தமிழ் சினிமாவில் மற்ற இயக்குனர்கள் அனைவரையும் தாண்டி தனது கதை சொல்லும் ஸ்டைலில் மாறுபட்டு விளங்கும் ஒரு இயக்குனர் தான் பாலா. பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனர்களாக பணிபுரிந்து சாதித்த பிரபல இயக்குனர்கள் தமிழ் சினிமாவில் ஏராளம் பேர் உள்ளனர். அதில் முக்கியமான ஒருவராக இருக்கும் பாலா, விக்ரமை வைத்து இயக்கிய முதல் திரைப்படமான சேது மூலம் மிகப்பெரிய ஒரு தாக்கத்தை தமிழ் சினிமாவில் ஏற்படுத்தியிருந்தார்.
தாக்கத்தை ஏற்படுத்திய பாலா
சேது, நந்தா, பிதாமகன், பரதேசி, நான் கடவுள் என பாலா இயக்கத்தில் உருவான திரைப்படங்களில் வரும் நாயகர்களே மிக வித்தியாசமாக இருப்பதுடன் தமிழ் சினிமாவின் டெம்ப்ளேட் ஹீரோக்களில் இருந்து அப்படியே மாறுபட்டும் இருப்பார்கள். அது மட்டுமில்லாமல் இயல்பான மக்களின் வாழ்க்கையை அதே வேதனை மற்றும் ரணங்களுடன் திரையிலும் பிரதிபலிக்கும் திறன் படைத்த பாலா சமீபத்தில் இயக்கிய ஒரு சில திரைப்படங்களில் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.
இதனிடையே அருண் விஜய்யுடன் பாலா கூட்டணி வைத்த முதல் திரைப்படமான வணங்கான், ஜனவரி மாதம் பத்தாம் தேதி பொங்கல் விருந்தாக வெளியாக உள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு பாலாவின் இயக்கத்தில் ஒரு திரைப்படம் வெளியாக உள்ள சூழலில், அதன் பாடல்கள் மற்றும் ட்ரெய்லரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இதன் காரணமாக திரைப்படத்தின் மீதும் அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ள நிலையில் பாலா கம்பேக் கொடுப்பார் என்ற நம்பிக்கையும் ரசிகர்கள் மத்தியில் உள்ளது. இதனிடையே வணங்கான் திரைப்படத்தில் முதலில் சூர்யாவும், மலையாள நடிகையான மமீதா பைஜூ உள்ளிட்டோரும் தான் நடித்து வந்தனர். ஆனால் சில காரணங்களால் அவர்கள் விலக, அருண் விஜய் உள்ளே வந்தார்.
மமிதா எனக்கு மகள் மாதிரி..
பாலா தனது திரைப்படத்தில் நடிகர், நடிகைகளை அடிப்பார் என வதந்தி இருந்து வரும் சூழலில் மமிதா பைஜூவையும் இளம் நடிகை என பாராமல் கைநீட்டி அடித்து விட்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் அது பற்றி சமீபத்தில் ஒரு நேர்காணலில் விளக்கமும் கொடுத்துள்ளார் பாலா. “மமிதா பைஜூ என் மகள் மாதிரி. அவளை நான் அடிப்பேனா. அதுவும் யாராவது பெண்ணை கைநீட்டி அடிப்பார்களா?.
எனக்கு மேக்கப் பிடிக்காது என்பது தெரியாமல் பாம்பேயில் இருந்து வந்த ஆர்ட்டிஸ்ட் ஒருவர் மமிதா பைஜூவுக்கு மேக்கப் போட தொடங்கி விட்டார். எனக்கு மேக்கப் பிடிக்காது என்பதை மமிதாவுக்கு சொல்லவும் தெரியவில்லை. ஷாட் ரெடி என அழைத்த போது மேக்கப் போட்டுக் கொண்டிருப்பது தெரிந்ததும் ‘யார் மேக்கப் போட சொன்னார்கள்?’ என கையை மட்டும் ஓங்கினேன். அதையே நான் அடித்ததாக செய்தி பரவ தொடங்கி விட்டது” என விளக்கம் கொடுத்துள்ளார் பாலா.