தமிழ் சினிமாவில் விமர்சனம் என்பது அந்த கால 40களிலேயே தொடங்கி விட்டது. லட்சுமிகாந்தன் என்ற பத்திரிக்கையாளர் அந்த காலத்தில் சினிமாக்காரர்கள் பலர் பற்றி எழுதியதை பலரால் சகிக்க முடியவில்லை. சொல்லி சொல்லி பார்த்து கடைசியில் அவர் கொலை செய்யப்பட்டார்.
சென்னை வேப்பேரியில் ரிக்ஷாவில் வந்து கொண்டிருந்த லட்சுமிகாந்தனை ஒரு கும்பல் கொலை செய்தது.
விமர்சனம் என்பது மிக நாகரீகமாகவும் நேர்த்தியாகவும் குறைகளை சடாரென சொல்லி, நிறைகளையும் தெளிவாக சொல்லும் விமர்சனமாக இருக்க வேண்டும் சமீப காலமாக அவ்வாறு இல்லை.
விமர்சனத்துக்கு எப்போதும் புகழ்பெற்றது ஆனந்த விகடன் பத்திரிக்கை அவர்களின் விமர்சனத்தின் சிறப்பு என்ன என்றால் மார்க். சரியானதொரு மார்க்கை சரியான முறையில் குறிப்பிட்ட படத்திற்கு அளித்திருக்கும்.
இருப்பினும் அன்னக்கிளி படத்திற்கு விகடன் அந்த நேரத்தில் அளித்திருந்த விமர்சனத்தில் முதல் படம் இசையமைத்த இளையராஜாவை பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லாத விஷயமெல்லாம் விமர்சன உலகின் அபத்தமாகவே கருதப்படுகிறது. அதே நேரத்தில் கமல் நடித்த நாயகன் படத்தின் விமர்சனத்தில் படத்தின் பாடல்களை குறை சொல்லி இருந்ததும் அதற்கு மாறாக இன்று வரை பாடல்கள் ஹிட் ஆக இருப்பதும் விமர்சனத்தை நம்பக்கூடாது நம் மனதுக்கு பட்டதைதான் செய்ய வேண்டும் என்று உணர்த்துகிறது.
விகடன் இதழின் விமர்சனமும் முன்பு போல் இல்லை.விகடன் இதழில் எத்தனை மார்க் என்று பார்க்கும் பழக்கமும் இப்போது பெரும்பாலோருக்கு இல்லை.
குமுதம் இதழின் விமர்சனத்தை அந்த காலம் தொட்டே குமுதத்தின் ஆசிரியர் எஸ்.ஏ.பி அண்ணாமலை செட்டியார் எழுதி இருக்கிறார். அந்த விமர்சனங்கள் பெரிய அளவில் பேசப்பட்டது. இப்போது வரும் விமர்சனங்கள் சூப்பர் என்று சொல்ல முடியாத ரகம்தான்
70. 80களில் பெரும்பாலும் எழுத்து விமர்சனங்கள் தான் பத்திரிக்கைகளில் சினிமா விமர்சனம் படிக்கும்போது மனம் ஏனோ வானில் பறக்கும் அதுவும் நம் அபிமான நடிகரின் படம் என்றால் கேட்கவே வேண்டாம்.
சேட்டிலைட் சேனல் வந்த பிறகு டாப் டென் மூவிஸ் என்ற சன் டிவி நிகழ்ச்சியில் ஜேம்ஸ் வசந்தன்,சுரேஷ்குமார், உள்ளிட்டோர் டாப் டென் மூவிஸ் நிகழ்ச்சியை நடத்தினார்கள்.சன் டிவி தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து வந்த பல நிகழ்ச்சிகள் மாற்றப்பட்டு விட்டன. இந்த நிகழ்ச்சி மட்டுமே 20 வருடத்துக்கும் மேலாக தொடர்ந்து வரும் நிகழ்ச்சியாகும். இது மிகப்பெரிய சாதனையாகும். ஒரே தொகுப்பாளரான சுரேஷ்குமாரே இந்த நிகழ்ச்சியை நடத்துவது அதை விட சிறப்பான விஷயமாகும்.
இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு விமர்சனம் செய்ததாக சினிமா உலகில் புகார் எழுந்தது. இப்போது தாக்கும் ப்ளு சட்டை மாறனை போலவே டாப் டென் மூவிஸ் நிகழ்ச்சிக்கும் சினிமா எதிர்ப்பாளர்கள் இருந்தனர்.
வெகுண்டெழுந்த சத்யராஜ் போன்ற நடிகர்கள் நாங்க கஷ்டப்பட்டு படம் எடுக்குறோம் அதை கால் மேல் கால் போட்டுக்கொண்டா விமர்சிக்கிறீர்கள் என தான் நடித்த கல்யாண கலாட்டா படத்தில் இதற்கென ஒரு காட்சி வைத்து அந்த விமர்சகரை வறுத்து எடுத்திருப்பார்.
தற்போதைய இணைய உலகில் பலரும் விமர்சனம் செய்கிறார்கள். எல்லோரும் விமர்சகர்களே ப்ளூ சட்டை மாறன் போன்றோர் சாதாரணமாக விமர்சனம் செய்து கொண்டிருந்ததை. விவேகம் படத்தின் விமர்சனத்தை எதிர்மறையாக விமர்சனம் செய்ததால் மிகப்பெரும் விமர்சகராக உயர்ந்தார். இவர் மீதும் படத்தின் நெகட்டிவான விசயங்களை மட்டுமே சொல்வதாக குற்றம் சொல்லப்படுகிறது. சமீபத்தில் சார்லி சாப்ளின் 2 பட தயாரிப்பாளர் அம்மா கிரியேசன்ஸ் சிவா ப்ளூ சட்டை மாறன் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்த நிகழ்வுகளும் தொடர்கிறது.
மொத்தத்தில் சிறப்பான முறையில் படங்களின் விமர்சனத்தை நாம் பார்க்க வேண்டுமென்றால் பூதக்கண்ணாடியை வைத்து நாம் இதழ்களையும் , இணைய இதழ்களையும் தற்காலத்தில் தேட வேண்டியுள்ளது.