ஐபிஎல் மேட்ச்களில்.. கோலியை பும்ரா அவுட் செய்த போதெல்லாம் நடந்த மேஜிக்.. மிரண்டு பார்க்கும் ரசிகர்கள்..

By Ajith V

Published:

நடப்பு ஐபிஎல் தொடரில் பல பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் அவர்களுக்கெல்லாம் சிம்ம சொப்பனமாக விளங்கி வருகிறார் இந்திய அணி நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி. பாப் டூப்ளிசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, ஆறு போட்டியில் ஆடி முடித்துள்ள நிலையில் ஒன்றில் மட்டுமே வெற்றி கண்டு புள்ளி பட்டியலிலும் கடைசி இடத்தில் உள்ளது. விராட் கோலியை தவிர எந்த வீரரும் தொடர்ச்சியாக நல்லதொரு ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் இருந்து வரும் நிலையில் பந்துவீச்சும் படுமோசமாக உள்ளது.

ஆர்சிபி 250 ரன்கள் அடித்தால் கூட அதனை எதிரணியினர் எளிதாக எட்டிவிடும் அளவுக்கு தான் பெங்களூர் அணியின் பந்துவீச்சும் இருந்து வருகிறது. பினிஷிங் ரோலை தினேஷ் கார்த்திக் சிறப்பாக செய்து வரும் வேளையில் தொடக்க பேட்ஸ்மேன்கள் யாரும் நன்றாகவே ஆடவில்லை. அப்படி இருக்கையில் தோல்வியும் கண்டு, அணியும் சரியாக இல்லாதபோது ஆர்சிபி ரசிகர்களுக்கு இருக்கும் ஒரே மனநிறைவு விராட் கோலி பேட்டிங் ஃபார்ம் தான். இதுவரை நடந்து முடிந்துள்ள ஆறு போட்டிகளில் விராட் கோலி ஒரு சதம் மற்றும் இரண்டு அரை சதங்களுடன் 319 ரன்கள் எடுத்துள்ளார்.

டி 20 உலக கோப்பையிலும் அவர் பேட்டிங் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ள நிலையில் மீதமுள்ள போட்டிகளில் பெங்களூர் அணி தோற்றாலும் விராட் கோலி நன்றாக ஆடினால் போதும் என்ற அளவுக்கு அந்த அணியின் ரசிகர்கள் வந்துவிட்டனர். கடைசி போட்டியில் விராட் கோலியை மூன்று ரன்களில் அவுட் எடுத்திருந்தார் பும்ரா. ஒருவேளை விராட் கோலி நின்றிருந்தால் இன்னும் 30 ரன்கள் வரை ஆர்சிபி அணி அடித்திருக்கவும் வாய்ப்பு உருவாகி இருக்கும் என்ற நிலையில் ஆரம்பத்திலேயே அவரது விக்கெட்டை காலி செய்து பட்டையை கிளப்பினார் பும்ரா.

மேலும் இதுவரை நடைபெற்றுள்ள ஐபிஎல் போட்டிகளில் மொத்தம் ஐந்து முறை கோலியை அவுட் செய்துள்ளார் பும்ரா. அப்படி இருக்கையில் இந்த ஐந்து விக்கெட்டுகளில் மூன்று முறை விராட் கோலியை பும்ரா அவுட் எடுத்ததில் உள்ள கனெக்ஷனை தான் தற்போது ரசிகர்கள் வியப்புடன் பார்த்து வருகின்றனர். அதை பற்றி தற்போது பார்க்கலாம்.

ஐபிஎல் தொடரில் பும்ராவின் முதல் விக்கெட் விராட் கோலி தான். அதே போல இந்த தொடரில் பும்ராவின் 100 வது விக்கெட், விராட் கோலி தான். மேலும் சமீபத்தில் நடந்து முடிந்த போட்டியில் பும்ரா கோலியை அவுட் செய்தது அவரது 151 வது விக்கெட்டாகவும் அமைந்திருந்தது. இப்படி மூன்று முக்கிய மைல்கல்லில் கோலி விக்கெட்டை வைத்து பும்ரா தொடங்கியுள்ளது தான் தற்போது பலரையும் வியந்து பார்க்க வைத்துள்ளது.