தமிழ் சினிமாவின் காமெடி நாயகர்களில் என்.எஸ்.கலைவாணர், தங்கவேலுவுக்கு அடுத்தபடியாக காமெடி வேடங்களில் கலக்கியவர் சந்திரபாபு. அவரின் தனிப்பட்ட வாழ்க்கை இருண்ட பக்கங்களாக இருந்த போதிலும் சினிமாவில் அவர் செய்த சாதனைகள் ஏராளம். குறைந்த படங்களிலேயே நடித்திருந்தாலும் இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாத கலைஞனாகத் திகழ்கிறார். பாடகராகவும் பல தத்துவப் பாடல்களைப் பாடியிருக்கிறார் சந்திரபாபு.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு ஈடாக சில திரைப்படங்களில் நடித்துப் பெயர் வாங்கியிருக்கிறார் சந்திரபாபு. அப்படி இவர்கள் இருவரும் இணைந்து நடித்த படம் தான் ‘சபாஷ் மீனா’. தமிழ் சினிமாவின் எவர்கீரீன் கிளாசிக் காமெடிப் படங்களில் காதலிக்க நேரமில்லை போன்ற படங்களில் வரிசையில் சபாஷ் மீனா படத்திற்கும் தனி இடம் உண்டு.
1958-ல் வெளியான இந்தத் திரைப்படத்தினை பி.ஆர்.பந்தலு தயாரித்து, இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் இரட்டை வேடத்தில் சந்திரபாபு அதகளம் செய்திருப்பார். ஹீரோவாக சிவாஜிகணேசனுடன் கடைசி வரை வரும் நண்பன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் சந்திரபாபு. இந்தப் படத்தின் கதையை பி.ஆர். பந்தலு சிவாஜியிடம் கூறும் போது அதில் வரும் நண்பன் கதாபாத்திரத்திற்கு சந்திரபாபு நடித்தால் நன்றாக இருக்கும் என விருப்பம் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து பி.ஆர்.பந்தலு சந்திரபாபுவிடம் கதையைக் கூற அதனைக் கேட்ட சந்திரபாபு, “மிஸ்டர் சிவாஜி ஒரு குட் ஆக்டர். என் டேலன்ட்டை புரிஞ்சிக்கிட்டுருக்கார்” என்றார். நடிகர் திலகத்தை பெயர் சொல்லி அழைக்கவே தயங்கும் காலத்தில் சந்திரபாவுவின் இந்தப் பேச்சு பி.ஆர்.பந்தலுவுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
சுந்தர் சி யை கெட்ட வார்த்தையில் திட்டிய மணிவண்ணன்…இதுக்கா அவ்ளோ திட்டு.. ஏன் தெரியுமா?
இதேபோல் எம்.ஜி.ஆரை பெயர் சொல்லி அழைப்பவர் நடிகை பானுமதி. அவர் எம்.ஜி.ஆரை மிஸ்டர் ராமச்சந்திரன் என்றுதான் அழைப்பாராம். எம்.ஜி.ஆருக்கும் திரையில் முன்னோடியாகத் திகழ்ந்தவர் பானுமதி.
இந்நிலையில் சபாஷ்மீனா படத்தில் நடிப்பதற்காக சம்பளம் பற்றி பி.ஆர்.பந்தலு கேட்கையில் சந்திரபாபு, “சிவாஜிக்கு என்ன சம்பளம் கொடுக்கிறீர்களோ அதைவிடக் கூடுதலாக ஒரு ரூபாய் கொடுங்கள்” என்று கேட்டிருக்கிறார். இதை பந்தலு சிவாஜியிடம் கூறியபோது கலகலவெனச் சிரித்த சிவாஜி, “அவன்கிட்ட திறமை இருக்கு. அப்படித்தான் சொல்லுவான். அவன் கேட்டதைக் கொடுத்திடுங்க. இல்லைன்னா இந்தப் படத்தை கைவிட்டுடுங்க” என்று கூறினாராம்.
சந்திரபாபு கேட்டது போலவே சிவாஜியை விட அதிகம் சம்பளம் கொடுத்து அந்தப் படத்தில் சந்திரபாபுவை நடிக்க வைத்தார்களாம். இவ்வாறு தமிழ் சினிமாவில் முதன்முதலாக ஒருலட்ச ரூபாய் சம்பளம் வாங்கிய காமெடி நடிகர் சந்திரபாபு தான் என்பது குறிப்பிடத்தக்கது.