முதன் முதலில் தனது சினிமா குருவையே கதாநாயகனாக்கிய இயக்குநர் டி.பி.கஜேந்திரன்.. யாருடைய மகன் தெரியுமா?

By John A

Published:

இன்று ஒரு படத்தில் பணியாற்றும் துணை இயக்குநர்கள் புதிதாக அவர்களுக்கென தனியாக படம் இயக்கும் வாய்ப்புக்கள் வரும் போது தங்களுடைய குருநாதரையே முதல்படத்தில் ஹீரோவாகவோ அல்லது குணச்சித்திர ரோல்களிலோ நடிக்க வைத்து எடுத்து நன்றிக் கடன் செலுத்துகின்றனர்.

ஆனால் இவற்றிற்கெல்லாம் பிள்ளையார் சுழி போட்டவர் யார் தெரியுமா? முதல்வர் ஸ்டாலினின் கல்லூரித் தோழரும், குடும்பப் பாங்கான நகைச்சுவைப் படங்களை எடுப்பதில் வல்லவரும், காமெடி நடிகருமாக விளங்கிய இயக்குநர் டி.பி. கஜேந்திரன் தான். பழம்பெரும் காமெடி நடிகையான டி.பி. முத்துலட்சுமியின் வளர்ப்பு மகனான டி.பி. கஜேந்திரன் 15-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் எடுத்தும், 100க்கும் அதிகமான படங்களில் நடித்தும் இருக்கிறார்.

இயக்குநர் கே.பாலச்சந்தர், விசு ஆகியோரின் மாணவரான டி.பி.கஜேந்திரன் தனது குருவுக்கு நன்றி செலுத்தும் விதமாக தான் இயக்கிய முதல் திரைப்படமான, வீடு மனைவி மக்கள் என்ற திரைப்படத்தில், தனது திரையுலக குருவான விசு அவர்களை, கதைநாயகனாக நடிக்க வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பெயரைச் சொன்னதால் ஆத்திரம் அடைந்த நடிகை.. செம டோஸ் வாங்கிய போட்டோகிராபர்

மேலும் இந்திய திரையுலகிலேயே, தான் இயக்கிய முதல் திரைப்படத்தில், தனது திரையுலகக் குருவை, கதை நாயகனாக வைத்து இயக்கிய முதல் இயக்குனர், டி.பி. கஜேந்திரன் மட்டுமே ஆவார். மேலும் இவர், ராமராஜன் நடிப்பில் வெளியாகி ஹிட் ஆன எங்க ஊரு காவல்காரன் படத்தையும், நவரசநாயகன் கார்த்திக்கு கம்பேக் கொடுத்த ஹிட் படமான பாண்டி நாட்டுத் தங்கம், பாடல்களால் ஹிட் ஆன பாட்டு வாத்தியார் போன்ற படங்களை இயக்கினார். பின்னர் அவரின் கவனம் காமெடிப் படங்கள் பக்கம் திரும்ப பிரபுவுடன் மிடில் கிளாஸ் மாதவன், பந்தா பரமசிவம், பட்ஜெட் பத்மநாபன், நல்ல காலம் பொறந்தாச்சு போன்ற படங்களையும் இயக்கி குடும்பப் பட இயக்குநராகத் திகழ்ந்தார்.

தமிழ் திரையுலகில், உயரம் குறைவான உடல் அமைப்பைப் பெற்றிருந்தாலும், சிறந்த திரைப்படங்கள் மூலம், தமிழ் ரசிகர்களை வியக்க வைத்த இயக்குனர்கள் மிகச் சிலராவர். கே எஸ் கோபாலகிருஷ்ணன், (என்றும் அன்புடன்) பாக்கியநாதன், பாண்டியராஜன், ஆகியோரின் வரிசையில், டி.பி. கஜேந்திரனும் இணைந்து சிறப்பைப் பெற்றுள்ளார்.