“சிக்குனா சீமான செஞ்சுகிட்டே இருக்கக் கூடாது“ : செய்தியாளர்களைக் கலாய்த்த சீமான்

By John A

Published:

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு இன்று பிறந்தநாள். தமிழ் சினிமாவில் இயக்குநர் மணிவண்ணன், பாரதிராஜா போன்றோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி பின் பாஞ்சாலங்குறிச்சி படம் மூலமாக இயக்குநர் அவதாரம் எடுத்த சீமான் அதன்பின் சத்தியராஜ் நடித்த வீரநடை என்ற படத்தை இயக்கினார்.

பல ஆண்டு இடைவெளிக்குப்பின் மாதவன் நடிப்பில் உருவான தம்பி படத்தை இயக்கினார். பின்னர் மீண்டும் மாதவனை வைத்து வாழ்த்துக்கள் படத்தையும் இயக்கினார் சீமான். இதில் பாஞ்சாலங்குறிச்சி, தம்பி படங்கள் பெரிய வரவேற்பைப் பெற்றன. தம்பி 2 இயக்கப் போவதாகவும் செய்திகள் வலம் வந்தன.

தொடர்ந்து பல படங்களில் வசனகார்த்தாவாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வந்த சீமான் பின் தமிழ் ஈழ விடுதலைக்கு ஆதரவாக கருத்துக்களைத் தெரிவித்து பின்னர் அதிரடியாக அரசியலில் புகுந்தார்.  கடந்த 2010 தான் நடத்தி வந்த நாம் தமிழர் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றினார்.

அதிரடி பேச்சுக்களாலும், கருத்துக்களாலும் அரசியல் களத்தை எப்போதும் பரபரப்பாக வைத்திருப்பதில் சீமானை விட்டால் வேறு யாருமில்லை என்னும் அளவிற்கு மக்கள் பிரச்சினைகள் மற்றும் போராட்டங்களில் பங்கெடுத்து குரல் கொடுத்து வருகிறார். மேலும் ஒவ்வொரு தேர்தலிலும் வேட்பாளர்களை  நிறுத்தி  கனிசமான வாக்குக்களைப் பெற்று அரசியல் அரங்கில் தன்னுடைய செல்வாக்கை நிரூபித்து வருகிறார்.

இதனிடையே செய்தியாளர்களைச் சந்தித்த சீமானிடம் விஜய்யின் அரசியல் வருகை குறித்துக் கேட்டபொழுது, “தம்பி விஜய் உறுதியாக அரசியலுக்கு வருவார் என்றும், படங்களில் நடிப்பதை நிறுத்திவிடுவார் என்றும் அதன்பின் நாங்கள் அவருடன் சேர்வோமா என்பது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என்றும் என்னிடம் எதையும் கேட்காதீர்கள் தம்பி விஜய்யிடம் போய் கூட்டணி குறித்துக் கேளுங்கள் எனக் கூறினார்.

நம்ம முதல்வர் ஸ்டாலினா இது : சினிமாவுல இப்படி ஒரு பஞ்ச் வசனமா?

மேலும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடப் போவதாகவும் அதில் ஆண் வேட்பாளர்கள் 20 பேரையும், பெண் வேட்பாளர்கள் 20 பேரையும் நிறுத்தப் போவதாகக் கூறினார்.  சிக்குனா சீமான செஞ்சுக்கிட்டே இருக்கக் கூடாது“ என்றும் செய்தியாளர்களைக் கலாய்த்தார்.

சீமானின் பிறந்த நாளுக்கு நடிகர் விஜய், இபிஎஸ், அண்ணாமலை, அன்புமணி,  உள்பட அரசியல் பிரமுகர்கள், திரையுலகினர் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.