ஒவ்வொருவருக்கும் தன் தந்தை தான் முதல் ரோல் மாடலாக இருப்பார்கள். தன் தந்தையின் குணாதிசயங்கள் எப்படியோ அதையொற்றியே பிள்ளைகளும் வளரும். அப்படி இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு ரோல்மாடலாக இருந்தவர் தான் அவரது தந்தை வாசுதேவ் மேனன். கேரளாவில் பிறந்திருந்தாலும் வளர்ந்தது முழுக்க கௌதம் சென்னையில் தான். இயக்குநர் கௌதம் மேனன் படைப்புகளில் அனைவருக்கும் பிடித்த ஆல் டைம் பேஃவரிட் படமாக இருப்பது வாரணம் ஆயிரம் திரைப்படம்.
கடந்த 2008-ல் வெளிவந்து சூர்யாவின் நடிப்புக்குத் தீனி போட்ட வாரணம் ஆயிரம் திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தில் தந்தை மகன் ஆகிய இரு கதாபாத்திரங்களில் சூர்யா நடித்திருப்பார். இயக்குநர் கௌதம் மேனன் வாரணம் ஆயிரம் கதையை முதலில் தந்தை கதாபாத்திரம் இல்லாமல் தான் எழுதினாராம். ஒரு இளைஞனின் 16 வயது முதல் இராணுவத்தின் கமாண்டோ ஆகும் வரையிலான காலகட்டங்களையே திரைக்கதையாக எழுதி வைத்திருந்தாராம் இயக்குநர் கௌதம் மேனன்.
கோலங்கள் சீரியல் வில்லனுக்கு மிஸ் ஆன சூப்பர் ஹிட் திரைப்படம்.. இருந்தும் டப்பிங்கில் மிரட்டிய ஆதி..
அந்த சமயத்தில் அவரது தந்தைக்கு புற்று நோய் முற்றி இறுதிக் கட்டத்தை எட்டி, இனி உயிர் பிழைப்பது கடினம் என்ற சூழலில் அவரது தந்தை இறந்து போக அவரது இறுதிச் சடங்கின் போது தன் தந்தையிடம் தான் எப்படி வளர்ந்தேன், தந்தையின் குணாதிசயங்கள் எப்படி இருக்கும் என எழுதி அவரது பாக்கெட்டில் வைத்திருந்தாராம் கௌதம் மேனன்.
அதன்பின் சூர்யா, சிம்ரன், கௌதம் மேனன் ஆகிய மூவரும் வாரணம் ஆயிரம் கதை விவாதத்தில் இருக்க அப்போது தந்தை கதாபாத்திரம் பற்றி கூறியிருக்கிறார் கௌதம் மேனன். அப்போது தந்தையாக யாரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்தபோது மோகன் லாலை முயற்சி செய்திருக்கிறார்கள்.
அதன்பின் சூர்யாவே தானே தந்தை கதாபாத்திரத்தில் நடிப்பதாகச் சொல்ல பின் கௌதம் மேனனின் தந்தை வாசுதேவ் மேனனின் புகைப்படங்களை சூர்யாவுக்குக் கொடுத்து அவரைப் போலவே மாற்றியிருக்கிறார் கௌதம் மேனன். இப்படித்தான் வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் அப்பா சூர்யா கதாபாத்திரம் உருவாகியிருக்கிறது. படம் வெளிவந்து தந்தை கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. சூர்யாவுக்கு முக்கியத் திருப்புமுனைப் படமாக அமைந்தது.