தமிழில் சட்டம் என் கையில் படத்தின் மூலம் அறிமுகமானவர் சத்யராஜ். தமிழ்நாட்டின் கொங்கு மண்டலமாம் கோவை மாநகரத்தில் இருந்து வந்த முக்கிய நடிகர்களில் ஒருவர் இவர்.
வாட்டசாட்டமாக ஆறடி அங்குலத்தில் இவர் இருந்ததால் பழைய திரைப்படங்களில் வில்லன்களின் அடியாட்களில் ஒருவராகவே நடித்து வந்தார் சத்யராஜ்.
அந்த நேரங்களில் முழு வில்லனாக நூறாவது நாள், 24 மணி நேரம் உள்ளிட்ட சில படங்களில் தனது முழுத்திறமையை காண்பித்து கொடூர வில்லனாக நடித்திருந்தார். 100வது நாள் படத்தின் மொட்டை கெட் அப் வெகுவாக பேசப்பட்டது. 24மணி நேரம் படத்தில் எக்ஸ் டபிள்யூ ராமரத்தினம் என்ற கேரக்டரில் கொடூர வில்லனாக நடித்திருந்தார்.
முதன் முதலில் கார்த்திக் ரகுநாத் இயக்கிய சாவி திரைப்படத்தில் ஆன் ட்டி ஹீரோவாக வேடமேற்றார். அதாவது கதாநாயகன் இவர்தான் ஆனால் கெட்டவன். அதனால் இவர் முதன் முதலில் கதாநாயகனாக நடித்தது இந்த படம் என்று ஆகிறது.
இருப்பினும் பாரதிராஜா இயக்கிய கடலோர கவிதைகள் படமே இவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. முன்னணி நடிகர் அந்தஸ்தை பெற்றுக்கொடுத்தது. அந்த நேரத்தில் வந்த முதல் மரியாதை படத்திலும் சின்னதொரு கதாபாத்திரம்தான் செய்திருப்பார் அதுவே அருமையாக பேசப்பட்டது.
தொடர்ந்து ஜல்லிக்கட்டு, வேதம் புதிது உள்ளிட்ட படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். அதிலும் ஜல்லிக்கட்டு படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் இணைந்து அதிரடியாக வில்லன்களை பழிவாங்கும் கதாபாத்திரத்தில் கலக்கி இருப்பார். சிவாஜி கணேசனுடன் பின்பு புதிய வானம் என்ற படத்திலும் தொடர்ந்து நடித்தார்.
இவரின் முழுத்திறமையை வெளிக்கொண்டு வந்தது இயக்குனர் மணிவண்ணன், ஒரே ஊர்க்காரர் என்பதால் இவங்க கெமிஸ்ட்ரி எப்பவுமே ஒர்க் அவுட் ஆகி விடும். நூறாவது நாள், அமைதிப்படை, 24 மணி நேரம், சின்னத்தம்பி பெரியதம்பி, புது மனிதன் என எல்லாமே இவர்களின் கூட்டணியில் வெற்றிப்படைப்புகள் ஆகும்.
என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, பூவிழி வாசலிலே போன்ற திரைப்படங்கள் இவருக்கு பெரிய வெற்றியை கொடுத்த புகைப்படங்கள்.
பி. வாசு இயக்கத்தில் இவர் நடித்த வால்டர் வெற்றிவேல் படம் இவரின் திரையுலக வாழ்க்கையில் ஒரு முக்கிய மைல்கல். வேலை கிடைச்சிடுச்சு நடிகன் என சத்யராஜ் நடித்த படங்கள் எல்லாமே அடி தூள் ரகம்தான்.
நக்கலாக சிரிப்பது, ஸ்டைலான மேனரிசத்துடன் வில்லத்தனத்தை வெளிப்படுத்துவது, கவுண்டமணியுடன் சேர்ந்து படங்களில் கலக்குவது என அனைத்து தரப்பினரையும் கவர்ந்தவராக சத்யராஜ் இருந்தார்.
தற்போது பாகுபலி வரை வித்தியாசமான கதாபாத்திரங்களை செய்தும் அண்ணன், அப்பா, கதாபாத்திரங்களில் நடித்தும் கலக்கி வருகிறார் சத்யராஜ்.
இன்று பிறந்த நாள் நடிகர் சத்யராஜ் அவர்களை வாழ்த்துவோம்.