தனது காதல் மனைவிக்காக.. ஹாரிஸ் ஜெயராஜ், நா. முத்துக்குமாரை ஏமாற்றி சாமி படத்தில் இயக்குனர் ஹரி செஞ்ச சம்பவம்..

By Ajith V

Published:

தமிழ் சினிமாவின் கமர்சியல் இயக்குனர்களின் முக்கியமான ஒருவர் தான் ஹரி. பிரசாந்த் நடிப்பில் உருவான தமிழ் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஹரி, அதன் பின்னர் சாமி, ஐயா, ஆறு, தாமிரபரணி, சிங்கம், பூஜை, யானை உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கி உள்ளார். இவரது இயக்கத்தில் அடுத்ததாக ரத்னம் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. ஹரியின் இயக்கத்தில் தாமிரபரணி, பூஜை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்த விஷால் இந்த திரைப்படத்திலும் நாயகனாக நடித்துள்ளார்.

ஹரியின் திரைப்படங்கள் என்றாலே அடிதடி, சண்டை என முழுக்க முழுக்க கமர்ஷியல் வகையில் அமைந்திருக்கும். அதுமட்டுமில்லாமல் அவரது திரைப்படம் ஜெட் வேகத்தில் செல்லும்படி இருப்பதால் இன்று வரையிலும் அவரது திரைப்படங்கள் வெளியாகும் போது ரசிகர்கள் அதனை ஆர்வத்துடன் கண்டுகளித்து வருகின்றனர்.

அதிலும் ஹரி இயக்கத்தில் விக்ரம் போலீசாக நடித்த ‘சாமி’ திரைப்படம் எத்தனை தடவை பார்த்தாலும் சலித்து போகாத அளவிற்கு அமைந்திருக்கும். அப்படி இருக்கையில் இந்த திரைப்படத்தில் வரும் ஒரு பாடலுக்காக இசையமைப்பாளர் மற்றும் பாடகர் ஆகியோரை ஹரி ஏமாற்றியது பற்றி தற்போது பார்க்கலாம்.

சாமி படத்தில் வரும் திருநெல்வேலி அல்வாடா, இதுதானா இது தானா, கல்யாணம் தான் கட்டிக்கிட்டு என அனைத்து பாடல்களுமே ஹிட்ரகம் தான். அதிலும் படத்தின் இன்ட்ரோ சாங்கான திருநெல்வேலி அல்வா பாடலின் வரிகளில், திருநெல்வேலி அல்வாடா, திருச்சி மலைக்கோட்டைடா திருப்பதிக்கே லட்டு தந்த சாமி டா என ஒவ்வொரு ஊரிலும் பிரபலமாக இருக்கும் ஒரு விஷயங்கள் வரிகளாக வரும்.

இதில் அனைத்து வரிகளையுமே நா. முத்துக்குமார் தயார் செய்துவிட இரண்டு வரிகளுக்கான இடங்கள் காலியாக இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது இயக்குனர் ஹரி, ‘நாட்டுச் சாலை சக்கர, என்னை செக்கு போல சுத்துற’ என்ற வரிகளை கொடுத்துள்ளார். இது பற்றி நா. முத்துக்குமார் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் அர்த்தம் என்ன என்று ஹரியிடம் விளக்கம் கேட்க, நாட்டுச் சாலை என்பது தஞ்சாவூரில் அமைந்திருக்கும் சர்க்கரைக்கு பெயர் போன இடம் என்று விளக்கம் கொடுத்துள்ளார்.

இதனை அவர்கள் இருவருமே நம்பி போக, அவர்கள் இருவரிடமும் ஹரி பொய் சொல்லி உள்ளது தெரிய வந்துள்ளது. நாட்டு சாலை என்பது இயக்குனர் ஹரியின் மனைவியான ப்ரீத்தா விஜயகுமாரின் சொந்த ஊர் ஆகும். இதனால் மனைவியின் சொந்த ஊரை பாடலில் கொண்டு வருவதற்காக ஏற்கனவே ஊரின் பெயர் இடம் பெற்றிருந்த பாடலில் நாட்டுச்சாலை என்ற வார்த்தையை நைசாக பயன்படுத்தியது பற்றி ஒரு நேர்காணலிலும் ஹரி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.