தேவராட்டம் முழு விமர்சனம்

By Staff

Published:

குட்டிப்புலி,கொம்பன், மருது, கொடிவீரன் படங்களுக்கு பிறகு முத்தையா இயக்கி வெளிவந்திருக்கும் படம் இது. தெக்கத்தி மக்களை கவரேஜ் செய்றது மாதிரி தேவராட்டம் என்று பெயர் வைத்திருக்கிறார்.

5418f3520c1905eeadade8f46be53bf7-1

தியேட்டர் வாசலுக்கு சென்றாலே கெளதம் கார்த்திக்கின் தீவிர ரசிகர்கள் ரத்தச்சிவப்பு எழுத்துக்களோடு உள்ள வந்தா வெட்டுவேன் என்ற ரேஞ்சுக்கு பொறந்தோம் வளர்ந்தோம்னு இருக்க கூடாது நல்லதுக்காக நாலு பேரை பொளந்தோம்னு இருக்கணும்னு ஆளுயர பேனர் வச்சிருக்காங்களே கொடூரமா இருக்கே டயலாக்னு நெனச்சி உள்ள போனா படம் ஆரம்பிச்சு கொஞ்ச நேரத்துல கெளதம் கார்த்திக்கே அந்த படத்துல அந்த வசனத்த பேசுறார்.

படத்தின் கெளதம் கார்த்திக்கின் ஓபனிங்கில் இருந்து இடைவேளை வரை மாஸ் சீன்கள்தான்.ஃபைட் சீக்வன்ஸ் இருக்கலாம் அதற்காக இவ்வளவு இருக்க கூடாது எத்தன.

நிவாஸ் கே பிரசன்னாவின் அதிரடி இசை படத்துக்கு கை கொடுத்திருக்கிறது. மதுரை பளபளக்குது மல்லிகைப்பூ மணமணக்குது பாடலில் அதிரடி காட்டி இருக்கிறார் இசையமைப்பாளர். தியேட்டரே எழுந்து நின்று ஆடுகிறது.

இப்போதைக்கு இருக்கும் கெளதம் கார்த்திக்கின் எதிர்கால வளர்ச்சிக்கு எந்த மாதிரியான படங்கள் தேவை என்றால் விஜய் நடித்த கில்லி, விக்ரம் நடித்த தில், தூள் டைப் படங்கள்தான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

இதற்கு முன் கடலில் ஆரம்பித்து ஹரகரமகாதேவகி போன்ற அடல்ஸ் ஒன்லி காமெடிபடங்கள், மிஸ்டர் சந்திரமெளலி மற்றும் சாதாரண காதல் படங்களில் கெளதம் கார்த்திக் நடித்து வந்தார் இவரை விமர்சித்த பத்திரிக்கைகள், கெளதம் கார்த்திக் இது போல வேகமுள்ள ஆக்சன் படங்களில் நடித்தால்தான் முன்னணி ஹீரோ அந்தஸ்தை பெற முடியும் என்று எழுதியதை அவர் ஏற்றுக்கொண்டு அதற்கு முத்தையாவின் படம்தான் சரியாக இருக்கும் என்று எண்ணி இந்த படத்தில் நடித்திருக்கிறார்.

அதற்காக முன்பே யூகிக்க முடிந்த காட்சிகள், பார்த்து பார்த்து சலித்துப்போன குடும்ப உறவுகள், ஒரே ஸ்டைல்களில் வரும் கொடூர வில்லன்கள் என பார்த்து பார்த்து சலித்து போன கதாபாத்திரங்களை மீண்டும் மீண்டும் கண் முன் காட்டும்போதுதான் கண்னை கட்டுகிறது.

ஒரு பெண்ணுக்கு நியாயம் கேட்க போய் வில்லனுக்கு எல்லாமுமாய் இருக்கும் மகனை கெளதம் கார்த்திக் கொன்று விட, மகனை கொன்றவனை வஞ்சம் தீர்க்க மதுரையை நடு நடுங்க வைக்கும் கொடூர வில்லன் கொடும்பாவி கணேசனாக வருகிறார் பெப்ஸி விஜயன்.

நான் தான் கொல்வேன் அவனை . என் மகன் இறந்து 16 நாட்களுக்குள் கெளதம் கார்த்திக்கை கொடூரமாக மதுரையே நடுங்கும்படி கொல்வேன் என சபதமிடுவதும்.

