இன்று முருகனுக்குரிய கந்த சஷ்டி நாள். கந்த சஷ்டி என்ற உடன் ஞாபகம் வருவது திருச்செந்தூர், திருச்செந்தூர் என்ற உடன் ஞாபகம் வருவது திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் என்ற பக்திபாடல். இப்படி பக்தி மார்க்கத்தையும் முருககடவுளின் அருளையும் மக்களுக்கு எளிதில் புரியும் வகையில் முருகப்பெருமான் பற்றிய வரலாற்றையும் முருகனின் திருவருளுக்கு உள்ளான பக்தர்களின் வாழ்வில் நடந்த அதிசயங்களையும் பக்தர்களுக்கு திரைப்பட வடிவில் கொடுத்தவர் சாண்டோ சின்னப்பா தேவர். இவர் கோவையில் இருந்து சென்னைக்கு சென்று சினிமா படங்களை தயாரித்தவர்.
இவர் மிகப்பெரும் முருக பக்தர் ஆவார். கோவையில் உள்ள மருதமலை முருகன் கோவிலின் தீவிர பக்தர் இவர். இவர் முருக பக்திக்கென்றே ஸ்பெஷலாக தயாரித்த படங்கள் தான் திருவருள், துணைவன், தெய்வம் போன்ற படங்கள்.
தன்னுடைய படங்களில் அந்த நேரத்தில் புகழ்பெற்றிருந்த ஆன்மிக சொற்பொழிவாளர்களையும், இறை பக்தி பாடகர்களையும் நடிக்க வைத்து விட வேண்டும் என பெரு முயற்சி செய்து தனது தெய்வம் படத்தில் மறைந்த ஆன்மிகவாதி அய்யா திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளை நடிக்க வைத்தார். இதில் இவர் மட்டுமல்லாது அப்போதைய இறை பக்தி பாடகர்கள் மதுரை சோமுவை மருதமலை மாமணியே என்ற பாடலை பாடவைத்தும், சீர்காழி கோவிந்தராஜன், டி.எம். செளந்தர்ராஜனை வைத்து திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் பாடலையும், பிரபல பக்தி பாடகிகள் சூலமங்களம் சகோதரிகளை வைத்து வருவாண்டி தருவாண்டி மலையாண்டி பாடலையும், பிரபல முருக பக்தி பாடகர் பித்துக்குளி முருகதாஸை வைத்து நாடறியும் நூறு மலை பாடலையும் , திருச்செந்தூரில் போர் புரிந்து பாடலை ராதா ஜெயலட்சுமி சகோதரிகளை வைத்தும் பாட வைத்திருந்தார்.
ஆன்மிக சொற்பொழிவாளராக அறியப்பட்ட கிருபானந்த வாரியாரை வைத்து தெய்வம் படத்தில் ஆறு முருகன் கோவில்கள் அடிப்படையில் அந்த பகுதியில் நடைபெற்றதாக சொல்லப்பட்ட கதைகளின் அடிப்படையில் முருகன் பக்தர்கள் வாழ்வில் நடத்திய திருவிளையாடல்களை சொல்ல வைத்து கிருபானந்த வாரியாரை சொற்பொழிவு நடத்துபவராகவே காண்பித்திருந்தார்.
இவரின் திருவருள் படத்திலும் முருக பக்தி பற்றிய கதைதான் இது. இவரின் ஒவ்வொரு முருக பக்தி படத்திலும் அசல் முருக பக்தி நடிகராகவே நடித்து அசத்தியவர் நடிகர் ஏவிஎம் ராஜன் அவர்கள்.
முருக பக்தி படங்களுக்காகவே அதிக படங்களை தயாரித்தவர் சாண்டோ சின்னப்பா தேவர்.