ஜி. வி. பிரகாஷ் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர். பல ஹிட்டான பாடல்களைக் கொடுத்துள்ளார். தற்போது தனது நடிப்பு திறமையால் ஒரு நடிகராக வளர்ந்து கொண்டிருக்கிறார். 2015 ஆம் ஆண்டில் டார்லிங் திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமான பின்னர் த்ரிஷா இல்லனா நயன்தாரா, நாச்சியார் , சர்வம் தாள மயம், சிவப்பு மஞ்சள் பச்சை, கடவுள் இருக்கான் குமாரு, பேச்சுலர் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் ஜி.வி. பிரகாஷ் நடித்த ‘ரெபெல்’ திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. அதற்குப் பிறகு பி.வி. ஷங்கர் இயக்கத்தில் ஜி. வி. பிரகாஷ் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் ‘கள்வன்’. இப்படத்தின் கதாநாயகியாக இவானா மற்றும் இயக்குனர் பாரதி ராஜா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரேமண்ட் டெரிக் மற்றும் காஸ்டா படத்தொகுப்பில் இப்படம் வெளியாகவுள்ளது. ஜி. வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் மற்றும் டில்லி பாபு இப்படத்தை தயாரித்துள்ளார்.
‘கள்வன்’ திரைப்படம் வனவிலங்குகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட சமூக அக்கறைக் கொண்டப் படமாகும். முக்கியமாக யானைகள் இப்படத்தில் இடம்பெறுகின்றன. காலநிலை மாற்றத்தால் யானைகள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்லும் அதைச் சுற்றி இப்படத்தின் கதை இருக்கும்.
இதைப் பற்றி இயக்குனர் பி.வி.ஷங்கர் கூறுகையில், ஒரு முக்கியமான காட்சியில் ஆறு முதல் ஏழு யானைகளை வைத்து வி. எப். எக்ஸ் இல்லாமல் உருவாக்கியுள்ளோம். இது போன்ற காட்சிகள் வெளிநாட்டில் தான் படமாக்கப்படுவது வழக்கம். ஆனால் நாங்கள் யானைகளுக்குப் பயிற்சி அளித்து கேரளாவின் பாலக்காட்டில் காட்சிகளை படமாக்கியுள்ளோம். நிச்சயம் பார்வையாளர்களுக்கு இப்படம் பிடிக்கும் என்று கூறினார்.
இப்படத்தின் இயக்குனர் பி.வி. ஷங்கர் பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். அதில் முக்கியமானது ராட்சசன், முண்டாசுப்பட்டி, புரூஸ் லீ , மரகத நாணயம். அதேபோல் இப்படத்திற்கும் அவரே இயக்கி ஒளிப்பதிவும் செய்துள்ளார். கள்வன் திரைப்படத்தை வருகிற ஏப்ரல் 4 ஆம் தேதி வெளியிடப்போவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இவரது ‘ரெபெல்’ திரைப்படம் வருகிற மார்ச் 22 ஆம் தேதி ரிலீஸாகிறது. ஆதலால் தற்போது அடுத்தடுத்து வெளியாக உள்ள ஜி. வி. பிரகாஷின் படங்கள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.