இசைஞானி இளையராஜாவின் இசைதான் பலருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்றாக உள்ளது. லாரி டிரைவர் விடிய விடிய ஓட்டும் சரக்கு லாரியில் இளையராஜா பாடல்களை சவுண்ட் சிஸ்டத்தில் அலற விட்டபடியே சென்றால்தான் அவருக்கு களைப்பே இருக்காது. அதிகாலை டீக்கடைக்காரர் பட்டையடித்து பாய்லரில் டீ போட ஆரம்பித்த உடனேயே இளையராஜா பாட்டுதான்.
ட்ரெய்ன், பஸ் பயணங்கள், ஜன்னலோர சீட்டு இளையராஜா பாட்டு, அழகிய மாலை வேளையில் மழை பெய்தால் அப்போது மனதை வருடும் இளையராஜா பாட்டு என இளையராஜாவின் பாட்டை ரசித்தவர்கள் ரசித்து கொண்டிருப்பவர்கள் அதிகம்.
என்னதான் புதிய படங்கள் வந்தாலும் அதில் சிறு பொன்மணி அசையும், வளையோசை கல கல, பொன்னோவியம் கண்டேனம்மா எங்கெங்கும் என பழைய இளையராஜாவின் காதல் பாடல்களை ஆங்காங்கே ஒலிக்க விட்டால்தான் அப்படமே சிறக்கிறது.
ஸ்ம்யூல் உள்ளிட்ட நவீன பாடல் கூடிய செயலிகள், டிக் டாக் உள்ளிட்ட செயலிகளில் இளையராஜாவின் பாடல்களை பாடுவது, ஆடுவது என எல்லாவற்றிலுமே நீக்கமற நிறைந்துள்ளவர் இளையராஜாதான்.
நீண்ட தூர பயணங்களுக்கு சிறிது நேரம்தான் லேட்டஸ்ட் குத்துப்பாடல்களை கேட்க முடியும். ஆனால் இளையராஜாவின் பாடல்களை ஒலிக்க விட்டால் சென்று செல்லும் இடத்திற்கான தூரம் ஒரு பெரிய விசயமாக தெரியாது.
தமிழர்கள் வாழ்வோடு வாழ்வாக பின்னி பிணைந்து விட்ட இசைஞானி இளையராஜாவும் அவரின் பாடல்களும் பின்னணி இசையும் ரசிகர்களுக்கு என்றும் மறக்காது.
இன்று இசைஞானி இளையராஜாவின் அன்னக்கிளி படம் ரிலீஸ் ஆன நாள். இவர் அறிமுகமாகி இன்றுடன் 44 வருடங்கள் ஆகி விட்டது.