Bigg Boss 9 Tamil Issue : தமிழில் மட்டும் இல்லாமல் எந்த ஒரு மொழியிலும் பிக் பாஸ் சீசன் தொடர்பான அறிவிப்பு வந்துவிட்டால் அதன் ரசிகர்கள் உற்சாகமாக தொடங்கி விடுவார்கள். ஹிந்தி மட்டுமில்லாமல் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் பிக் பாஸ் சீசன் பெரும் வெற்றி பெற்று வரும் நிலையில் தொடர்ச்சியாக அடுத்தடுத்த சீசன்களும் தயாராகி வருகிறது.
அந்த வகையில் தமிழில் ஒன்பதாவது பிக் பாஸ் சீசன் கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஆரம்பமானது. முதலில் இருந்த பிக் பாஸ் சீசன்களை போல அடுத்தடுத்த சீசன்கள் அமையவில்லை என்பது ஒரு குறையாக தெரிந்தாலும், கடந்த 3 சீசன்களில் போட்டியாளர்கள் மிக அசத்தலாக இருந்ததாக கருத்துக்கள் இருந்து வந்தது. அதேபோல கமல் இடத்தை நடிகர் விஜய் சேதுபதி தொகுப்பாளராக நிரப்பியதும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்றிருந்த சூழலில் இந்த சீசன் தொடர்பான அறிவிப்பு வந்த போது எதிர்பார்ப்பும் உச்சக்கட்டத்தில் இருந்தது.
ஆரம்பமே சரியில்ல..
ஆனால் போட்டியாளர்கள் பற்றிய அறிவிப்பு வந்ததும் பார்வையாளர்கள் அனைவரது மூஞ்சியும் கலங்கி போனது என்று தான் சொல்ல வேண்டும். இந்த காலத்து தலைமுறைக்கு ஏற்ற வகையில் சமூகவலைத்தளங்களில் பிரபலமாக இருக்கும் பலரையே பிக் பாஸ் போட்டியாளர்களாக தேர்வு செய்தது தான் அதற்கு காரணம்.
பிக் பாஸ் சீசன் ஆரம்பமாகி முதல் வாரத்தில் ஆதிரை, சபரிநாதன், விக்கல்ஸ் விக்ரம் உள்ளிட்ட ஒரு சிலர் நல்ல பெயரை எடுத்திருந்தனர். பெரும்பாலான போட்டியாளர்கள் எதற்காக பிக் பாஸ் வீட்டிற்கு வந்தோம் என்பதே தெரியாமல் வலம் வந்த நிலையில் ஆதிரை இறுதி வரைக்கும் வருவார் என எதிர்பார்த்த சூழலில் அவர் FJ உடன் சேர்ந்து காதல் டிராக்கில் செல்வது பின்னடைவாக மாறும் என தெரிகிறது.
தகாத வார்த்தைகளும், முகம் சுளிக்கும் ரசிகர்களும்..
இன்னொரு புறம் அரோரா மற்றும் துஷார் ஆகியோரின் காதல் டிராக், எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு அதிகம் பேர் 18 பிளஸ் கண்டன்ட்களையும் பேசி வருவது உள்ளிட்டவை நிச்சயம் பார்வையாளர்களை வெறுப்படைய வைக்கும் ஒரு செயல் தான். எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த முறை அதிகமாக தகாத வார்த்தைகளை பல போட்டியாளர்கள் பேசி வருகின்றனர். அது மட்டுமில்லாமல் காதல் என்பதை தாண்டி இன்னும் தவறாக சில விஷயங்களில் ஈடுபடுவதும் குழந்தைகள் பலர் பார்க்கும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு நிச்சயம் ஒரு பெரிய பின்னடைவு தான்.
சண்டை, சச்சரவு அல்லது வேடிக்கையான விஷயங்கள் கூட நாடகத் தன்மை நிறைந்திருப்பது போல பலருக்கும் தோன்றுகிறது. இந்த சீசனில் உள்ள போட்டியாளர்கள் ஒட்டுமொத்தமாக உண்மைத்தன்மை இல்லாதது போல தெரியவே யார் உண்மையாக ஆடுகிறார்கள்? யார் நாடகம் ஆடுகிறார்கள்? என்பதே தெரியாத ஒரு குழப்பமான சூழலும் இருப்பது நிச்சயம் இந்த பிக் பாஸ் சீசனின் தோல்விக்கான வழியாக இருக்கும் என கருதப்படுகிறது.
ஒன்பதாவது பிக்பாஸ் சீசனை எதிர்பார்த்திருந்த பலரும் ஏமாற்றம் அடைந்திருக்கும் சூழலில் இனிவரும் நாட்களிலாவது போட்டியாளர்கள் தங்கள் உள்ளே எதற்கு வந்தோம் என்பதை தெரிந்து செயல்பட வேண்டும் என்பதும் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது.
நான் கடந்த 7 ஆண்டுகளாக பல வலைத்தளங்களில் கிரிக்கெட், சினிமா தொடர்பான செய்திகளை சுவாரஸ்யம் குறையாமல் வாசகர்கள் விரும்பும் வகையில் எழுதி வருகிறேன். இணையத்தில் இன்று ஏராளமான செய்திகள் சரியான விவரங்கள் இல்லாமல் வெளியாகி வரும் சூழலில் முடிந்த அளவுக்கு சிறந்த செய்திகளை கொடுப்பதற்கு நான் முன்னுரிமை கொடுத்து எழுதி வருகிறேன்.

