ராயன் படத்தினை இயக்கி நடித்த தனுஷ் அப்படத்தின் வெற்றிக்குப் பின்னர் தற்போது கைவசம் 7 படங்களை வைத்திருக்கிறார். இதனால் அவரது கால்ஷீட் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நிரம்பி வழிகிறது. தற்போது தனுஷின் 55-வது படத்தினை இயக்குகிறார் ராஜ்குமார் பெரியசாமி. அமரன் படத்தின் வெற்றிக்குப் பின்னர் ராஜ்குமார் பெரியசாமி அடுத்து தனுஷை இயக்கப் போகிறார் என்ற செய்திகள் உலாவந்தது.
தற்போது அதனை உறுதிப்படுத்தும் வகையில் இன்று தனுஷ் 55 படத்திற்கான பூஜை போடப்பட்டது. கோபுரம் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தினை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். விரைவில் நடிகர் நடிகைகள், தொழில்நுட்பக் குழுவினர் குறித்த அறிவிப்பு வெளியாகும்.
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி கடந்த 2017-ம் ஆண்டு கௌதம் கார்த்திக் நடித்த ரங்கூன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இப்படம் பர்மா தங்கக் கடத்தலை மையமாகக் கொண்டு ஆக்சன் படமாக அமைந்திருந்தது. ஏ.ஆர். முருகதாஸ் இப்படத்தினைத் தயாரித்திருந்தார்.
அடேங்கப்பா இந்தப் பாடல்களில் இவ்ளோ விஷயம் இருக்கா…! தமிழ் சினிமாவின் சில வித்தியாசமான பாடல்கள்..
இதனையடுத்து மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக்கை ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் உலகநாயகன் கமலஹாசன் தயாரிக்க அமரன் படத்தினை இயக்கினார். இப்படம் வெளியாகி வசூல் மழை பொழிந்து வரும் வேளையில் தற்போது அடுத்து தனுஷுடன் இணைந்திருக்கிறார் ராஜ்குமார் பெரியசாமி.
தற்போது தனுஷ் இளையராஜா பயோபிக், குபேரா, இட்லிக் கடை, தேரே இஷ்க் மேன், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், மேலும் அவர் இயக்கியுள்ள நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என வரிசையாக லைன் அப்-ல் இருக்கிறார். தனுஷ் 55 பட பூஜையில் இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.