணே.., கற்பூர பொம்மை ஒன்று…, மண்ணில் இந்த காதலன்றி.., தென்றல்தான்…, போன்ற பாடல்கள் இன்றும் ஹிட் லிஸ்ட்டில் இடம்பிடித்திருக்கின்றன. இவற்றில் எஸ்.பி.பி மூச்சு விடாமல் பாடிய மண்ணில் இந்த காதலன்றி பாடல் எடுத்த விதமும், அவர் பாடிய விதமும் இன்றும் பாராட்டப்படும் காட்சிகளாக அமைந்துள்ளது. கேளடி கண்மணியின் பெரும் வெற்றிக்குப் பிறகு நீ பாதி.. நான் பாதி, ஆசை, நேருக்கு நேர், சத்தம் போடாதே, ரிதம், அப்பு, பூவெல்லாம் கேட்டுப்பார் போன்ற பல ஹிட் படங்களை தமிழ் சினிமாவிற்கு வழங்கினார் இயக்குநர் வசந்த்.