இயக்குனர் பாலச்சந்தர் அவர்களால் பொய்க்கால் குதிரை படத்தின் மூலம் அறிமுகமானவர் சார்லி. தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த சார்லி காமெடியில் பல பரிமாணங்களை வெளிப்படுத்தியவர்.
இவர் ஒரு சிறந்த புத்தக பிரியர் நன்கு படித்தவர். சார்லியின் சினிமா நகைச்சுவை காட்சிகள் பல படங்களுக்கு தூணாக இருந்திருக்கிறது.
பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை போன்ற படங்களில் சார்லியின் நகைச்சுவை காட்சிகள் தூக்கலாக இருக்கும்.
இயக்குனர் பாசில் இயக்கிய தமிழ் படங்கள் அனைத்திலுமே சார்லிக்கு சின்ன கதாபாத்திரத்தையாவது கொடுக்காமால் இருக்க மாட்டார். சார்லிக்கும் பாசில் படங்களுக்கும் உள்ள செண்டிமெண்டா என தெரியவில்லை.
பாசில் மட்டுமல்ல நீங்கள் கவனித்து பார்த்தீர்கள் என்றால் மலையாள இயக்குனர்கள் தமிழில் இயக்கிய பெரும்பாலான படங்களில் சார்லிக்கு ஒரு கதாபாத்திரம் கொடுத்திருப்பார்கள். பிரியதர்ஷனின் கோபுர வாசலிலே, சித்திக்கின் ப்ரண்ட்ஸ், மது இயக்கிய மெளனம் சம்மதம் இப்படி பல படங்களை சொல்லலாம்.
பாசில் இயக்கிய அரங்கேற்றவேளை, பூவிழி வாசலிலே படங்களில் சார்லி ஒரு பாடல் காட்சியில் மிக சில வினாடிகளே வருவார் அதற்கு வேறு யாராவது சாதாரண முன் பின் தெரியாத துணை நடிகர் கூட நடித்து விட்டு போகலாம் எதற்காக பாசில் தொடர்ந்து சார்லியை பயன்படுத்தினார் என தெரியவில்லை. சார்லி நடித்தால் படம் ஹிட் என்ற செண்டிமெண்ட்டை மலையாள இயக்குனர்கள் வைத்திருந்தார்களோ என இந்த நிகழ்வுகள் சந்தேகம் கொள்ள வைக்கிறது
ரஜினிகாந்த், கமல், என 80களின் நட்சத்திரங்கள் தொடங்கி அதற்கு அடுத்ததாக விஜய், அஜீத் போன்றோருடனும் நடித்து தற்போதைய தலைமுறை நடிகர்களுடன் நடித்து வரும் சார்லியின் நடிப்பு நகைச்சுவை என்றில்லாது குணச்சித்திர வேடங்களிலும் போற்றும் வகையில் இருக்கும்.
பேட்டரி போடல என்று இவர் பேசிய அந்த ஒற்றை வரி காமெடி இன்று பல மீம்ஸ்களுக்கு உதவி செய்கிறது.
சார்லியின் காமெடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படம் இயக்குபவர்களில் இயக்குனர் விக்ரமனும் ஒருவர்.
சேரன் இயக்கிய வெற்றிக்கொடி கட்டு, கதிர் நடித்த கிருமி உள்ளிட்ட படங்களில் சார்லியின் நடிப்புக்கென தனிப்பட்ட முறையில் மிகப்பெரும் அவார்டே கொடுக்கலாம்.
பிறந்த நாள் காணும் சார்லியை அவரது நண்பர் விவேக் டுவிட்டரில் வாழ்த்தியுள்ளார் நாமும் வாழ்த்துவோம்.