நடிகர் சிவகாத்திகேயன் நடிப்பில் வெளியான அயலான் படம் பல சிக்கல்களை கடந்து திரைக்கு வந்த நிலையில், தற்போது அப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
தயாரிப்பு நிறுவனம் கடன் தொகையை செலுத்தாததால் ‘அயலான்’ படத்தை வெளியிட தடை கோரி டேக் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. கடனை திருப்பக் கொடுக்காததால் அப்படத்தை ரீலிஸ் செய்ய தடை விதித்திருந்தனர். இந்நிலையில் சிவகார்த்திகேயனே களத்தில் இறங்கி பிரச்சனையை தீர்க்க வழி செய்து படத்தை ரீலிஸ் செய்தார்.
தடைகளை தாண்டிய அயலான்:
கே. ஜே. ஆர் தயாரிப்பில், ரவிக்குமார் இயக்கத்தில் ‘அயலான்’ ஒரு அறிவியல் புனைகதை படமாக ஏலியனை மையமாக வைத்து உருவாகியுள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். மேலும் அயலான் படத்தில் ரகுல் ப்ரீத் சிங் , இஷா கோப்பிகர், யோகி பாபு, பானு ப்ரியா, கருணாகரன் மற்றும் பால சரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகி உள்ளது.
அயலான் திரைப்படம் நீண்ட நாட்கள் உழைப்பால் உருவாகி நேற்று திரையரங்குகளில் வெளியானது. முதல் நாளே நல்ல வரவேற்பை பெற்றது. அயலான் படம் எடுத்து முடித்து பல ஆண்டுகள் சென்றாலும் நிதி காரணத்தினாலும், கொரோனா காரணத்தினாலும் இப்படம் திரையரங்குகளில் வெளியாக தாமதமாகிவிட்டது. இப்படத்தில் விஎப்எக்ஸ் காட்சிகள் மட்டும் 4 ஆயிரத்திற்கு மேல் உள்ளது. தமிழ் சினிமாவில் இத்தனை விஎப்எக்ஸ் காட்சிகளுடன் உருவாகி இருக்கும் முதல் திரைப்படம் இதுவாகும்.
முதல் நாள் வசூல்:
நடிகர் தனுஷின் கேப்டன் மில்லருக்குப் போட்டியாக வெளியானது அயலான். இப்படம் ஃபேமிலி ஆடியன்ஸ் கொண்டாடும் படமாக உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அயலான் படத்தை கொண்டாடி வருகின்றனர்.
அயலான் ஐந்து ஆண்டுகள் கழித்து தாமதமாக வெளியானாலும் தமிழ்நாட்டில் 4 முதல் 5 கோடி ரூபாய் வரை முதல் நாள் வசூலை அள்ளியது. ஒட்டுமொத்தமாக உலகளவில் 10 முதல் 12 கோடி வசூலை ஈட்டியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேநேரம் தனுஷின் கேப்டன் மில்லர் படத்துக்கும் ரசிகர்களிடம் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், அயலான் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூலை விட தனுஷின் கேப்டன் மில்லர் முதல் நாள் வசூல் அதிகமாகவே உள்ளது. இந்த பொங்கல் வார முடிவில் யார் முதலிடத்தை பிடிப்பார் என்கிற போட்டியும் நிலவி வருகிறது.