மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் மோதி இருந்த போட்டியில், ஜெய்ஸ்வால் சதத்தின் உதவியுடன் அபார வெற்றியை ருசித்திருந்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. 180 ரன்கள் வேண்டுமென்ற நிலையில் ஆடியிருந்த ராஜஸ்தான், ஒரு விக்கெட் மட்டுமே இழந்து வெற்றி இலக்கை பிடித்திருந்தது.
ஜெய்ஸ்வால் சதமடித்திருந்த நிலையில், மற்றொரு முக்கியமான சாதனையும் இந்த போட்டியில் அரங்கேறி இருந்தது. ராஜஸ்தான் அணிக்காக சிறப்பாக ஆடி வரும் சாஹல், மிக முக்கியமான சாதனை ஒன்றை படைத்து ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு புதிய சரித்திரத்தையும் எழுதியுள்ளார். பிராவோ, மலிங்கா உள்ளிட்ட பல சிறப்பான பந்து வீச்சாளர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடியிருந்த நிலையில், யாராலும் 200 விக்கெட்டுகளை தொட முடியவில்லை.
அதிகபட்சமாக பிராவோவின் 183 விக்கெட்டுகள் அமைந்திருந்த நிலையில் அதனை எப்போதோ தாண்டி இருந்த சாஹல், மும்பை அணிக்கு எதிரான போட்டியில் தனது 200 வது ஐபிஎல் விக்கெட்டை கைப்பற்றி சாதனை புரிந்திருந்தார். முதல் முறையாக ஐபிஎல் தொடரில் 200 விக்கெட்டுகளை எடுத்த பந்து வீச்சாளர் என்ற பெருமையும் சாஹல் பெற்றிருந்த நிலையில் ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் தனது பந்து வீச்சால் மிக முக்கியமான பங்களிப்பையும் அவர் அளித்து வருகிறார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ஆடிய போது 139 ஐபிஎல் விக்கெட்டுகளைக் கைப்பற்றி இருந்தார் சாஹல். நல்ல பார்மில் அந்த அணியில் இருந்து பந்து வீசி வந்தபோதும் அவர்கள் ஏலத்துக்கு முன்பாக சாஹலை விடுவிக்க அந்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, கடந்த சில சீசன்களாக அவரை மிகச் சிறப்பாக தயார் செய்து வருகிறது.
எப்போதெல்லாம் எதிரணி பேட்ஸ்மேன்கள் ரன் அடித்து விக்கெட் எடுக்க முடியாமல் ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சாளர்கள் சிரமப்படுகிறார்களோ அப்போதெல்லாம் உள்ளே வந்து தனது பங்களிப்பால் விக்கெட் கைப்பற்றும் சாஹல் அந்த அணியின் மிக முக்கியமான துருப்பு சீட்டாகவும் இருந்து வருகிறார். அப்படி இருந்தும் சாஹலுக்கு இதுவரை கிடைக்காத ஒரு பாக்கியத்தை பற்றி தற்போது பார்க்கலாம். ஐபிஎல் தொடரில் 200 விக்கெட்டுகளை எடுத்த பந்துவீச்சாளர், இந்திய அணிக்காக டி 20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை எடுத்த பந்துவீச்சாளர் என பல்வேறு பெருமையுடன் விளங்கும் சாஹல், இதுவரை ஒரு டி20 உலக கோப்பை போட்டியில் கூட ஆடியது கிடையாது.
இந்த சீசனில் அவர் இருக்கும் ஃபார்மிற்கு டி 20 உலக கோப்பை போட்டியில் ஆடுவார் என எதிர்பார்க்கப்படும் வேளையில் குல்தீப் யாதவ், அக்சர் படேல் உள்ளிட்ட பல சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பது நிச்சயம் சாஹலுக்கான இடத்தையும் மறுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.