அப்பாயின்மெண்ட் இல்லாமல் என்னை ஏன் பார்க்க வந்த.. திட்டிய கே பாலசந்தர்.. சில வருடங்களில் அப்பாயிமெண்ட் கொடுத்து அவரே வர சொன்னார்.. கவிதாலாயா நிறுவனத்திற்கு இயக்கிய சாமி படம்.. ரம்யா கிருஷ்ணனின் சாமியாட்டம்.. வெற்றி பெற்றதா?

பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் பாரதி கண்ணன், தான் சினிமாவின் ஜாம்பவான் என்று போற்றப்படும் அமரர் கே. பாலசந்தரை சந்தித்தபோது நடந்த சுவாரசியமான தருணங்களை சமீபத்தில் அளித்த பேட்டியில் பகிர்ந்து கொண்டார். நடிப்பதற்கு சான்ஸ்…

k balachandar

பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் பாரதி கண்ணன், தான் சினிமாவின் ஜாம்பவான் என்று போற்றப்படும் அமரர் கே. பாலசந்தரை சந்தித்தபோது நடந்த சுவாரசியமான தருணங்களை சமீபத்தில் அளித்த பேட்டியில் பகிர்ந்து கொண்டார். நடிப்பதற்கு சான்ஸ் கேட்டு சென்ற இடத்தில் நிராகரிப்பட்டவர், பிற்காலத்தில் அவரே பாலசந்தரின் தயாரிப்பு நிறுவனத்துக்கு படம் இயக்கும் வாய்ப்பை பெற்ற அனுபவம் இது.

சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற கனவுடன் பாரதி கண்ணன், ஒருநாள் கே. பாலசந்தர் சாரின் வீட்டுக்கே சென்றுவிட்டார். அவர் வீட்டு படிகளில் ஏறிக்கொண்டிருந்தபோது, பாரதி கண்ணன் அவரை அணுகி, “சார் வணக்கம் சார்” என்றார். பாலசந்தர் சட்டென்று திரும்பிப் பார்த்தார். “யார் நீங்கள்?” என்று கேட்டபோது, “சார், நடிக்க வாய்ப்புக் கேட்பதற்காக வந்திருக்கிறேன்” என்று கூறினார் பாரதி கண்ணன். கே.பி. சார் அதற்கு “என்னுடைய அப்பாயின்ட்மென்ட் நீங்கள் வாங்கினீர்களா? என்னுடைய அப்பாயின்ட்மென்ட் வாங்காமல் என்னை பார்க்க வந்ததே நீங்கள் செய்த பெரிய தவறு. அதனால், நான் உங்களை அனுமதிக்க மாட்டேன். போங்கள்!” என்று கூறிவிட்டார்.

காலங்கள் உருண்டோடின. பாரதி கண்ணன் ‘அரிவா வேலு’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராகி, ‘கண்ணாத்தாள்’ என்ற ஹிட் படத்தை இயக்கி முடித்திருந்தார்.

அப்போது, கே.பி. சாரின் மகள், பாரதி கண்ணன் இயக்கிய படத்தை பற்றி ராமநாராயணனுடன் பேசிக்கொண்டிருக்கையில், “இந்த பாரதி கண்ணன் என்பவரது ‘கண்ணாத்தாள்’ படம் ரொம்ப நல்லா இருக்கு. அவரை ஒரு படம் இயக்க கூப்பிடலாமே” என்று விவாதித்துள்ளார். உடனே, கே.பி. சாரின் அலுவலகத்திலிருந்து பாரதி கண்ணனுக்கு அழைப்பு வந்தது.

“மேடம், நான் கதை சொல்ல வேண்டுமா?” என்று கேட்டபோது, “ஆமாம், எங்க அப்பாவிடம் நீங்கள் கதை சொல்ல வேண்டும்” என்ற போது, ‘பாலசந்தர் சார் பெரிய வெற்றி படங்கள் கொடுத்தவர், அவள் ஒரு தொடர்கதை, நிழல் நிஜமாகிறது போன்ற சமூக படங்களை எடுத்த அவரிடம் போய் சாமி படத்தின் கதையை நான் எப்படி சொல்வது?” என்று தயங்கினார்.

sri rajarajeswari

ஆனால், “கவலையே படாதீர்கள். அப்பா A to Z புரிந்துகொள்வார். நீங்கள் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அலுவலகத்திற்கு வந்துவிடுங்கள்” என்று நம்பிக்கையூட்டினார்.

