விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் நேற்றைய 12வது நாளில் நடந்த சுவாரஸ்யமான, கோமாளித்தனமான சில நிகழ்வுகளை பார்ப்போம்,
12வது நாள் எபிசோடின் முக்கிய நிகழ்வு, தலைவர் பதவிக்குரிய போட்டியாளர்களை தேர்ந்தெடுப்பதாகும். ‘சிறப்பாகச் செயல்பட்டவர்’ மற்றும் ‘மோசமாகச் செயல்பட்டவர்’ என்று போட்டியாளர்கள் இருவரையும் தேர்வு செய்ய பிக் பாஸ் கேட்டிருந்தார். ஏற்கனவே கமர்தீன் வாரத்தின் சிறந்த போட்டியாளராக தேர்வானதால், அவர் தலைவர் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மீதமுள்ள இரண்டு இடங்களுக்கு போட்டியாளர்கள் வாக்களித்தனர்.
ஒருவர் கனி, இவர் சமையல் குழுவில் இருந்தவர், அடுத்த குழுவிற்கு மாறியபின் சண்டை உட்பட அனைத்து விஷயங்களிலும் சிறப்பாக பங்கேற்றார். இரண்டாவது சபரி, இவர் ஆல்-ரவுண்டராக இருந்து, விளையாட்டுகள் மற்றும் வீட்டு வேலைகள் என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டார். இறுதியில், அதிக வாக்குகளை பெற்று கமர்தீன், கனி, சபரி ஆகிய மூவரும் தலைவர் பதவிக்கான டாஸ்க்கில் போட்டியிட தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஒவ்வொரு சீசனிலும் குரூப்பிஸம் இருந்து வரும் நிலையில் இந்த சீசனிலும் வீட்டிற்குள் குழு அரசியல் ஆதிக்கம் செலுத்துவதாக பல போட்டியாளர்கள் குற்றம் சாட்டினர். கெமி, அரோரா சின்லரை மோசமாக செயல்பட்டவர் பட்டியலில் குறிப்பிட்டார். “அரோரா பார்ப்பதற்கு மிகவும் கியூட்டாக இருக்கிறார் என்பதால், அந்த சலுகையை பயன்படுத்தி அவர் வேலை செய்யாமல் அனைவரையும் வேலை வாங்குகிறார்” என்று நேரடியாக கெமி குற்றம் சாட்டினார்.
FJ-ஐ பல போட்டியாளர்கள் விமர்சித்த நிலையில், ஆதிரை மட்டும் FJ-க்கு ஆதரவாக பேசினார். FJ-ன் பொறுமை அவருக்கு கேப்டன் பொறுப்பை ஏற்க ஒரு தகுதியாக இருக்கும் என்று ஆதிரை கூறி, அவரை சிறந்தவராக முன்மொழிந்தார். ஆனால், FJ-ன் பலவீனமே அவரது உணர்ச்சிவசப்படும் தன்மை என்று குறிப்பிட்டு, ஆதிரை தனது தனிப்பட்ட பந்தத்தை வெளிப்படுத்தினார்.
விக்ரம், FJ-ஐ விமர்சிக்கும்போது, “ஆம்பளையா இருந்தா போட்டோவை நீங்களே எடுங்கடா!” என்று கேப்டன்ஷிப் டாஸ்க்கில் FJ ஆடிய தந்திரத்தை மறைமுகமாக குத்திக் காட்டினார். FJ, தனது குழுவின் வெற்றிக்காக விதிகளை மீற தயாராக இருந்தார்.
திவாகர் தன்னை ஒரு ‘மருத்துவ நிபுணர்’ என்றும், எல்லாவற்றையும் உளவியல் ரீதியாக அணுகுபவர் என்றும் பெருமையாக பேசிக்கொண்டிருந்தபோது, வினோத் அவரை பற்றிய ஒரு பாடலை பாடி, திவாகரின் நடிப்பு வெளிப்பட்டுவிட்டதாக பேசினார். வினோத்தின் இந்த செயல் திவாகரை கோபப்படுத்தியதுடன், அவர் கேமரா முன்பு சென்று உணர்ச்சிவசப்பட்டு பேசியதையும் காண முடிந்தது.
ரம்யாவுக்கும் திவாகருக்கும் இடையே மோதல் நீடித்தது. திவாகர், ரம்யா மற்றும் பெண் போட்டியாளர்களை பற்றி வார்த்தைகளைக் கவனமாக கையாளவில்லை என்றும், ‘ஆணவமும் ஏற்றத்தாழ்வுக்கான விஷமத்தனமும்’ அவரிடம் இருப்பதாக ரம்யா குற்றம் சாட்டினார். தலைவர் டாஸ்க்கின்போது கூட, காதல் பாடல் மூலம் ஜாதி குறித்த சில கருத்துகளை திவாகர் மறைமுகமாக குறிப்பிட்டுப் பேசியது, வினோத் போன்ற சில போட்டியாளர்களால் எதிர்க்கப்பட்டது.
அதிகப்படியான வாக்குகளின் அடிப்படையில், அரோரா, வியன்னா, ஆதிரை ஆகிய மூவரும் மோசமாக செயல்பட்டவர்கள் பட்டியலில் தேர்வானார்கள். அரோரா, வியன்னா, ஆதிரை ஆகிய மூவரும் கூண்டோடு சிறை தண்டனைக்கு அனுப்பப்பட்டனர். இந்த போட்டியாளர்கள் விளையாட்டில் சரியாக பங்களிக்கவில்லை என்றும், குழுவின் நலனை பற்றி யோசிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டது.
கேப்டன் டாஸ்க்கின்போது, தானே சமைத்து சாப்பிட போவதாகவும், மற்றவர்களிடம் சமைக்க சொல்ல மாட்டேன் என்றும் வியன்னா, அடம் பிடித்தது, ‘குழுவாகச் செயல்படவில்லை’ என்ற விமர்சனத்திற்கு உள்ளானது. அரோரா, ஆதிரை ஆகிய இருவரும் தங்கள் தனிப்பட்ட நட்பை முன்னிறுத்தி, வீட்டு வேலைகள் மற்றும் குழு பணிகளில் இருந்து விலகி இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டனர்.
மொத்தத்தில் 12ஆம் தனிப்பட்ட உறவுகள் மற்றும் குழு அரசியலின் ஆதிக்கம் குறித்து பேசிய ஒரு நாளாக அமைந்தது. தலைவர் போட்டியில் வெல்ல போவது யார் என்பதை பொறுத்து, அடுத்த வாரத்திற்கான அரசியல் களம் மாறும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
