விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் நேற்றைய 9வது நாளில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தற்போது பார்ப்போம்.பிக் பாஸ் வீட்டில் 9வது நாள் நிகழ்வுகளில் சமையல் மேசை போராட்டம், மாஸ்க் டாஸ்க்கில் நிகழ்ந்த அடிதடி, மற்றும் சிலரின் உறவுகளில் ஏற்பட்ட குழப்பங்கள் என பரபரப்பாக அமைந்தது.
9வது தினத்தின் ஆரம்பமே ஒரு சின்ன கப்பு உடைந்த விவகாரத்தில் தொடங்கியது. பிரவீணும், துஷாரும் உடைந்துபோன கோப்பையை கேமராவிடம் காட்டினர். பிரவீண் நேரடியாக யாரையும் குற்றம் சொல்லாத நிலையில், துஷார், பாரு மீது தனக்கு சந்தேகம் இருப்பதாக வெளிப்படையாகவே கூறினார். பாருவிடம் கேட்டபோது அவர் மறுத்தாலும், அவரது பதில்கள் ஒருவித சந்தேகத்தை ஏற்படுத்துவது போலவே இருந்தன.
இதன் தொடர்ச்சியாக, பாரு கிச்சன் டேபிள் டாப் மீது ஏறி அமர்ந்தார். இது சுகாதாரமற்றது என்று ஹவுஸ்மேட்ஸ்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். துஷார் ஒரு கேப்டனாக, “அக்கா, இறங்கிடுங்க, இங்க உட்காராதீங்க” என்று பலமுறை பாருவிடம் பணிவாக கேட்டுக்கொள்கிறார். கனி இந்த விவகாரத்தில் தலையிட்டு, முக்கியமான மூன்று விஷயங்களைப் பேசினார். வீட்டில் 20 பேர் விதிகளை பின்பற்றி வாழும்போது, பாரு மட்டும் எல்லா விதிகளையும் மீறுவது தவறு. கேப்டன் சொல்வதை கேட்டுத்தான் ஆக வேண்டும் என்று பிக் பாஸ் விதிகளிலேயே உள்ளது. “முட்டாள் மாதிரி நடந்து கொள்ள கூடாது என்று பாருவை மறைமுகமாக சாடினார்.
இதையடுத்து, பாரு தொடர்ந்து மேஜையில் அமர்ந்ததால், “அவர் மன்னிப்புக் கேட்கும் வரை சமைக்க மாட்டோம்” என்று ஹவுஸ்மேட்ஸ்கள் அனைவரும் ஸ்ட்ரைக் செய்தனர். பாருவின் இந்த நடவடிக்கைக்கு ஹவுஸ்மேட்ஸ்களுக்கு இடையே எதிர்ப்பு வந்தாலும், வெளியில் இருக்கும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாகவே அவர் நடந்துகொண்டார். பாருவுக்கு நெருக்கமான ஒரு டீம் அமைக்கப்பட்ட சுபிக்ஷா, வியானா வந்து சமாதானம் பேசிய பின்னரே, பாரு மேசையிலிருந்து இறங்கினார்.
பாரு மன்னிப்புக் கேட்பதற்கு முன், கமருதீன் பாருவிடம் சென்று, “இது தப்பா போகும். மக்கள் உன் பக்கமே இருக்கிற மாதிரி பேசு” என்று ரகசியமாக சொன்னார். உடனே திவாகர், “நொட்டால் மாதிரி ஏன் பண்ற? நீ அட்வைஸ் பண்றதுக்கு வந்தியா, ஏத்தி விடுறதுக்கு வந்தியா?” என்று கமருதீனை எதிர்த்து பேசினார். கடைசியில், அப்சரா உட்பட அனைவரும் விதியை மீறியதற்காக பாரு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தவே, வேறு வழியின்றி பாரு சாரி கேட்டுவிட்டு சென்றார்.
சண்டை முடிந்து சமாதானமாகிய பின், பாரு, “எனக்கு நூடுல்ஸ் பண்ணி கொடு. நீதான் எனக்கு பண்ணணும்” என்று சபரியிடம் கேட்க, சபரியும், “வெயிட் பண்ணு, நான் மேக் பண்ணி தரேன்” என்று கூறினார். சண்டையிட்டவர் நூடுல்ஸ் கேட்டு கொஞ்சியது ஒரு நகைச்சுவையான திருப்பமாக இருந்தது.
அடுத்ததாக வந்த ‘மாஸ்க் டாஸ்க்’ நேற்றைய எபிசோடை பரபரப்புக்கு உள்ளாக்கியது. பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ் வெற்றி பெற்றால், ஹவுஸ்மேட்ஸில் ஒருவருக்கு நாமினேஷன் ஃப்ரீ பாஸ் கிடைக்கும். சூப்பர் டீலக்ஸ் ஹவுஸ்மேட்ஸ் வெற்றி பெற்றால், அவர்களுக்கு ரேஷன் பொருட்களில் 50% சலுகைக்கு மேல் கூடுதல் சலுகைகள் கிடைக்கும்.
