வடிவுக்கரசியை வேண்டாம் என சொல்லிய பாரதிராஜா… கண்டபடி திட்டி படப்பிடிப்பில் இருந்து வெளியேறிய வடிவுக்கரசி

By John A

Published:

தமிழ் சினிமாவில் 90-களில் அம்மா வேடங்களில் நடித்தும், பல படங்களில் வில்லியாகவும், கொடுமைப் படுத்தும் கதாபாத்திரங்களிலும் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் வடிவுக்கரசி. பாரதிராஜா இயக்கிய சிகப்பு ரோஜாக்கள் படத்தில் அறிமுகமானவர், பின் கன்னிப் பருவத்திலே திரைப்படத்தில் நடிகர் ராஜேஷ் உடன் முதன் முதலில் ஹீரோயினாக நடித்தார். அதன்பின் குணச்சித்தர வேடங்களில் அதிகம் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்.

முதல் மரியாதை படத்தில் சிவாஜியின் மனைவியாக அவரை திட்டிக் கொண்டே நடிக்கும் கதாபாத்திரத்தில் அச்சு அசல் கிராமத்து மனைவியை கண் முன் கொண்டுவந்து நிறுத்தினார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தொடர்ந்து சினிமாவில் பயணித்து வருகிறார். தற்போது சின்னத்திரையிலும் மும்முரமாக  நடித்து வருகிறார் வடிவுக்கரசி.

இந்நிலையில் பாரதிராஜாவின் இயக்கத்தில் அண்ணன்-தங்கை பாசத்தை கொட்டி எடுக்கப்பட்ட படம் தான் கிழக்குச் சீமையிலே. பாசமலர், முள்ளும் மலரும் படத்திற்கு அடுத்த படியாக இந்தப் படம் ரசிகர்களைக் கவர்ந்தது. அதுவரை மேற்கத்திய இசையில் கலக்கிக் கொண்டிருந்த ஏ.ஆர். ரஹ்மான் முதன் முதலாக பாரதிராஜாவுடன் கைகோர்த்து கிராமிய இசையும் தனக்கு அத்துப்படி என ஹிட் பாடல்களைக் கொடுத்தார்.

இப்படத்தில் வடிவுக்கரசி முதலில் விஜயக்குமாருக்கு மனைவியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஷூட்டிங்கும் தயாரானது. ஒருமுறை வடிவுக்கரசி தனது பிறந்த நாளன்று கிழக்குச் சீமையிலே ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு வந்திருக்கிறார். அப்போது அவரை அழைத்த பாரதிராஜா இந்தப் படத்தில் நீ இல்லை. விஜயக்குமாருக்கு ஜோடியே வேண்டாம். அவ்வாறு இருந்தால் அது படத்தின் எமோஷனலைக் குறைக்கும். எனவே நாம் அடுத்த வேறொரு படத்தில் இணையலாம் என்றிருக்கிறார்.

எம்.ஜி.ஆருக்கு அப்படியே ஒன்றி பலித்த வாலியின் வரிகள்.. இருந்தும் ஒன்று மட்டும் பலிக்காமல் போன பாடல்

பிறந்த நாளன்று இயக்குநர் இப்படிச் சொல்லி விட்டாரே என கோபத்தின் உச்சிக்குச் சென்ற வடிவுக்கரசி பாரதிராஜாவிடம், எனக்குப் பதில் இந்தப் படத்துல வேற எவளைப் போடப் போறீங்க என்று கோபத்துடன் கேட்க, அருகிலிருந்த உதவிஇயக்குநர்கள் உள்ளிட்ட அனைவரும் ஆடிப் போயிருக்கின்றனர்.

பாரதிராஜாவோ இந்தப் படத்தில் வேறு யாரையும் போடவில்லை. அப்படி நான் செய்வதாக இருந்தால் என்னை செருப்பால் அடி என்று தன் செருப்பினை எடுத்திருக்கிறார். கோபம் தனியாத வடிவுக்கரசி பாரதிராஜாவிடம் கோபித்துக் கொண்டு ரயிலேறி மீண்டும் சென்னை வந்து விட்டாராம். அவ்வாறு வந்த இரண்டு நாட்களில் மீண்டும் அவருக்கு சூப்பர் ஸ்டாருக்கு அம்மாவாக நடிக்க வீரா படத்தில் வாய்ப்பு வந்ததாம். எனவே ஒன்று போனால் நமக்கு மற்றொன்று கிடைக்கும் என இதன் மூலம் அவர் நம்பினாராம். இந்தத் தகவலை பேட்டி ஒன்றில் வடிவுக்கரசி பகிர்ந்திருக்கிறார்.