சாதாரணமாக மறைந்த தலைவர்கள், கலைஞர்கள் பெயர்களை அவர்களின் நினைவாக தெருக்களுக்கும், ஊர்களுக்கும், வீதிகளுக்கும் சூட்டுவது வழக்கம். உலகமெங்கிலும் இதுபோன்று எத்தனையோ தலைவர்களுக்கு இதுபோன்று பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது. ஆனால் வாழும் போதே இப்படி பெருமைக்குச் சொந்தக்காரராக விளங்கி தமிழனுக்குப் பெருமை தேடிக் கொடுத்திருக்கிறார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.
ஏற்கனவே சினிமா உலகின் உயரிய விருதான ஆஸ்கர் விருதை தட்டிச் சென்று எல்லாப்புகழும் இறைவனுக்கே என எளிமையாக சொல்லி மெய்சிலிர்க்க வைத்தவர் சப்தமில்லாமல் அடுத்து ஒரு பெருமையையும் தேடிக் கொடுத்திருக்கிறார். அதுவும் கனடா நாட்டில்.
ஆஸ்கர் நாயகன், கிராமிய நாயகன், உலகம் போற்றும் இசையரசன் என பல்வேறு பட்டங்களை வாங்கியுள்ள இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மற்றுமொரு மணிமகுடமாய் கனடா நாட்டில் மார்கம் நகரில் உள்ள ஒரு தெருவுக்கு அவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. கடந்த 2022-ல் இந்த இந்த நிகழ்வானது நடந்துள்ளது. ஏற்கனவே 2013-ல் இதுபோன்று ஒரு தெருவிற்கு அவர் பெயர் சூட்டப்பட்டிருந்தது. தமிழ்நாட்டில் எத்தனையோ ஆங்கிலேயர்களின் பெயர்கள் சாலைகளுக்கு இருப்பது போல் முதன்முதலாக ஒரு தமிழனின் பெயர் கனடா நாட்டில் உள்ள ஒரு சாலைக்குச் சூட்டப்பட்டிருப்பது தமிழர்களுக்கு பெருமை தேடித்தரும் நிகழ்வுகளில் ஒன்று.
மகாத்மா காந்திக்கு உலகமெங்கிலும் இதுபோன்று சிலைகள், வீதிகளின் பெயர்கள் இருந்தாலும் ஒரு தமிழனுக்கு கிடைத்த அங்கீகாரம் இதுவே முதன் முறை. இந்த நிகழ்வு நடைபெற்ற போது ஏ.ஆர்.ரஹ்மான் அப்போது பதிவிட்ட வாழ்த்துச் செய்தி இது,
நான் எனது வாழ்வில் இது போன்ற ஒரு நிகழ்வை கனவில் கூட கண்டதில்லை. கனடா நாட்டின் மார்கம் மேயருக்கும், மக்களுக்கும் நான் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். ஏ.ஆர்.ரகுமான் என்னும் பெயர் எனக்கு மட்டும் சொந்தமானது அல்ல. அந்த பெயரின் முழு அர்த்தம், அமைதி, வளம் (செல்வாக்கு, செல்வம், உயர்நிலை), மகிழ்ச்சி. இது கனடாவில் வாழும் அனைத்து மக்களுக்கும் கிடைத்து மகிழ்ச்சியோடு வாழ இறைவன் அருள்புரிவானாக!
ஹீரோவை விட அதிக சம்பளம் பெற்ற இசையமைப்பாளர்.. எவ்வளவு சம்பளம் தெரியுமா?
இந்த நேரத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் என் மீது வைத்திருக்கும் அன்பு மிகப்பெரியது. புதுவிதமாக யோசிக்கும் அனைத்து மக்களுக்கும், என்னுடன் பணிபுரிந்த சக ஊழியர்களுக்கும், 100 வருட சினி உலகில் சினிமாவின் வளர்ச்சிக்கு பாடுபட்ட அனைத்து லெஜண்ட்களுக்கும் நன்றி. நான் மிகப்பெரும் கடலில் ஒரு சிறு துளி.
இதன்மூலம் என் பணி இன்னும் அதிகமாகி இருக்கிறது. எனக்கு ஓய்வு என்பதே கிடையாது. என்னுடைய பொறுப்பு இன்னும் அதிகரித்திருக்கிறது. ஒருவேளை எனக்கு ஓய்வு தேவைப்பட்டாலும், நான் மக்களுக்கான சேவை செய்ய இது எனக்கு தூண்டுகோலாய் நினைவுப்படுத்திக் கொண்டே இருக்கும். என்று அந்தப் பதிவில் கூறிவிட்டு இறுதியாக தனது ஸ்டைலில் எல்லா புகழும் இறைவனுக்கே என்று தெரிவித்துள்ளார்.