இதையடுத்து கனி, “எப்படியும் நாம்தான் ஜெயிக்க வேண்டும். நமக்கு ஃப்ரீ பாஸ் வேண்டும். பார்வதி என் கைக்குக் கிடைத்தால் விட மாட்டேன்” என்று வெளிப்படையாகவே பேசினார். சூப்பர் டீலக்ஸ் டீமில் இருந்த சுபிக்ஷா, “நானும், அரோராவும் ஸ்ட்ராங்கான பிளேயர்கள். வியானா போன்றோரை எதிரணி கடைசி வரை கொண்டுவர முயற்சி செய்வார்கள்” என்று கூறி, சபரியிடம் விளையாட அறிவுறுத்தினார்.
முதல் சுற்றிலேயே கடுமையான தள்ளுமுள்ளு மற்றும் அடிதடி நடந்தது. பாரு உணர்ச்சிவசப்பட்டு, எதிரணி போட்டியாளரை வன்மையாக தள்ளிவிட்டார். பாரு, தன்னை எல்லாரும் அடிப்பதாக ‘உமன் கார்டு’ பயன்படுத்தியதாக விவாதங்கள் எழுந்தன. ஆனால், இவரே மற்றவர்களைத் தள்ளியதும் நடந்தது. டாஸ்க்கின்போது, எஃப்.ஜே. ஒரு ஓரத்தில் யாரோ ஒரு போட்டியாளர் தனது காலை எடுத்து எடுப்புடன் ஆடிக்கொண்டிருந்தபோது, அவரது கைகளுக்கு நடுவே தன் கையை விட்டு அவரை இடித்துவிட்டார். கடைசியாக அடிதடி மற்றும் விதிகள் மீறல் காரணமாக பிக் பாஸ் முதல் சுற்றை ரத்து செய்தார்.
இந்த நிலையில் தான் ஆதிரை தனக்கு இட்லியே பிடிக்காது, தோசை சாப்பிட்டா என்ன? என கேள்வி எழுப்பியது நேற்றைய எபிசோடின் மிக முக்கிய மற்றும் சர்ச்சைக்குரிய விவாதம் இதுதான்.
ஆதிரை, துஷாரிடம் எஃப்.ஜே.வை பார்த்தால் தனக்கு ஒருவிதமான ‘மூட்’ ஏற்படுவதாக கூறினார். உடனே துஷார் அதிர்ச்சி அடைந்து “வெளியில் ஒரு லவ்வர் இருக்கிறதா சொன்னியே, என்னம்மா இந்த கதை?” என்று துஷார் கேள்வி எழுப்ப அதற்கு ஆதிரை “பிடிச்ச ஓட்டலை, எப்போது இட்லி மட்டுமே சாப்பிட்டுட்டு இருக்க முடியுமா? ஏன் தோசை சாப்பிட்டா என்ன? பொங்கல் சாப்பிட்டா என்ன?” என்று தன் உறவு நிலையை உணவுடன் ஒப்பிட்டுப் பேசினார். “லவ் வேற ஒருத்தரை பண்றா என்பதற்காக, வேற யாரையுமே பார்க்கக் கூடாதா?” என்றும் ஆதிரை புரட்சிகரமாக கேள்வியெழுப்பினார்.
அதையடுத்து கலை சமையல் வேலைகளை தான் அதிகமாக செய்வதாகவும், ஆனால் சபரி, தன்னை திட்டுவதாகவும், கிரெடிட்டே கொடுப்பதில்லை என்றும் குறை கூறினார். சபரி மட்டும் சமைத்துவிட்டு ‘விசில்’ அடித்து மகிழ்வதாகவும் குற்றம் சாட்டினார். அதேபோல் கனி, சாப்பாட்டில் அதிக உப்பு போட்டு வீணடித்தது மிகவும் தவறான செயல் என்றும், இது ரேஷன் குறைவாக கிடைக்கும்போது பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என்றும் விமர்சிக்கப்பட்டது.
மொத்தத்தில் 9வது நாள் எபிசோடில் போட்டியாளர்களின் குணாதிசயங்களையும், அவர்கள் ‘கண்டென்ட்’ உருவாக்குவதற்காக செய்யும் முயற்சிகளையும் வெளிப்படுத்தியது. பாருவின் ஸ்ட்ரைக், கேமராவுக்கான கவன ஈர்ப்பு நாடகமாக பார்க்கப்பட்டாலும், மாஸ்க் டாஸ்க்கில் நடந்த உடல் ரீதியான வன்முறை கண்டனத்துக்குரியது. ஆதிரையின் வெளிப்படையான காதல் குழப்பங்கள், பிக் பாஸ் வீட்டில் உறவுகள் எந்த அளவுக்குச் சீக்கிரம் மாறக்கூடும் என்பதை காட்டுவதாக உள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
