கடந்த 1988ம் ஆண்டு வெளிவந்த கண் சிமிட்டும் நேரத்தில் கொலையாளியை கண்டுபிடிக்கும் ஒரு எஸ். ஐ வேடத்தில் நடித்து அறிமுகமானவர் சரத்குமார். அந்த பட தயாரிப்பாளரும் இவரே. அந்த படம் இவருக்கு கை கொடுத்தாலும் அதற்கு பிறகு இவர் நடித்த படங்கள் சின்ன சின்ன வில்லத்தனம் உள்ள படங்களே. அந்த நேரத்தில் வந்த பல படங்களில் இவர் சின்ன சின்ன வில்லத்தனம் செய்திருப்பார்.
மெளனம் சம்மதம், புதுப்பாடகன்,புதுமனிதன் உள்ளிட்ட படங்களில் வில்லத்தனம் செய்திருந்தாலும் இவரை மக்களிடையே பிரபலப்படுத்திய படம் விஜயகாந்த் நடித்த புலன் விசாரணை படம். பாடி பில்டர் என்று அந்த நேரத்தில் ரசிகர்களால் புகழப்பட்டார் சரத். க்ளைமாக்ஸ் காட்சியில் விஜயகாந்துடன் தனது ஜிம் பாடியை காண்பித்து சரத் போடும் சண்டை நன்றாக ரீச் ஆனது.
அதே நேரத்தில் ஆர்.கே செல்வமணி இயக்கத்தில் வந்த கேப்டன் பிரபாகரன் படத்தில்தான் சில வருட இடைவேளைக்கு பிறகு ஹீரோவாக பாஸிட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்தார். அதற்கு பிறகு எண்ணற்ற கதாபாத்திரங்களில் நடித்த சரத்குமாருக்கு முதலில் கை கொடுத்த படம் சேரன் பாண்டியன் இந்த படத்தின் வெற்றி அவருக்கு பெரிய வரவேற்பை கொடுத்தது.
நட்சத்திர நாயகன், மூன்றாவது கண், ஐ லவ் இந்தியா,கட்டபொம்மன், சாமுண்டி , ஊர்மரியாதை உள்ளிட்ட வெற்றிப்படங்களில் நடித்து வந்த சரத்துக்கு 94ம் ஆண்டு வந்த நாட்டாமை படம் மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது. பல ஊர்களில் ஹவுஸ்புல் போர்டு போடப்பட்ட படம் இது.
சரத்குமாருக்கு இப்படியொரு வெற்றி திரும்பவும் கிடைக்குமா என்பது யோசித்து பார்க்க முடியாத ஒன்று. அத்தோடு இவரின் மார்க்கெட் மிக வேகமாக எகிறியது. இப்படத்தை இயக்கிய கே.எஸ் ரவிக்குமாரின் பல படங்களில் சரத் இருந்தார்.
அதே போல் விக்ரமன் இயக்கத்தில் இவர் நடித்த சூர்ய வம்சம் படமும் இன்னொரு நாட்டாமையாக மிகப்பெரும் வெற்றியை இவருக்கு கொடுத்தது.
தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத நடிகர்களில் சரத்குமாரும் ஒருவர். இப்போது அவரின் மகள் வரலட்சுமி சரத்குமாரும் சினிமாவில் கலக்கி வருகிறார்.
அரசியலிலும் ஈடுபட்ட சரத் அதிலும் வெற்றி பெற்றார். இன்று அவரின் பிறந்த நாள் ஆகும்.