தமிழ்த்திரை உலகில் இன்று வரை பேசப்படக்கூடிய இயக்குனர்கள் ஒரு சிலர் தான் இருக்கிறார்கள். மறைந்த மாமேதை இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரை தமிழ்த்திரை உலகம் உள்ளவரையும் மறக்க முடியாது. அவரது படைப்புகள் அப்படிப்பட்டவை. அவரது தனிச்சிறப்புகளைப் பற்றி இப்போது பார்ப்போம்.
கே.பாலசந்தர் தனது கருத்துகளை ரொம்பவே துணிச்சலாக படங்களில் சொல்லிவிடுவார். இதை அவரது படங்களைப் பார்க்கும்போதே தெரிந்து கொள்ளலாம். அபூர்வ ராகங்கள், புன்னகை மன்னன், எதிர்நீச்சல், தண்ணீர் தண்ணீர், வறுமையின் நிறம் சிவப்பு, உன்னால் முடியும் தம்பி, சிந்து பைரவி என இவரது படங்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம். அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட்.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். அதற்கு இவரது நூற்றுக்கு நூறு என்ற ஒரு படம் போதும். ரசிகர்களிடம் இந்தப் படம் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களைப் பெற்றுள்ளது.
இரு கோடுகள், பூவா தலையா, பாமா விஜயம், தாமரை நெஞ்சம், புன்னகை, சொல்லத்தான் நினைக்கிறேன், அரங்கேற்றம், அவள் ஒரு தொடர்கதை ஆகிய படங்களைப் பார்த்தால் கே.பாலசந்தர் எவ்வளவு பெரிய இயக்குனர் என்று தெரியவரும். அதனால் தான் இவரை இயக்குனர் சிகரம் என்று அழைத்தார்கள்.
இன்னொரு முக்கியமான விஷயம் பாலசந்தரின் படங்களில் உண்டு. அவரது படங்களில் ஹீரோயின்கள் எல்லோருமே ரொம்பவே புத்திசாலிகளாக இருப்பார்கள். சுமை தாங்கிகள், அவள் ஒரு தொடர்கதை, மனதில் உறுதி வேண்டும், கல்கி படங்களை உதாரணமாகச் சொல்லலாம்.
பாலிவுட்டிலும் கொடி கட்டிப் பறந்தார். அங்கு ஏக் துஜே கேலியேவும், தெலுங்கில் மரோசரித்ராவும் இவரது இயக்கத்தில் வந்தவை தான். அங்கு பட்டி தொட்டி எல்லாம் சக்கை போடு போட்டன.
தமிழ்த்திரை உலகிற்கு பாலசந்தர் அறிமுகப்படுத்திய நடிகை, நடிகைகளைப் பட்டியல் போட்டால் அடேங்கப்பா இவ்ளோ பேர்களா என்று வியக்கத் தோன்றும்.
நடிகர்களை எடுத்துக் கொண்டால் ரஜினிகாந்த், விவேக், நாசர், ராதாரவி, சார்லி, பிரகாஷ்ராஜ், சரத்பாபு, சிரஞ்சீவி, எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எஸ்.வி.சேகர், திலீப், பூர்ணம் விஸ்வநாதன், மதன் பாப், மேஜர் சுந்தரராஜன், டெல்லி கணேஷ், ஒய்.ஜி.மகேந்திரன்.
நடிகைகளை எடுத்துக் கொண்டால் சுஜாதா, ஜெயப்பிரதா, சரிதா, ஜெயசித்ரா, படாபட் ஜெயலட்சுமி. ஸ்ரீபிரியா, கல்கி ஸ்ருதி, விஜி, சித்தாரா, ஸ்ரீவித்யா, பிரமிளா, ரதி, ஜெயசுதா, சுமித்ரா, பாத்திமா பாபு, யுவராணி, விசாலி கண்ணதாசன்..
திறமைகள் எங்கிருந்தாலும் தேடிக் கண்டுபிடிப்பதில் அவருக்கு நிகர் அவர் தான் என்பதை இந்தப் பட்டியலைப் பார்த்தாலே நமக்குத் தெரிந்துவிடும்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.


