இளையராஜாவிடம் ட்ரம்மராக பல படங்களுக்கு பணியாற்றிய ட்ரம்மர் புருஷோத்தமன் இன்று மறைந்தார். அவரது மறைவையொட்டி இசைக்கலைஞர்கள் பலர் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
இளையராஜாவிடம் புல்லாங்குழல் இசைக்கலைஞராக பணியாற்றுபவரும் பின்னணி பாடகரும் பாடலாசிரியருமான அருண்மொழி அவர்கள் தன் சக கலைஞன் ஆன புருஷோத்தமன் பற்றி தன் கண்ணீர் நினைவுகளை பகிர்ந்துள்ளார்.
அன்பு புருஷோத்தமன் அவர்களே,
தாங்கள் மறைந்த அந்தத் துயரச் செய்தி தங்கள் தமையன் திரு.சந்திரசேகர் வழியாக அறிந்தேன்! நானுட்பட இசைக்கலைஞர்கள் அத்துனை பேரும் அதிர்ந்து போனோம்! தொலைபேசி வாயிலாக துக்கத்தை பறிமாரி ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் சொல்லிக்கொண்டோம்!
தாங்கள் மறைந்துபோனாலும் தங்களின் இதயத் துடிப்பைத் தாளங்களாக்கி எத்தனை எத்தனை விதங்களில், கிட்டத்தட்ட இசைஞானியின் எல்லாப் பாடல்களிலும் முத்திரை பதித்துவிட்டே இறையடி பயணித்திருக்கிறீர்கள்!
ஒரு முறை துபாயில் நடந்த இசைநிகழ்ச்சியில் இசைஞானி தங்களை அறிமுகம் செய்கையில் தாங்கள் அன்னக்கிளி தொடங்கி இன்றுவரை உடன் பயணித்துக்கொண்டிருப்பவர் என்பதைச்சொல்லி, தன்னுடன் தோளோடு தோள்கொடுத்து கடினமாய் உழைப்பவர் என்று சிலாகித்ததை நினைவு கொள்கிறேன். எனக்குத் தெரிந்து வேறு யாரையும் இது போல இசைஞானி சென்னதில்லை என்று நினைக்கிறேன்.
தாங்கள் மறைந்தாலும் உலகம் உள்ளவரை தங்கள் நாதம் எங்கோ ஓரிடத்தில் ஒலித்துக்கொண்டேதான் இருக்கும் என்பதில் ஐயமில்லை!
சென்று வாருங்கள் சகோதரரே! தங்களின் ஆன்ம இளைப்பாற்றலுக்காக எங்களின் வேண்டுதல்கள்