மக்களின் பொழுது போக்கிற்காக நாடகங்கள் மட்டுமே வளர்ந்து வந்த நேரம். அப்போது தான் சினிமா மெல்லத் தலைதூக்கியது. ஆனால் சினிமாவை அதிகம் விரும்பாத மக்கள் மற்றொரு பொழுதுபோக்குச் சாதனமாக விளங்கிய வானொலிப் பெட்டிக்கு அடிமையாகினர். இன்று ஆயிரம் புத்தகங்கள் படிக்கும் போது கிடைக்கும் அறிவை வானொலிப்பெட்டி எளிதாக வளர்த்தது.
அதிலும் குறிப்பாக இலங்கை வானொலி நிலையத்தின் தமிழ் வர்த்தக சேவை ஒலிபரப்பு தமிழ் மக்களை அதற்கு அடிமையாக்கியது என்றே சொல்லலாம். தினசரி தமிழ் வர்த்தக சேவை தொடங்கும் நேரங்களில் வானொலிப்பெட்டி முன் தவம் கிடந்தவர்கள் பல லட்சம் பேர். அவ்வாறு இலங்கை வானொலியில் தமிழ் வர்த்தகப் பிரிவில் ஒருவரது குரலுக்கு தமிழ்நாடே அடிமையாகி இருந்தது. அவர் பெயர்தான் எஸ்.பி.மயில்வாகணன். தனது வசீகரக் குரலாலும் வர்ணணையாலும் தமிழ் 1970-களில் பிறந்தவர்களைக் கட்டிப் போட்டவர்.
ஒரு தலைமுறைக்கு முந்தைய மக்களுக்கு எஸ்.பி மயில்வாகணன் நன்கு பரிச்சயம் ஆனவர். 1954 இல் இலங்கை வானொலியில் பணியாற்றத் துவங்கிய இவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கை வானொலியில் ஆற்றிய பணிகளும்… நிகழ்த்திய சாதனைகளும் இன்றுவரை எவராலும் நெருங்க முடியாதவை எனலாம்.
இலங்கையில் மட்டுமன்றி தென்னிந்தியாவில் பட்டி தொட்டியெங்கும் இவர் புகழ்… பிரபல சினிமா கதாநாயகர்களுக்கு இணையாகப் பரவியது. இவரை ஒரு முறையாவது நேரில் பார்க்க வேண்டும் என்று அந்தக் காலத்திலே லட்சக்கணக்கான நேயர்கள் துடித்திருக்கிறார்கள்.
பிரபல இசையமைப்பாளர்கள்,பாடகர்கள், பாடகிகள் மட்டுமன்றி அந்தக் காலத்தின் முன்னணிக் கதா நாயகர்கள் பலரும் எஸ்.பி.மயில்வாகனனின் தீவிர ரசிகர்களாக இருந்தார்கள் என்பதை பழைய பத்திரிகைச் செய்திகளின் மூலம் அறிந்து வியக்க முடிகிறது. 1950 களிலும்…1960 களிலும் இவரது அறிவிப்பினால் அடையாளம் காட்டப்பட்டு புகழ் பெற்ற பாடல்கள் அதிகம்.பாடகர்கள், இசையமைப்பாளர்கள் அதிகம்.
அறிவிப்பாளராக இவர் திருப்பிப்பார், ஜோடி மாற்றம், இருகுரலிசை, ஒருபடப்பாட்டு போன்ற பல புதிய நிகழ்ச்சிகளை அறிமுகம் செய்தார்.மேலும் தமிழ்த் திரைப்படங்கள் தமிழ்நாட்டில் வெளியாகும்போது தயாரிப்பாளர்கள் அழைப்பின் பேரில் காலை கொழும்பிலிருந்து விமானத்தில் புறப்பட்டு சென்னை வந்து பாட்டுகளைப் பெற்றுக்கொண்டு மாலை மீண்டும் கொழும்பு திரும்புவார். அந்த அளவிற்கு இவர் வானொலி உலகில் கொடிகட்டிப் பறந்திருக்கிறார். இதனால் தான் இவரை ‘வானொலி உலகின் பிதாமகர்‘ என அழைக்கிறார்கள்.