விஜய் டிவி எத்தனையோ பிரபலங்களை தமிழ் சினிமா உலகிற்கும், மீடியா துறைக்கும் வழங்கியிருக்கிறது, உருவாக்கி வருகிறது. அப்படி விஜய் டிவி கொடுத்த நடிகர் தான் ரோபோ சங்கர். விஜய்டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலமாக ரியாலிட்டி ஷோவில் அறிமுகமான ரோபோ சங்கர் இன்று பிஸியான நடிகராகி இருக்கிறார். சிவகார்த்திகேயன் மற்றும் ரோபோ சங்கர் ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் விஜய் டிவி-யில் நுழைந்தவர்களே.
கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி கொடுத்த முகவரியால் ரியாலிட்டி காமெடி ஷோவில் ரோபோ சங்கரின் பங்கு அதிகமானது. அதற்கு முன்னர் மேடை நிகழ்ச்சிகளில் காமெடி, மிமிக்ரி செய்து கொண்டிருந்த ரோபோ சங்கர் முழுநேரமாக விஜய்டிவி-யின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கு பெற ஆரம்பித்தார்.
இந்த தருணத்தில் இயக்குநர் கோகுல் தனது முதல் படமான ஜீவா நடித்த ரௌத்திரம் படத்தில் ரோபோ சங்கரை ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறார். இதற்காக ரோபோ சங்கரை தாடி வளர்க்கச் சொல்லியிருக்கிறார். இதனால் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ரோபோ சங்கர் தாடியுடனே இருந்திருக்கிறார். இதனால் இவரை பலருக்கும் அடையாளம் தெரியாமல் இருந்திருக்கிறது.
சிவகார்த்திகேயன்-யோகி பாபு கூட்டணி.. நண்பனுக்கு இத்தனை படங்களைக் கொடுத்த நல்ல மனசு..
தனது முதல் படம் வந்தவுடன் நமது வாழ்க்கை உச்சத்தில் போகப் போகிறது என்ற கனவில் இருந்த ரோபோ சங்கருக்கு பேரிடியாய் இயக்குநர் கோகுல் படத்தின் ரிலீஸூக்கு முதல் நாள் போன் செய்து நீங்கள் நடித்த காட்சி படத்தில் இடம்பெறவில்லை. எடிட்டிங்கில் எடுத்து விட்டோம். தவறாக நினைக்க வேண்டாம். அடுத்த படத்தில் பணியாற்றலாம் என்று கூற, ரோபோ சங்கர் தனது கனவு கலைந்து விட்டதே என்று விரக்தி அடைந்திருக்கிறார். மேலும் ரோபோ சங்கரின் மாமனார் இயக்குநர் கோகுலை திட்டித் தீர்த்திருக்கிறார். இதன்பின் மீண்டும் வழக்கம் போல் காமெடி ஷோவில் பங்கேற்ற ரோபோ சங்கரை சில வருடங்கள் கழித்து மீண்டும் அழைத்திருக்கிறார் இயக்குநர் கோகுல்.
அவரின் இரண்டாவது படமான இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் அவரை நடிக்க வைத்திருக்கிறார். கதைப்படி ரோபோ சங்கருக்கு அந்தப் படத்தில் காட்சிகளே கிடையாதாம். எனினும் முதல் படத்தில் அவரை ஏமாற்றிவிட்டடோமே என்று கோகுல் மனதில் நினைத்து ரோபோ சங்கரை அந்தப் படத்தில் நடிக்க வைத்திருக்கிறார்.
இந்தப் படத்தில் பசுபதியுடன் வந்து உடல் மொழியிலேயே காமெடிப் பட்டாசைக் கொளுத்தியிருப்பார் ரோபோ சங்கர். இந்தப் படம் அவருக்கு ஓப்பனிங்காக அமைய அடுத்து மாரி படம் ரோபோ சங்கருக்கு திருப்புமுனையைக் கொடுத்திருக்கிறது. முதன் முதலாக இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்திற்கான பேனரில் தனது பிரேமும் இருந்தது கண்டு மகிழ்ச்சி அடைந்திருக்கிறார் ரோபோ சங்கர்.