வில்லனிடம் இருந்து கெளதம் கார்த்திக் எப்படி தப்பித்தார் வில்லனை எப்படி பழி தீர்த்தார் என்பதை குடும்ப உறவுகள் கலக்க சொல்லி இருக்கிறார்.

கடைக்குட்டி சிங்கம் படம் போல அக்கா மகளை கல்யாணம் செய்ய முடியாது அது தங்கச்சி மாதிரி என்று டயலாக் வேறு கெளதம் பேசுகிறார்.

நாலைந்து அக்காக்கள், போஸ் வெங்கட்டை தவிர மீதியுள்ள அக்காள் கணவர்கள் எல்லாம் காமெடியர்கள்.

செண்டிமெண்டாக பாசமுள்ள அக்காவும் அவரது கணவர் போஸ் வெங்கட்டும் வேறு கொடூரமாக கொல்லப்படுகிறார்.

இறுதியில் வெகுண்டெழுந்து வில்லனை பழி தீர்க்க கெளதம் கார்த்திக் எடுக்கும் வியூகம்தான் கதை.

படத்தின் ப்ளஸ் முதல் பாதி தேவையில்லாத சண்டை காட்சிகள், பார்த்து பழகிய காட்சிகள் என்றாலும் படம் போனது தெரியவில்லை ஜெட் வேகம்தான்.

இரண்டாம் பாதியில் தான் தடுமாறி இருக்கிறார் இயக்குனர். சொல்லிய கதையாகவே இருந்தாலும் படத்தை முடிக்க முடியாமல் எதற்கெடுத்தாலும் கொலை, வெட்டு என கறிக்கடைக்காரர் பிராய்லர் கோழியை வெட்டுவதை போல வெட்டிக்கொண்டே இருக்கிறார் வில்லன். பதிலுக்கு கெளதம் கார்த்திக்கும் வெட்டுகிறார். ஓவர் டோஸாக அரிவாள், வெட்டு, குத்து, ரத்தங்கள் படத்தில் அதிகமாக இருக்கிறது.

இதற்கு முன் எத்தனையோ ஆக்சன் படங்கள் வந்துள்ளன. ஏன் முத்தையாவின் படங்களே வந்துள்ளன. அதில் கொஞ்சம் காமெடி,ரொமான்ஸ், ஒரு அழகிய மெலடி பாடல், கொஞ்சம் ஆக்சன் என இருக்கும். ஆனால் இதில் எல்லாமே ராவாக இருக்கிறது.

கேரளக்குயில் மஞ்சிமாவை மதுரைக்கார பெண்ணாக்கி மருந்துக்கு கூட ஒரு அழகிய காதல் பாடலோ, காதல் காட்சிகளோ வைக்கவில்லை இயக்குனர்.

உர்ரெனவே படம் முழுக்க வருகிறார் மஞ்சிமா உர்ரெனவே போகிறார். இருக்கும் ஒரு சில பாடல் காட்சிகளும் போதிய விசேஷமில்லை.

சூரி இருக்கிறார் ஆனால் காமெடி இல்லை படத்தில். மற்ற காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் இல்லாமல் வெட்டு குத்து என்றே போகிறது படம்.

இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் மதுரைன்னாலே இப்டி வெட்டுவாய்ங்கன்னு கதை சொல்ல போறாங்கன்னு தெரியல.

மதுரை பின்புலமாக கொண்ட கதையில் கனா கண்டேன் படத்தில் வர்ற மாடர்ன் லுக்கில் ப்ரித்விராஜ் போன்ற வில்லன்களோ, தனி ஒருவனில் வரும் அரவிந்த்சாமி போன்ற வில்லன்களோ வர மாட்டார்களா? எப்பவுமே ரத்தமும் சதையும் கொண்ட முரட்டு மனிதர்கள் அழுக்கேறிய வில்லன்கள்தான் மதுரை சம்பந்தப்பட்ட கதையில் வரும் மனிதர்களா?

மதுரை வன்முறைக்கு மட்டுமே அடையாளமா? ஒரு துப்பறியும் கதையை ஆக்சன் கலந்து சரிவிகிதத்தில் மதுரை பின்புலத்தில் எடுக்க முடியாதா? அரிவாள், கத்தி, கம்புகளுடனே தொடர்ந்து படமெடுத்தால் அதுவும் யூகிக்க கூடிய பழைய பார்மெட்டிலேயே எடுத்தால் எப்படி முத்தையா சார். அடுத்த படத்துலயாவது கதையை மாத்துங்க களத்தையும் மாத்துங்க.

Leave a Comment