சரியாக 9:50 மணிக்கு அலுவலகம் சென்ற பாரதி கண்ணன், கே.பி. சாரின் வருகைக்காக காத்திருந்தார். அவர் வெள்ளை ஆடையில், வெள்ளை ஷூவுடன் மிகவும் கம்பீரமாக உள்ளே நுழைந்தார். வந்தவுடனே “பாரதி கண்ணன் யார்?” என்று அவர் கேட்டதும், “சார், நான்தான்” என்றார் பாரதி கண்ணன். “உங்களுக்குத்தானே இன்று அப்பாயின்ட்மென்ட்? உள்ளே வாருங்கள். எனக்கு ஒரு 15 நிமிடங்கள் கதை சொன்னால் போதும்” என்றார் கே.பி. சார்.

பாரதி கண்ணன் கதையை சொல்ல ஆரம்பித்தபோது, பாடல்களையும் சேர்த்து பாடி சொல்ல ஆரம்பித்தார். கே.பி. சார் ஆச்சரியத்துடன், “என்னது? இவன் ரெக்கார்ட் பண்ணாத பாட்டை இப்படி பாடுறானே” என்று பார்த்துக்கொண்டே இருந்தார். 15 நிமிடங்களுக்கு பதில், கதை சொல்ல ஆரம்பித்து இடைவேளை வரும்போதே ஒரு மணி நேரம் ஆகிவிட்டது. கே.பி. சார் உற்சாகத்துடன், “சரி, பேலன்ஸையும் சொல்லிவிடுங்கள்” என்றார். இரண்டாம் பாதியும் சேர்ந்து மொத்தம் இரண்டு மணி நேரம் கதை சொல்லி முடித்துவிட்டார்.

கதை முழுவதும் கேட்ட கே.பி. சார், அவரை அப்படியே உற்று பார்த்தார். “பரவாயில்லை. சாமி படத்தை கூட இவ்வளவு விறுவிறுப்பாக சொல்கிறீர்கள். நீங்கள் ஒரு நிமிடம் இருங்கள்” என்றுவிட்டு, அவர் மகளிடம் “புஷ்பா! இவரை நீ கதை சொல்ல சொன்னால், இவர் என்னிடம் ஒரு டபுள் பாசிட்டிவ் காமித்துவிட்டார்!” என்று பாராட்டினார். அதாவது, கதை சொன்ன விதமே ஒரு முழுப் படத்தை பார்த்த உணர்வை ஏற்படுத்திவிட்டது என்று புகழ்ந்தார். உடனே கை கொடுத்து பாராட்டி, அவருக்கு பட வாய்ப்பையும் அளித்தார். அந்த படம் தான் ’ஸ்ரீ ராஜராஜேஸ்வரி’. ரம்யா கிருஷ்ணன் சாமி வேடத்தில் ஆடிய ஆட்டம் மிகவும் பிரபலம். ராம்கி, சங்கவி, பானுப்பிரியா, வடிவேலு உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர். இந்த படம் கவிதாலாயா நிறுவனத்திற்கு நல்ல லாபத்தையும் கொடுத்தது.

முதலில், அப்பாயின்ட்மென்ட் இல்லாமல் வந்ததற்கு திட்டிய அதே மேதை, பிறகு அப்பாயின்ட்மென்ட் கொடுத்து வரச்சொல்லி ஒரு படம் இயக்க வாய்ப்பு கொடுத்தது, பாரதி கண்ணன் வாழ்வில் மறக்க முடியாத திருப்புமுனையாக அமைந்தது. ஆனால் பாரதி கண்ணன் கடைசி வரை நீங்கள் என்னை ஒரு காலத்தில் துரத்தி அடீத்தீர்கள் என்று பாலசந்தரிடம் சொல்லவே இல்லை.