ஆரம்ப காலத்தில் சினிமாவில் நடிக்கவே விருப்பம் இல்லாமல் துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன் உள்ளிட்ட படங்களில் நடிக்க ஆரம்பித்து இன்று சர்வதேச அளவில் முன்னணி நடிகராக இருப்பவர் தான் தனுஷ். தந்தையின் இயக்கத்தில் உருவான திரைப்படத்தில் நடிகராக அறிமுகமான தனுஷ், பின்னர் சகோதரர் செல்வராகவன் திரைப்படத்திலும் நடித்திருந்தார். ஆரம்பத்தில் இவரது படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்று வந்த நிலையில் பின்னர் திருடா திருடா உள்ளிட்ட சில திரைப்படங்கள் கமர்சியல் வெற்றியை பெற்றதுடன் மட்டுமல்லாமல் முன்னணி நடிகராகவும் இன்று அவரை மாற்றியுள்ளது.
தனது நடிப்பிலும் தன்னை கொஞ்சம் கொஞ்சமாக தேற்றிக் கொண்டே இருந்த தனுஷ், இன்று கோலிவுட்டை தாண்டி பாலிவுட், சர்வதேச மொழி திரைப்படங்கள் வரைக்கும் உயர்ந்து விட்டார். அதேபோல அவெஞ்சர்ஸ் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய பிரபல இயக்குனர்களின் ஹாலிவுட் திரைப்படம் ஒன்றிலும் தனுஷ் நடித்தது பெரிய அளவில் கவனம் ஈர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நடிகராக ஒவ்வொரு திரைப்படத்திலும் புது பரிமாணத்தை தனுஷ் காட்டிக்கொண்டிருந்த சூழலில் தான் இயக்குனர் அவதாரத்தையும் பவர் பாண்டி என்ற திரைப்படத்தின் மூலம் எடுத்திருந்தார். இந்த படத்தில் ராஜ்கிரண், ரேவதி, மடோனா செபாஸ்டியன், தனுஷ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்த நிலையில் நல்ல ஒரு வெற்றி படமாகவும் அமைந்திருந்தது.
இதனை தொடர்ந்து தற்போது ராயன் என்ற திரைப்படத்தையும், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தையும் இயக்கி வருகிறார். இதற்கு மத்தியில் பவர் பாண்டி படப்பிடிப்பின் போது ராஜ்கிரணுக்காக தனுஷ் கோபப்பட்டது தொடர்பான செய்தியை பற்றி பார்க்கலாம். நடிகர் தனுஷின் தந்தை கஸ்தூரிராஜா மிகப் பெரிய இயக்குனர் என்பது அனைவருக்குமே தெரியும்.
அவரது இயக்கத்தில் உருவான முதல் திரைப்படம் என் ராசாவின் மனசிலே என்ற படத்தில் ராஜ்கிரண் தான் நாயகனாக நடித்திருப்பார். இதனால் தனுஷின் குடும்பத்திற்கும் ராஜ்கிரணுக்குமான நெருக்கம் பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. அது மட்டும் இல்லாமல் தனுஷை மருமகன் என்ற ஸ்தானத்தில் தான் ராஜ்கிரணும் பார்த்து வந்துள்ளார்.
அப்படி இருக்கையில் தான் தனது இயக்கத்தில் உருவான முதல் திரைப்படத்திலேயே ராஜ்கிரண் நடிக்க வேண்டும் என விருப்பப்பட்டு அவரை நடிக்க வைத்துள்ளார் தனுஷ். பவர் பாண்டி படத்தின் படப்பிடிப்பின் போது ராஜ்கிரண் இடைவேளையில் புகைபிடிக்க சென்றதாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில் ஷாட் ரெடி என படத்தின் துணை இயக்குனர் வந்து அவரை அழைக்க இதனை கவனித்த தனுஷ், ஐயா புகை பிடிக்கும் போது அவரை தொந்தரவு செய்யக்கூடாது என்றும் அவர் வரும் போது வரட்டும் என்றும் கண்டித்துள்ளார்.
அதே போல, அங்கிருந்த ஒருவர் தெரியாமல் ராஜ்கிணை உரசியதாகவும் கூறப்படுகிறது. இதனையும் தனுஷ் கவனித்ததோடு அவரிடம் கோபப்பட்டு உடனடியாக அந்த நபரை ராஜ்கிரணிடம் மன்னிப்பு கேட்கும்படியும் அறிவுறுத்தி உள்ளார். இப்படி தன்னை மிக பத்திரமாக பவர் பாண்டி படத்தின் படப்பிடிப்பில் பார்த்துக் கொண்டார் தனுஷ் என ஒரு பேட்டியில் ராஜ்கிரணே தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.