எந்தப் படமாக இருந்தாலும் அதன் வெற்றிக்கு முக்கியமான காரணம் என்னன்னு தெரியுமா? இதுதான்…

By Sankar Velu

Published:

தமிழ்ப்படங்களின் சுவாரசியத்தை அதிகமாக்குவது எது என்றால் காட்சி அமைப்புகளை விட அதில் பிரதானமாக இருப்பது வசனங்கள் தான். ஒவ்வொரு கேரக்டரும் என்ன பேசுகிறது என்பதைக் கவனிக்கும்போது நாம் அந்தக் கேரக்டருடனே பயணம் செய்வது போல இருக்கும். அதற்கு காரணம் அந்தக் கேரக்டர் பேசும் இயல்பான வசனங்கள் தான். அப்படி நெஞ்சைத் தொட்ட வசனங்கள் நிறைய இருந்தாலும் ஒரு சிலவற்றை மட்டும் இங்கு பார்க்கலாம்.

எழுத்தாளர் சுஜாதா எந்திரன் படத்தில் ஒரு வசனம் எழுதியிருப்பார். விஞ்ஞானி வசீகரனாக வருவார் ரஜினிகாந்த். அவர் கண்டுபிடித்த சிட்டி என்ற ரோபோவை பலர் கேள்வி மேல் கேள்வி கேட்பார்கள்.

எல்லாக் கேள்விகளுக்கும் டக் டக் என்று சிட்டி ரோபோ பதில் சொல்லிவிடும். கடைசியாக ஒரு கேள்வி கேட்பார்கள். அசத்தலான கேள்வி. அதுதான் கடவுள் இருக்கிறாரா என்ற கேள்வி. இதற்கு ரோபோ என்ன பதில் சொல்லும் என்று பலரும் மிகுந்த ஆர்வத்துடன் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது ரோபோ சொன்னது தான் ஹார்ட் டச்சிங். என்னைப் படைத்தது டாக்டர் வசீகரன். வசீகரன் இருக்கிறார். எனவே கடவுள் இருக்கிறார் என்று பதில் சொன்னது.

Anniyan
Anniyan

சுஜாதாவின் வசனங்களைப் படித்தாலே போதும். ஒரு புத்தகம் படித்த மனநிறைவு கிடைக்கும். குறிப்பாக முதல்வன், அந்நியன் போன்ற படங்களைப் பாருங்கள். இந்த உண்மை புரியும்.

தில்லு முல்லு படத்திற்கு வசனம் எழுதியவர் விசு. படத்தில் டயலாக்கில் பின்னிப் பெடல் எடுத்திருப்பார். அந்தப் படத்தில் ஒரு காட்சியில் சௌகார் ஜானகி கேட்கிறார். அம்மா வேஷம் போட்டா, ஜனங்க ஒத்துக்குவாங்களான்னு. அதற்கு ரஜினி சொல்கிறார். ஜனங்கள் இல்லை. ஒரே ஒரு ஜனம். அவர் ஒத்துக்கிட்டா போதும். அதே படத்தில் இன்னொரு காட்சி வருகிறது.

அதில் மாதவி, அப்பா நீங்களா பார்த்து, ஒரு துரும்பை கிள்ளி போட்டா கூட கல்யாணம் பண்ணிக்கிறேன் என்று. அதற்கு தேங்காய் சீனிவாசன் சொல்வார். துரும்பு எல்லாம் வேண்டாம். சந்திரன கல்யாணம் பண்ணிக்கோ. கரும்பு மாதிரி இனிப்பான் என்பார். என்ன ஒரு எதுகை நயம் என்று பாருங்கள்.

நடிகர் சோவின் வசனம் ரொம்பவே சூப்பராக இருக்கும். அவரது ஆயிரம் பொய் படம் போய் பாருங்கள். என்ன ஒரு அருமையான வசனம் என்பது தெரிய வரும். அடுத்ததாக கிரேசி மோகனின் வசனத்தைச் சொல்லலாம். கமல், கூட்டணியில் கிரேசி மோகன் வசனம் எழுதிய எல்லா படங்களுமே சூப்பர்ஹிட் தான்.

அதே போல சர்வர் சுந்தரம் படத்தில் கூட நாகேஷ் சொல்லும் ஒற்றை வரி வசனம் ஒரு ஹார்ட் டச்சிங் பாயிண்டாக இருக்கும். நான் என் நண்பன்கிட்டே தானே தோற்றேன் என்று சொல்வார். உண்மையான நட்புக்கு இது ஒரு அருமையான வசனம்.