தமிழ் சினிமாவின் மிகப்பெரும் சரித்திரம் இயக்குனர் மகேந்திரன். அவரின் படங்கள் காவியமா ஓவியமா என்று கேட்டால் காவியமான ஓவியம் என்று சொல்லலாம்.
ஆம் அவரின் படங்கள் ஒவ்வொன்றும் எளியவர்களின் வாழ்க்கை முறையை இனிமையான முறையில் சொன்ன காவிய படங்கள்தான். அதை ஓவியம் போன்று அழகாக செதுக்கி இருப்பார்.
உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும், ஜானி, கை கொடுக்கும் கை, நண்டு, மெட்டி என அனைத்தும் மிக சிறப்பான படங்கள். மிக மென்மையான முறையில் இந்த படங்கள் கையாளப்பட்டிருக்கும்.
இவரது திரைக்கதைக்கு இளையராஜாவின் இசையும் மெருகேற்றி இருக்கும்.
ஒவ்வொரு பாடலையும் இருவரும் சேர்ந்து காட்சியின் சூழலுக்கேற்ப இளைத்திருப்பர்.இவரது ஜானி படத்தில் இரண்டு ரஜினி கதாபாத்திரமும் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருக்கும்.
ஒருவர் சோம்பேறி முரடன் நியாயமான தொழில் செய்பவர் சந்தர்ப்ப சூழ்நிலையால் கொலை செய்கிறார். இன்னொருவர் திருடன் விதவிதமாக ஏமாற்றி திருடுபவன் நல்லவன் என இருவருக்கும் உண்டான கதாபாத்திரத்தை வித்தியாசமாக வடிவமைத்திருப்பார்.
க்ளைமாக்ஸ் காட்சியில் ஸ்ரீதேவி பாடும் காற்றில் எந்தன் கீதம் பாடலும் மழையில் ரஜினி ஓடி வருவதும் பின்னணியில் இளையராஜாவின் ரீ ரெக்கார்டிங்கும் எந்த படத்திலும் காண முடியாத மனதை கொள்ளை கொண்ட காட்சிகளாகும்.
கை இழந்த காளி, கண் தெரியாத மனைவி, இன்னொரு திருமணத்துக்கு ஆசைப்படும் கணவன் என ஒவ்வொரு படத்திலும் வித்தியாசத்தை காட்டிய இயக்குனர் மகேந்திரன் உடல் நலக்குறைவால் சென்னை க்ரீம்ஸ் ரோட்டில் உள்ள மருத்துவமனையில் இன்று காலை இயற்கை எய்தினார். அவருக்கு வயது 79