சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு காமெடி நிகழ்ச்சி மூலம் போட்டியாளராகப் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றவர் தான் தங்கத்துரை. மொக்க ஜோக் தங்கத்துரை என்று பெயர் வாங்கியவர். ரியாலிட்டி ஷோக்களில் பங்குபெற்று அடிக்கடி கடிஜோக்குகளைக் கூறிக் கொண்டே இருப்பதால் இவருக்கு இந்தப் பெயர் வந்தது. தொடர்ந்து சின்னத்திரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற தங்கத்துரைக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது.
தொடர்ந்து பல படங்களில் காமெடியனாக நடிக்க ஆரம்பித்தார். இன்று பாலா, புகழ் உள்ளிட்டோர் வரிசையில் கதாநாயகர்களுடன் காமெடி ரோலில் கலக்கிக் கொண்டிருக்கிறார் தங்கத்துரை. தற்போது டீசல், ஜல்சா, சலூன் என அவர் கைவசம் ஏராளமான படங்கள் இருக்கிறது. இந்நிலையில் தங்கத்துரை தான் புதிதாக வாங்கியுள்ள பி.எம்.டபிள்யூ காரில் ஏழைக்குழந்தைகளை அதில் அமர வைத்து ஒரு ஜாலி ரைடு சென்று அவர்களுக்குத் தேவையான புத்தாடை உள்ளிட்டவற்றை வாங்கிக் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து தங்கத்துரை கூறுகையில், சிறு வயதிலிருந்தே எனக்கு நிறைவேறாத ஏக்கங்கள் பல உண்டு. அந்த ஏக்கங்களைத் தான் தற்போது குழந்தைகள் மூலமாக நிறைவேற்றி வருகிறேன். என்னுடைய தந்தை கூலித் தொழிலாளி. வீட்டில் என்னுடன் பிறந்தவர்கள் 4 பேர். அனைவரும் மிகவும் கஷ்டப்பட்டுத் தான் டிகிரி படித்தோம். அதன்பின் சிறு சிறு வேலைகள் செய்து பின் சின்னத்திரையில் நுழைந்து சினிமாவுக்கு வந்தேன்.
நான் புதிதாக வாங்கியுள்ள பி.எம்.டபிள்யூ சன் ஃரூப் காரில் குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டும் என்ற ஆசையை சமூக சேவகர் ஒருவரிடம் கூறினேன். ஏற்கனே அவர் கேட்டதற்கிணங்க நிறைய குழந்தைகளுக்கு கல்விக்கு உதவி செய்திருக்கிறேன்.
தற்போது இந்த ஆசையையும் அவரிடம் கூறியதால் வியாசர்பாடி பகுதியிலுள்ள ஏழைக் குழந்தைகள் இருக்கும் பகுதிக்குச் சென்று அவர்களை சன்ஃரூப் காரில் ஏற்றி சென்னையைச் சுற்றி வந்தேன். அவர்களுடன் உணவருந்தி, அவர்களுக்கு தேவையானவற்றை வாங்கிக் கொடுத்தேன் என்றும் இந்தச் செயல் தனக்கு மனநிறைவைத் தருவதாகவும் தங்கத்துரை பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.
குழந்தைகளுடன் அவர் பி.எம்.டபிள்யூ காரில் செல்லும் வீடியோ தற்போது வைரலாகி வருவதால் அவருக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.