தமிழ் சினிமாவில் மற்ற பல இயக்குனர்களை தாண்டி தான் திரைப்படம் இயக்கும் விதத்தில் வித்தியாசமாக தெரிபவர் தான் பாலா. தமிழ் சினிமாவில் சில குறிப்பிட்ட வகைகளில் ஹீரோவை பல இயக்குனர்களும் வடிவமைத்து வந்த நிலையில் தனது முதல் திரைப்படமான சேதுவில் அப்படியே வித்தியாசமான ஒரு நாயகனையும் பாலா அறிமுகப்படுத்தி இருந்தார். விக்ரம் முன்னணி நாயகனாக நடித்த சேது திரைப்படத்தில் அவர் கடைசியில் பைத்தியமாக மாறுவது போன்று காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.
ஒரு நடிகர் மாசாக வசனம் பேசி, ஃபைட் செய்தால் தான் ரசிகர்கள் விரும்புவார்கள் என்ற காலத்தில் அப்படியே அதனை மாற்றி ஒரு புதிய விதியை எழுதி இருந்தார் பாலா. நந்தா, பிதாமகன், அவன் இவன், நான் கடவுள், பரதேசி என அனைத்து திரைப்படங்களிலும் ஹீரோ இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற தமிழ் சினிமாவின் ஒரு முக்கியமான கோட்பாட்டை உடைத்து புதிதாக தடம் பதித்திருந்தார் பாலா. கடைசியாக இவரது இயக்கத்தில் வெளியான தாரை தப்பட்டை, நாச்சியார், வர்மா உள்ளிட்ட திரைப்படங்கள் அந்த அளவுக்கு பெயர் எடுக்கவில்லை.
பாலாவின் வணங்கான்
அப்படி ஒரு சூழலில் வணங்கான் என்ற திரைப்படத்தையும் பாலா இயக்கி முடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தில் அருண் விஜய் முன்னணி நாயகனாக நடித்துள்ளார். ஜனவரி மாதம் வணங்கான் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் சமீபத்தில் இந்த திரைப்படத்தின் ஆடியோ லான்ச் மற்றும் பாலா தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்து 25 ஆண்டுகளான நிகழ்வும் ஒரு சேர நடந்திருந்தது.
முன்னதாக வணங்கான் திரைப்படத்தில் முதலில் சூர்யா நடித்து வந்த நிலையில் திடீரென அவர் விலகி இருந்தார். இதனால், சூர்யாவுக்கும், பாலாவுக்கும் இடையே பிரச்சனை உருவானதாக கூறப்பட்டது. ஆனால் அவர்கள் இருவரும் இணைந்து வணங்கான் திரைப்பட நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தனர்.
சூர்யா விலகல.. இதான் நடந்துச்சு..
இதனிடையே சமீபத்தில் ஒரு நேர்காணலில், வணங்கான் திரைப்படத்திலிருந்து விலக சூர்யா முடிவெடுத்தது பற்றி சரியான விளக்கத்தையும் பாலா கொடுத்துள்ளார். “சூர்யாவுக்கு எழுதிய கதையில் எந்த மாற்றமும் செய்யாமல் அருண் விஜய் நடித்துள்ளார். ஆனால் சூர்யா விலகுவதாக சொல்வது தவறு. நானும் சூர்யாவும் உட்கார்ந்து பேசி வேறு திரைப்படத்தில் இணையலாம் என்று முடிவெடுத்தோம்.
ஏனென்றால் ரசிகர்கள் அதிகம் வருவார்கள் என்பதால் லைவ் லொக்கேஷனில் சூர்யாவை வைத்து படம் எடுக்க முடியவில்லை. சுற்றுலா தளம் என்பதால் சூர்யாவை வைத்து ஷூட் செய்ய கஷ்டமாக இருந்தது. இது பேசி எடுத்த முடிவு தான். மற்றபடி சூர்யா விலகினார், பாலா விலகினார் என்றெல்லாம் கிடையாது. இப்போது நாங்கள் சுமூகமாக தான் பேசிக் கொண்டிருக்கிறோம். நான் என்ன தவறு செய்தாலும் அதை தட்டி கேட்பதற்கான உரிமை சூர்யாவுக்கு சற்று அதிகமாக தான் கொடுத்திருக்கிறேன்” என பாலா தகுந்த விளக்கத்தையும் கொடுத்துள்ளார்.