கடந்த 1986ல் வந்த நீதானா அந்தக்குயில் என்ற படத்தில் இடம்பெற்ற பூஜைக்கேத்த பூவிது என்ற பாடலில் அறிமுகம் ஆனவர் சித்ரா. அதற்கு முன்பே இவர் பாடிய பூவே பூச்சூடவா படம் ரிலீஸ் ஆகி இருந்தது. அதில் இடம்பெற்ற சின்னக்குயில் பாடும் பாட்டு காதில் கேட்குதா என்ற பாடல் பட்டி தொட்டி எல்லாம் ஹிட் ஆகி இருந்தது. ஆனால் அதற்கு முன்பே நீதானா அந்த குயிலில் பாடி இருக்கிறார். படம் கொஞ்சம் தாமதமாக வந்திருக்க கூடும்.
கிருஷ்ணன் நாயர் சாந்தகுமாரி சித்ரா என்ற குடும்ப பெயரே கே.எஸ் சித்ரா என்ற பெயரில் இவர் அழைக்கப்படுவதற்கு காரணம்.
இசைஞானி இளையராஜாவின் இசையில்தான் சித்ரா அதிகம் பாடல்கள் பாடி இருக்கிறார். சின்னக்குயில் என்று ரசிகர்கள் பெயர் வைத்ததை 100க்கு 200 சதவீதம் நிரூபித்தவர் சித்ரா.
இனிமையான குரல் வளம் கொண்டவர் சித்ரா என்பது அனைவருக்கும் தெரிந்த விசயம்.
தேசிய விருது, பத்மஸ்ரீ விருது உள்ளிட்ட இந்தியாவின் உயரிய விருதுகளை பெற்றுள்ளார் சித்ரா.
கேரள அரசின் சார்பில் சிறந்த பாடகர்களுக்கு ஆண்டுதோறும் ஹரிவராசனம் விருதை 2017ம் ஆண்டு கேரள அரசு வழங்கியது.
முதல் ஹரிவராசனம் விருது பாடகர் கே.ஜே.ஜேசுதாசுக்கு வழங்கப்பட்டது. அதன்பிறகு பாடகர்கள் ஜெயச்சந்திரன், ஜயன், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எம்.ஜி.ஸ்ரீகுமார், கங்கை அமரன் ஆகியோருக்கு அந்த விருது வழங்கப்பட்டு அந்த வரிசையில். 2016-17-ம் ஆண்டுக்கான ஹரிவராசனம் விருதுக்கு சினிமா பின்னணி பாடகி கே.எஸ்.சித்ரா தேர்வு செய்யப்பட்டு விருதும் பெற்றுள்ளார்.
சபரிமலை ஐய்யப்பன் கோவிலின் தீவிர பக்தையாவார் இவர். இருமுடி சுமந்து கோவில் சென்று வருவதையும் வழக்கமாக வைத்துள்ளார் இவர்.
சினிமாவில் இவர் பாடிய பாடல்களை சிலாகித்து சொல்ல இந்த கட்டுரையில் முடியாத காரியம் . ஒரு பாடல் என்றால் எளிதாக சொல்லி விடலாம் ஆனால் பாடிய அனைத்தும் தேன் சொட்டும் பாடல் என்பதால் எந்த பாடலை சிலாகித்து சொல்வது என்ற குழப்பம் வந்து விடும்.
இன்று பிறந்த நாள் காணும் சின்னக்குயில் சித்ரா அம்மாவின் பிறந்த நாள் சிறக்கவும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறோம்.