தமிழ் சினிமாவில் தற்போது எல்லாம் ஒரு இயக்குனர் சுமார் 10 ஆண்டுகள் வரை ஹிட் படங்களை கொடுப்பதே பெரிய சவாலாக உள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தங்களது படைப்புகள் கொஞ்சம் பிசிறு தட்டினாலே உடனடியாக ரசிகர்கள் விமர்சிக்க தொடங்கி விடுவார்கள். இதனால் ஒவ்வொரு படங்களையும் கவனமாக செய்வதே பெரிய சவாலாக இருக்கும் சூழலில் ஒரு சில இயக்குனர்கள் பல ஆண்டுகளாகவே தங்களது திறனை நேர்த்தியாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், இயக்குனர் மணிரத்தினத்திற்கு இந்திய சினிமாவிலேயே மிக முக்கியமான இடமுண்டு. கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்குனராக கலக்கி வரும் மணிரத்னம் இயக்கிய மௌன ராகம், தளபதி, நாயகன், இருவர், பாம்பே, அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால், குரு என பல திரைப்படங்கள் அடுத்த பல ஆண்டுகளுக்கு நின்று பேசும் வகையில் அமைந்ததாகும்.
பாதியில் நின்ற நாயகன் ஷூட்டிங்
கடைசியாக மணிரத்னம் இயக்கத்தில் உருவான Thug Life அதிக விமர்சனத்தை சந்தித்திருந்தாலும் அடுத்து அவர் இயக்கும் படம் நிச்சயம் வெற்றி பெறும் என்பதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதனிடையே, மணிரத்னம் இயக்கத்தில் உருவான படங்களில் Cult Classic படமும், கமல்ஹாசனுக்கு தேசிய விருதை வாங்கி கொடுத்த நாயகன் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை படமாக்கிய சமயத்தில் ஷூட்டிங் நின்றது பற்றியும், அதன் பின்னர் நடந்த சம்பவம் பற்றியும் தற்போது பார்க்கலாம்.

இது தொடர்பாக பிரபல எழுத்தாளர் குரு சம்பத்குமார் ஒரு நேர்காணலில் பேசுகையில், “நாயகன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி கிண்டி கல்லூரியில் நடந்தது. அந்த சமயத்தில் கமல்ஹாசனை ரிலீஸ் செய்ய அவர் வெளியே வரும் காட்சி படமாக்கப்பட்டு கொண்டிருந்தது. ஆனால் அங்கே திடீரென ஷூட்டிங் நடைபெறாமல் ஜூனியர் ஆர்டிஸ்ட்கள் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தனர். அதாவது அங்கு இருக்கும் ஜூனியர் ஆர்டிஸ்ட் அனைவருக்கும் உணவு சரியாக வழங்கப்படவில்லை என்பதுடன் தயிர் சாதம் மட்டுமே வழங்கியதாகவும் தெரிகிறது.
ஷூட்டிங்க நிப்பாட்டுங்க..
ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்கள் ஏராளம் பேர் இருக்க, நல்லபடியாக உணவு கொடுத்தால் தான் சூட்டிங் நடத்த ஒத்துழைப்போம் என்று ஸ்ட்ரைக் செய்தனர். இதன் பின்னர் அங்கே வந்த இயக்குனர் மணிரத்னமும் விஷயத்தை தெரிந்து கொண்டு அவர்களுக்கு நல்ல சாப்பாடு கிடைத்தால் சூட்டிங்கை தொடரலாம் என்று கூறிவிட்டார். தொடர்ந்து தனது மூத்த சகோதரரும் தயாரிப்பாளருமான ஜி. வெங்கடேஸ்வரனை அழைத்து மணிரத்னம் விஷயத்தை சொல்ல, சென்னையில் எங்கெல்லாம் பிரியாணி கிடைக்குமோ சுமார் 15 கார்களை அனுப்பி அனைத்து பிரியாணியையும் ஷூட்டிங் ஸ்பாட் வரும்படி செய்திருந்தார்.
இதன் பின்னர் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் அனைவரும் நன்றாக சாப்பிட பின்னர் தான் நாயகன் பட ஷூட்டிங்கும் தொடர்ந்து நடந்தது” என குரு சம்பத்குமார் தெரிவித்துள்ளார். கலைஞர்கள் நல்லபடியாக சாப்பிட்டால் தொடர்ந்து ஷூட்டிங்கை நடத்தலாம் என மணிரத்னமே முன்னின்று நடத்திய இந்த சம்பவம் அதிக கவனம் பெற்றும் வருகிறது.
நான் கடந்த 7 ஆண்டுகளாக பல வலைத்தளங்களில் கிரிக்கெட், சினிமா தொடர்பான செய்திகளை சுவாரஸ்யம் குறையாமல் வாசகர்கள் விரும்பும் வகையில் எழுதி வருகிறேன். இணையத்தில் இன்று ஏராளமான செய்திகள் சரியான விவரங்கள் இல்லாமல் வெளியாகி வரும் சூழலில் முடிந்த அளவுக்கு சிறந்த செய்திகளை கொடுப்பதற்கு நான் முன்னுரிமை கொடுத்து எழுதி வருகிறேன்.

