தமிழ் சினிமாவில் இயக்குனர் பாலா என்றாலே மிகவும் ஸ்ட்ரிக்ட் ஆனவர், சிரித்து கூட பேச மாட்டார், நடிகர், நடிகைகளை அடிப்பார் என பல வதந்திகள் இருந்து வருகிறது. ஆனால், அதே நேரத்தில் அவர் உருவாக்கும் திரைப்படங்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை வெறும் வார்த்தைகளால் விவரித்து விட முடியாது. அவரது இயக்கத்தில் அடுத்து உருவாகியுள்ள வணங்கான் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
இதனிடையே, பாலா என்ன தான் ஸ்ட்ரிக்ட்டான ஆள் என பலர் குறிப்பிட்டு வந்தாலும் அவருக்கு சினிமா துறையில் மிகவும் பிடித்த மனிதர் என்றால் அது சூர்யா தான். அப்படிப்பட்ட சூர்யா செய்த ஒரு விஷயம் மனதில் பல ஆண்டுகளாக அரித்துக் கொண்டே இருப்பதை பற்றி சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சில கருத்துக்களை இயக்குனர் பாலா தெரிவித்துள்ளார்.
மூளையில் பிரச்சனை
இது தொடர்பாக பேசும் பாலா, “சூர்யா பற்றி ஒரு விஷயம் நீண்ட நாட்களாக மனதில் அரித்து கொண்டே இருக்கிறது. நானும் சூர்யாவும் இணைந்த நந்தா திரைப்படத்தை நான்கு பேர் தயாரித்திருந்தனர். அதில் ஒருவர் தான் வெங்கி நாராயணன் என்பவர். அவருக்கு சூர்யா வயதுக்கு நிகராக இருக்கும். இவர் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு சென்று குடிபெயர்ந்தவர். அங்கே திடீரென வெங்கி நாராயணனுக்கு மூளையில் ஏதோ பிரச்சனை உருவாகி அது பெரிதாக மாறவும் தொடங்கியுள்ளது.
இதன் பின்னர் சென்னை ஈசிஆரில் தங்கி இருந்து சிகிச்சை மேற்கொண்டு வந்தார். அப்போது அவரை நான் பார்ப்பதற்காக சென்ற போது என்னை யார் என்று தெரியாமல் யோசித்தவர், ஒன்று முதல் ஐந்து வரை எண்ணி விட்டு நீங்கள் பாலா தானே என்று கேட்டார். அதன் பின்னர் அவருடன் பேசிக் கொண்டிருந்த போது திடீரென மூளை ஆஃப் ஆகி சிறிது நேரம் கழித்து மீண்டும் ஒன்று முதல் ஐந்து வரை எண்ணி நந்தா படத்தில் நடித்த சூர்யாவை பார்க்க வேண்டும் என்றும் விரும்புவதாக கூறினார்.
மனசுல உறுத்திக்கிட்டே இருக்கு
இது பற்றி நான் சூர்யாவிடம் கூற அவரே நேரடியாக வெங்கி நாராயணனை சந்தித்து இரண்டு மணி நேரம் அவருடன் பேசி ஆறுதல் கூறிவிட்டு கிளம்பினார். சூர்யா சந்தித்து விட்டு வந்த 2 மாதங்களுக்குள் வெங்கி நாராயணனும் உடல் நலக்குறைவால் உயிரிழந்து விட்டார். அவர்களின் சாஸ்திரப்படி உடனடியாக உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்ற நிலை இருக்க, இது பற்றி சூர்யா எனக்கு அதிகாலையில் அழைத்து ‘வெங்கி தவறிவிட்டார் அண்ணா’ என்று கூறினார்.
இதன் பின்னர், தான் வெங்கி வீட்டில் இருப்பதாக கூறிய சூர்யா அடுத்து ஒரு வார்த்தை சொன்னார். ‘அண்ணா வெங்கி நாராயணன் பெசன்ட் நகர் வந்து விட்டார்’ என கூறினார். வெங்கி வந்துட்டார் என கூறிய சூர்யா, பாடி அல்லது பிணம் வந்து விட்டது என ஒரு வார்த்தை கூறவில்லை. பிணம் என்று சொல்வது கூட தப்பு என நினைப்பவர் தான் சூர்யா” என மனமுருகி குறிப்பிட்டிருந்தார் பாலா.