தமிழ் சினிமா கண்ட காமெடி நடிகர்கள் வரிசையில் நாகேஷ், என்.எஸ். கிருஷ்ணன், கவுண்டமணி, செந்தில் என அடுத்த இடத்தில் நிச்சயம் வடிவேலுவை நாம் சொல்லலாம். ஆரம்பத்தில் சிறிய சிறிய காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வந்த வடிவேலுவுக்கு ‘தேவர் மகன்’ படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்திருந்தது. இதற்கு காரணம் அதுவரை அதிகம் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்த வடிவேலு, தேவர் மகன் படத்தில் ஒரு குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்திருந்தது தான்.
காமெடி கதாபாத்திரங்களில் அதிகமாக வடிவேலு தோன்றியிருந்தாலும் சங்கமம், தேவர்மகன் உள்ளிட்ட திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்கள் ஏற்று நடித்திருந்தது இன்னும் அவரை ஒரு சிறந்த நடிகர் என மக்கள் மத்தியில் அடையாளப்படுத்தி இருந்தது. அவரது முகபாவனைகள், உடல் அசைவுகள், வசனங்கள் என எதைப் பார்த்தாலும் சிரிப்பு வரும் அளவுக்கு மிகத் தேர்ந்த ஒரு கலைஞன் தான் வடிவேலு. 90ஸ் கிட்ஸ், 2K கிட்ஸ் என இனி எத்தனை கிட்ஸ்கள் வந்தாலும் எத்தனை மீம்ஸ்கள் உருவானாலும் அதில் எல்லாம் வடிவேலு நிச்சயம் இருப்பார்.
நாளுக்கு நாள் எத்தனை மீம்ஸ்களை நாம் சமூக வலைத்தளங்களில் கடந்து வந்தாலும் அவற்றில் பாதிக்கு பாதி நாம் நிச்சயம் வடிவேலுவின் முகத்தை தான் பார்க்க முடியும். அந்த அளவுக்கு வடிவேலு முக பாவனைகள் ஒருவரின் வாழ்க்கையில் அனைத்து சூழ்நிலைகளும் தொடர்புபடுத்தி கொள்ளலாம். வடிவேலு இப்படி ஒரு மிகப்பெரிய கலைஞனாகி இருந்தாலும் அவரது மறைந்த தம்பியும் ஒரு சில படங்களில் நடித்துள்ளது பற்றிய தகவல் பலருக்கும் தெரியாத ஒன்று தான். அது குறித்து தற்போது காணலாம்.
வடிவேலுவின் தம்பியான ஜெகதீஸ்வரன், கடந்த ஆகஸ்ட் மாதம் காலமானார். சகோதரரின் உடலைக் கண்டு வடிவேலு கலங்கி அழுதது, பலரையும் மனம் நொறுங்க வைத்திருந்தது. முன்னதாக, அவரது தம்பி ஜெகதீஸ்வரன், அண்ணன் வடிவேலுவை போல சினிமாவில் பெரிய ஆளாக வர வேண்டும் என ஆசைப்பட்டதாக தெரிகிறது.
அதன்படி, மலைக்கோவில் தீபம், காதல் அழிவதில்லை உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்காத சூழலில் குடும்ப சொத்து பிரச்சனை காரணமாக ஜெகதீஸ்வரன் வாழ்க்கை வேறு பக்கம் திரும்பியது. சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்காதது ஒரு பக்கம், சொத்து தகராறு ஒரு பக்கம் என சினிமாவை விட்டு விலகிய ஜெகதீஸ்வரன், சொந்தமாக ரெடிமேட்ஸ் வியாபாரம் பார்த்து வந்தார்.
சினிமாவில் அண்ணனை போல காமெடி நடிகராக வேண்டும் என்ற கனவு நிறைவேறாமலே வடிவேலுவின் சகோதரர் ஜெகதீஸ்வரன் மறைந்து போனது சினிமா கனவு இருக்கும் பலருக்கும் வேதனையான செய்தி தான்.